பயோ-டாய்லட்... சென்சார் கதவுகள்... இந்தியாவின் ஹை-டெக் ரயில் தேஜஸ்!

னி படர்ந்த மலைத்தொடருக்கு அருகே அதிவேகத்தில் சீறிப்பாயும் நவீன ரயிலை வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட சினிமா காட்சிகளில் பார்த்திருப்போம். அது போன்ற அதிநவீன வசதிகள் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை இந்தியன் ரயில்வே விரைவில் இயக்க உள்ளது. கடந்த 2016-17 ரயில்வே பட்ஜெட்டில் முன்பதிவு செய்யும் வசதி கொண்ட தேஜஸ் உள்ளிட்ட நான்கு வகை அதிநவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், வருகின்ற ஜூன் மாதத்தில் மும்பை-கோவா இடையே தனது பயணத்தைத் தொடங்க இருக்கிறது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்

இந்திய ரயில் பயணத்தின் எதிர்காலத்தைத் திரையிட்டுக் காண்பிக்கும் என தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறித்து இந்தியன் ரயில்வே தனது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்திருந்தது. மணிக்கு 130 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக பயணிக்கக்கூடிய இந்த ரயிலில், இதுவரை இல்லாத அளவுக்கு எண்ணற்ற அதிநவீன வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

பேலஸ் ஆன் வீல்ஸ், மகாராஜா எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிசி, தி கோல்டன் சேரியாட் போன்ற சொகுசு ரயில்களின் வரிசையில், வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன வசதிகளை வழங்குவதில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலும் இடம்பெறும் என இந்தியன் ரயில்வே நம்பிக்கை தெரிவிக்கிறது.

அதிநவீன வசதிகள் :

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் சென்சார் மூலம் இயங்கும் தானாகத் திறந்து மூடும் கதவுகள் பொறுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தை விட்டு ரயில் புறப்பட்டதும் இந்தக் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும். இதுவரை மெட்ரோ ரயில்களில் மட்டுமே இந்த வசதி இடம்பெற்றிருந்தது. எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பொறுத்தவரையில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் இந்த வசதி முதல்முறையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ரயில் முழுவதிலும் ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களின் மொபைல் மற்றும் லேப்டாப்களை எளிதாக இணையத்தில் கனெக்ட் செய்துகொள்ளும் விதமாக இலவச வைஃபை வசதியும் இடம்பெற உள்ளது.

ஒவ்வொரு இருக்கையின் முன்னும் இயர்போனுடன் கூடிய எல்.சி.டி டிஸ்ப்ளே பொறுத்தப்பட்டிருக்கும். பயணிகளின் பொழுதுபோக்குக்காக இதில் தொலைக்காட்சி மற்றும் வீடியோ பார்த்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் விவரங்களும், பாதுகாப்பு குறித்த வழிமுறைகளும் இந்த எல்.சி.டி டிஸ்ப்ளேயில் இடம்பெறும்.

ரயிலின் இலக்கு, அடுத்து வரவிருக்கும் ரயில் நிலையம் போன்ற விவரங்களைத் தெரிவிக்கும் டிஜிட்டல் போர்டுகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், பயணிகள் முன்பதிவு விவரங்களைத் தெரிவிக்கும் சார்ட்கள் டிஜிட்டல் வடிவத்தில் இடம்பெற உள்ளது. பார்வைத் திறனற்றவர்கள் படிக்க வசதியாக பிரெய்லி டிஸ்ப்ளே வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.

ரயிலின் உட்புறத் தோற்றம்

பிரபல சமையல் கலை வல்லுநர்கள் தயாரிக்கும் சிற்றுண்டிகள் மற்றும் உணவுகள் பயணிகளுக்கு வழங்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்யும் வசதியும், பட்டனை அழுத்தினால் இருக்கைக்கே உதவியாளர் வரும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

குளிர்பானங்கள், காஃபி மற்றும் டீ விற்பனை செய்யும் மெஷின்கள் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும். மேலும், பயணிகள் படிப்பதற்காக நாளிதழ்களும் இடம்பெறும்.

தீ விபத்து போன்ற நேரங்களில் எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்மோக் அலாரம் அனைத்துப் பெட்டிகளிலும் பொறுத்தப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமராக்களும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பொறுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் பயோ-டாய்லட் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்சார் மூலம் இயங்கும் ஆட்டோமேட்டட் டேப்கள் மற்றும் நீரின் அளவைக் காட்டும் டிஸ்ப்ளே போன்ற அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் அனைத்துப் பாகங்களும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்த்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் கட்டணமானது,  சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை விட 20 முதல் 30 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கும் எனவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!