Published:Updated:

"விவசாயிகள் போராட்டச் செய்திக்கு டி.ஆர்.பி கம்மிதான். ஆனால்...” - நெறியாளர் கார்த்திகைச்செல்வன் #WorldPressFreedomDay

"விவசாயிகள் போராட்டச் செய்திக்கு டி.ஆர்.பி கம்மிதான். ஆனால்...” - நெறியாளர் கார்த்திகைச்செல்வன் #WorldPressFreedomDay
"விவசாயிகள் போராட்டச் செய்திக்கு டி.ஆர்.பி கம்மிதான். ஆனால்...” - நெறியாளர் கார்த்திகைச்செல்வன் #WorldPressFreedomDay

இன்று, உலகளாவிய பத்திரிகை சுதந்திர தினம். மனிதர்கள் வாழும் உலகில் கி.மு., கி.பி என்பது எப்படி ஆண்டுகளுக்கான வகைப்பாடோ அதே மாதிரிதான் ஊடக உலகுக்கும். இது ச.மு., ச.பி காலம். அதாவது, சமூக வலைதளங்களுக்கு முன், சமூக வலைதளங்களுக்குப் பின் காலகட்டம். செய்திகளுக்கான நேர் மற்றும் எதிர்வினைகளை உடனுக்குடனே பத்திரிகையாளர்கள் சந்திக்கக்கூடிய அளவுக்கு சோஷியல் மீடியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கூடவே, மக்களின் மனநிலையும் எந்தச் செய்தியையும் பகுத்துப்பார்க்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. எனினும், இத்தனை கடினமான ஆதிக்கங்களையும் தாண்டி தினசரி செய்திகளையும், முகம் தெரியாத யாரோ ஒருவரின் அவலக்குரலையும், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களையும் நாட்டு மக்களிடமும், அரசாங்கத்திடமும் கொண்டு சேர்க்கும் உயரிய பணியைச் செய்துவருபவர்கள் ஊடகத் துறையினர். இன்றைய சூழலில் ஊடகத் துறை மற்றும் பத்திரிகையாளர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து நெறியாளரும் பத்திரிகையாளருமான கார்த்திகைச்செல்வன் அவர்களிடம் கேட்டோம்.

``பத்திரிகையாளர்கள் மீதான விமர்சனங்கள், இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்குச் சென்று சேர்ந்துவிடுகின்றன. இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது?”

``பத்திரிகைக்குனு எந்தவொரு சுதந்திரமும் ஸ்பெஷலா கிடையாது. இந்தியப் பிரஜைகளுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ, அதேதான் பத்திரிகையாளர்களுக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அதைத்தான் சுட்டிக்காட்டுது. அடிப்படையா இருக்கும் கருத்துரிமையும் பேச்சுரிமையும் எல்லா சாமானியர்களுக்கும் கிடைத்தால், அதுதான் பத்திரிகைகளுக்கான சுதந்திரமும். ஆனால், அது இங்கே இல்லையே. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், மிரட்டல் எல்லா காலங்கள்லயும் இருக்கு. அதோட வடிவம் மாறியிருக்கலாம். ஒருகாலத்தில் சுமோ அனுப்புறது, ரெளடிகள் அனுப்பி மிரட்டுறது தாண்டி, இப்போ ஒரே நேரத்தில் 40 வழக்குகள், 50 வழக்குகள்னு வெவ்வேறு இடங்கள்ல இருந்து பதிவுசெய்றதை அதிகாரத்தில் இருப்பவர்கள் வழக்கமா செய்துகிட்டுதான் இருக்காங்க. இதையெல்லாம் கடந்துதான் பத்திரிகையாளர்கள் இயங்கிட்டிருக்காங்க. பிரஸ் கவுன்சிலோட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் வரை எந்தவித மிரட்டலுக்கும் பத்திரிகையாளர்கள் பயப்படத் தேவையில்லை.

இன்னொரு பக்கம், சோஷியல் மீடியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கேள்விகளை எழுப்புறது தப்பில்லை. எந்த விஷயமுமே விவாதத்துக்குள்ளானால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆனால், தொடர்ந்து பதிலுக்கு பதில் கவுன்ட்டர் கொடுக்கிறதுதான் இங்கு அதிகம். இதனால் உண்மையான, சரியான விமர்சனங்களைச் சொல்பவர்களும் பாதிக்கப்படுறாங்க. கூடவே, சொல்ல வர விஷயத்தோட உண்மையான காரணத்தைப் புரிஞ்சுக்க விடாம, உள்நோக்கம் கற்பிப்பாங்க. அதையும் தாண்டி நடுநிலையைக் கேள்விக்குள்ளாக்குறதும் நடக்குது. அரசியல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கும் இப்பவும் லைஃப் திரெட் இருக்கத்தான் செய்யுது.”

“ ‘பிரேக்கிங் நியூஸ்’  என்பதே சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானது. அந்த வகையில் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை அவர்கள் சரியாகக் கையாள்கிறார்களா? 

“எல்லா பத்திரிகையாளர்களும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் செயல்படுறதில்லை. மறைமுகமான நிறைய அழுத்தங்கள், எதிர்ப்புகள் இருக்கும். முழுமையான ஒரு சுதந்திரத்துடன் செயல்படக்கூடிய ஊடகம் எதுவும் இங்கே இல்லைங்கிறதுதான் உண்மை. இப்போ இருக்கும் சூழ்நிலையில் எல்லா செய்திகளுமே விமர்சனங்களைச் சந்திக்காம இல்லை. போட்டாலும் போடாட்டியும் அந்த விமர்சனங்கள் எழத்தான் செய்யும். ஆனால், செய்திகளில் உண்மையை மட்டுமே பேசணும். நம்பகத்தன்மை உள்ள செய்திகளை மட்டுமே சொல்றோமாங்கிறதுதான் முக்கியம். இருந்தாலும், செய்தியை முன்னாடி பிரேக் பண்றதுக்காகத் தப்பான விஷயங்களைச் சொல்றது ஊடக தர்மமே இல்லை. அந்தத் தவறுகள் சின்னச்சின்னதா நடக்கத்தான் செய்யுது.

ஆளும் கட்சி குறித்த செய்திகளைப் பொறுத்தவரை, 24 மணி நேரச் செய்திகளில் ஒரு மணி நேரம்தான் அவர்களைப் பற்றிப் பேசியிருப்போம். இருந்தாலும் தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கு. `உள்கட்சிப் பூசல்கள் பற்றிய செய்தி தேவையா?'ங்கிற கேள்வி எழும். ஆனால், கூர்ந்து கவனிச்சீங்கனா மக்களை ஆளும் ஓர் உயரிய இடத்தில் இருக்கிற கட்சி, மக்களோட அத்தியாவசியத் தேவைகள், பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்காம, தங்களுக்குள்ளாகவே சண்டை போட்டுக்கொள்வதை மக்களிடையே எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு இருக்கு. அப்படிப்பட்டச் செய்திகளை முழுமையா நிராகரிக்க முடியாது.

அரசியல் இல்லாமல் எந்த நிகழ்வுமே கிடையாது. சில விஷயங்களைத் தவிர்க்கவேண்டியது இருந்தாலும், மற்றவையெல்லாம் முக்கியமான பிரேக்கிங் செய்திகள்தான். விவசாயிகளுடைய போராட்டம் குறித்து முழு நாளும் செய்திகளை மக்களுக்குக் கொடுத்தோம். அந்தச் செய்திகளுக்கு டி.ஆர்.பி கம்மியாத்தான் வந்தது. ஆனால், அதைத் தெரிஞ்சுதான் நாங்க டெலிகாஸ்ட் செய்தோம். காரணம், மக்களுக்கான ஒரு பிரச்னை. அதற்கான தீர்வுக்காகப் போராடும் மனிதர்களின் வலியும் வேதனையும் ஒவ்வொரு மக்களிடமும் சென்று சேரணும்கிற நோக்கம்.”

“ஆட்சியையே மாற்றக்கூடிய திறன், ஊடகத் துறைக்கு ஒருகாலத்தில் இருந்தது. அந்தச் சூழல் இன்றைக்கும்  உள்ளதா?”

“நிச்சயமாக. ஆட்சி மாற்றம்கிறதைத் தாண்டி கிராமப்புற மக்களுக்குக்கூட தினசரி அரசியல் நிகழ்வுகள் ஊடகங்கள் வழியேதான் சென்று சேருது. இன்னைக்கு இருக்கும் வாக்காளர்களை ஏமாற்றி, யாரும் ஓட்டுக்களைப் பெற்றிட முடியாது. அந்த அளவுக்கு எளிய மக்கள்கூட, விவாதங்களில் பங்கேற்பவர்களைவிட அதிகமா அரசியல் சார்ந்த புரிதலைக்கொண்டிருக்காங்க. மேலும், தன்னுடைய பிரச்னைக்காக வெளியே வந்து போராடும் மனதைரியமும் துணிச்சலும் மக்களுக்கு வந்திருக்கு.

போராட்டங்களில் இன்னைக்கு தமிழகம்தான் முதல் இடத்தில் இருக்கு. அதை ஊடகங்கள்தான் உருவாக்கியிருக்கு. பத்திரிகைகளால்தான் அது சாத்தியப்பட்டிருக்கு. பத்திரிகைத் துறை கரப்ட் ஆகியிருக்கு என்பதையும் நான் ஒப்புக்கிறேன். மீடியாங்கிற தூண் மீதும் ஓட்டைகள் இருக்கத்தான் செய்யும். அதைச் சரிசெய்யவேண்டிய கட்டாயமும் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு இருக்கு. இருந்தபோதிலும், ஊடகத் துறையில் சமூக அக்கறையுள்ள இளைஞர்களோட ஆதிக்கம் அதிகரிச்சிருக்கிறதே ஊடகத் துறையின் எதிர்காலம் மீது ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துது” என்று அழுத்தமான நம்பிக்கையுடன் முடித்தார் கார்த்திகைச்செல்வன்.