Published:Updated:

காணாமல் போன கிணற்றை கண்டெடுத்த இளைஞர்கள்!

காணாமல் போன கிணற்றை கண்டெடுத்த இளைஞர்கள்!
காணாமல் போன கிணற்றை கண்டெடுத்த இளைஞர்கள்!

காணாமல் போன கிணற்றை கண்டெடுத்த இளைஞர்கள்!

தண்ணீர்...தண்ணீர்... என்று எங்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அதிகாரிகள் அரசியல்வாதிகளை நம்பினால் வேலைக்கு ஆகாது என்றெண்ணி பலநாள் உழைப்பில் பொதுமக்களின் துணையோடு மட்டும் பொதுக்கிணற்றை தூர்வாரி வருகிறார்கள் இளைஞர்கள்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் காவல்நிலையம் அருகே உள்ளது நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான நந்தவனக்கிணறு. சீமைக்கருவேலமரங்கள் அடர்ந்து பாழுங்கிணறாகவும் குப்பைகள் கொட்டும் இடமாகவும் மட்டுமே கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வந்தது.  'சுதந்திரச் சிறகுகள்' அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டபோது கிணறு மண்மூடி இருப்பதைக்கண்டு, 'இதை ஏன் தூர்வாரக்கூடாது?' என்று சிந்தித்தனர். அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர். அரசியல் பிரமுகர்களிடம் கோரிக்கைகளை வைத்தனர். எந்தப் பணியும் நடைபெறாததால் பொதுமக்களிடம் உதவியைப்பெற்று அறுபது அடி ஆழம் கொண்ட கிணற்றில், ஐம்பது அடியை தூர்வாரினர்.

முழுதாய் முடிக்கும்வரை ஓய்வு இல்லை!

இதுகுறித்து இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் சுதந்திரச் சிறகுகள் அமைப்பின் பாலாஜி கூறுகையில், "நாங்கள் முதலில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக, பள்ளி நண்பர்கள் ஐந்து பேர் இணைந்து சாதாரண அரிவாள் கொண்டு அந்த மரங்களை வெட்ட ஆரம்பித்தோம். அப்போது, கிராம மக்கள் அனைவரும் 'எதற்கு இந்த வேண்டாத வேலை, வீணான முயற்சி?' என்று கேட்டு எங்களைத் திட்டினர்.  

'எங்களுக்கு உதவி தேவை' என்று வாட்ஸப்பில் செய்திகள் அனுப்பினோம். சிறிது நாட்களுக்குப் பின், ஜே.சி.பி ஓட்டுபவர் வந்து இலவசமாக அந்த மரங்களை அகற்றினார். ஜே.சி.பி-க்கான எரிபொருள் செலவை மற்றொரு நபர் ஏற்றுக்கொண்டார். பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. எங்கள் ஊரில் அதற்குப் பலர் பண உதவி செய்தனர். அதன்மூலம் கிடைத்த பணம் மீதம் இருந்தது என்ன செய்ய என்று யோசித்தபோது, பிறகு கிணறு முழுமையாக மூடி இருப்பதைக்கண்டு அதனைத் தூர்வாரலாம் என்று நண்பர்களை அழைத்துத் தூர்வார ஆரம்பித்தோம். ஊரில் உள்ளவர்களிடம் நிதி பெற்று, தொடர்ந்து 35 நாட்கள் பணி நடைபெற்றது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ எங்களைப் பாராட்டிவிட்டுப் போனார் . மேலும் தூர்வரும் ஒவ்வொரு நாளும் கிணறு தண்ணீரால் நிரம்பி விடும். அந்தத் தண்ணீரை விவசாயத்திற்கு வந்து வண்டிகள் மூலம் எடுத்துச் செல்வர். தினமும் வண்டிகளில் ஆறாயிரம் லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்கிறனர். மோட்டார் செலவுக்காக மட்டும் நாங்கள் 200 ரூபாய் வாங்கினோம். தற்போது ஐம்பது அடியை தொட்டுவிட்டது. இன்னும் பல அடிகள் தோண்ட வேண்டியுள்ளது . ஆனால் இப்போது பணமில்லாததால் அந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக உதவி கேட்டுள்ளோம். உதவி கிடைக்காவிட்டாலும் முழுமையாக இக்கிணற்றை தூர்வாராமல் ஓயமாட்டோம்" என்றார்.

நந்தவன பிள்ளையார்!

கிணற்றின் மேல்பகுதிவரை மண் மூடி இருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக தூர்வாரி வந்த நிலையில், பல குப்பைகள், டயர்கள், கட்டடக் கழிவுகள் என தோண்டத்தோண்ட வந்து கொண்டே இருந்தது. கிணற்றின் 18-வது அடியைத்  தோண்டியபோது பிள்ளையார் சிலை ஒன்று கிடைக்கவே அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தப் பணியை கடவுளே ஆசிர்வதித்து விட்டதாகக் கருதினர். மேலும் அந்தப் பிள்ளையாருக்குப் பூஜைகள் செய்து 'நந்தவனப் பிள்ளையார்' என்று பெயரிட்டனர்.

அரசு உதவ வேண்டும் 

கிணறு தூர்வாரும் பணி பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த பசங்களாவே வந்து கிணத்தைச் சுத்தி இருந்த முள் மரங்களை வெட்டுனாங்க. நாங்க முதல்ல அந்தப் பசங்கள 'எதுக்கு இந்த வேண்டாதவேலை? பஞ்சாயத்துல செய்வாங்க' என்று திட்டினோம். அப்புறம் யார் யாரையோவெல்லாம் கூட்டிட்டு வந்து காமிச்சாங்க. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ-ல்லாம் வந்து இந்த பசங்களை பாரட்டிட்டு போனாங்க. எப்பவும் பைப் தண்ணி வரும். இப்போல்லாம் குப்பை கலந்த தண்ணிதான் வருது. அதுவும் பல நாட்களுக்கு ஒருதடவைதான் வருது. அதனால, நாங்க இப்போ இந்த கிணற்றுத் தண்ணியத்தான் பயன்படுத்தறோம். என்னன்னு தெரியல... கொஞ்ச நாளா எதுவும் பண்றது இல்லை. விசாரிச்சப்போ பணம் இல்ல, அதான் நிப்பாட்டிட்டோம்னு சொன்னாங்க. பசங்க பாவம். இந்த பேரூராட்சிக்காரங்க, உதவி பண்ணா நல்லா இருக்கும்" என்றனர்.

நின்றுபோன கிணறு தூர்வாரும் பணியை மீண்டும் தொடங்க தற்போது வீதிவீதியாக நான்கைந்து இளைஞர்கள் இரண்டு பதாகைகளை தூக்கிக்கொண்டு நிதிகேட்டு சென்று கொண்டிருந்தனர். எது எப்படியோ, ஒருவழியாக 90 சதவிகித வேலைகளை முடித்து நந்தவனக்கிணற்றை பொலிவுபெறச் செய்துவிட்டனர். வீண் முயற்சி என்று சொன்னவர்களை, விடா முயற்சி என்று சொல்ல வைத்துவிட்டனர் அந்த இளைஞர்கள். 

"இன்னும் கொஞ்சம்தான், நாமும் முடிந்தால் உதவி செய்வோம். கரம் கொடுப்போம் அறம் செய்ய...!"

- ச. செந்தமிழ்செல்வன்
மாணவப்பத்திரிகையாளர்

அடுத்த கட்டுரைக்கு