Election bannerElection banner
Published:Updated:

ஒரு ஆட்டோ... ஒரு ட்வீட்.. அடித்தது அதிர்ஷ்டம்! #Mahindra

ஒரு ஆட்டோ... ஒரு ட்வீட்.. அடித்தது அதிர்ஷ்டம்! #Mahindra
ஒரு ஆட்டோ... ஒரு ட்வீட்.. அடித்தது அதிர்ஷ்டம்! #Mahindra

ஒரு ஆட்டோ... ஒரு ட்வீட்.. அடித்தது அதிர்ஷ்டம்! #Mahindra

யார் கவனிக்கப்போகிறார்கள் என்றெல்லாம் எண்ணாமல், ரசனை சார்ந்து வாழ்பவர்களுக்கு அதற்குண்டான அங்கீகாரம் எப்போதாவது கிடைக்கத்தான் செய்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

மார்ச் 19-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த ‘யாரோ ஒரு’ அனில் என்பவர், வழியில் ‘யாரோ ஒருவர்’ தன் ரசனைக்கேற்ப டிசைன் செய்த ஆட்டோவைப் பார்க்கிறார். கிட்டத்தட்ட மஹிந்திரா கம்பெனியின் ஸ்கார்ப்பியோ போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது அந்த ஆட்டோ. அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். 

அனில், மஹிந்திரா குழுமத்தில் பணிபுரிபவர்.  எடுத்த படத்தை ‘நல்லாருக்குல்ல சார்..?  நம்ம டிசைன் இந்தியன் ரோட்ல எவ்ளோ பாப்புலர் பாருங்க’ என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு Tag செய்து ட்விட்டரில் போடுகிறார்

பத்து நிமிடத்தில் ரிப்ளை வருகிறது ஆனந்திடமிருந்து. “அட... செம.. அவர் யார்னு பிடிச்சுக் குடுங்களேன். இந்த ஆட்டோவை நான் வாங்க ஆசைப்படறேன்.  பதிலுக்கு அவருக்கு ஒரு 4 வீலர் தர்றேனே...” 

பாஸுக்கெல்லாம் பாஸு சொன்னதாச்சே... கொச்சி மஹிந்திரா டீலரில் பணிபுரிகிறவர்கள், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு கேரளாவின் ஒரு கிராமத்தில் இருக்கும் அந்த  ஆட்டோக்காரர் சுனிலைக்  கண்டுபிடித்துவிடுகிறார்கள். ’அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்’ என்று அவரும் ஒப்புக்கொள்ள, இப்போது அவர் மஹிந்திரா சூப்பர் மினி வேனின் உரிமையாளர்.


நேற்றைக்கு இதை ட்விட்டரில் போட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் ஆனந்த். இவரைக் கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரெனோ, செவர்லே என்று எக்கச்சக்க வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு மத்தியில், இந்திய நிறுவனமான மஹிந்திராவுக்கு இந்தியர்களிடத்தில் செம மவுசு உண்டு. விற்பனையைத் தாண்டி இன்னொரு விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த், வித்தியாசமாக முயற்சி செய்பவர்களையும், வெற்றியாளர்களையும் ஊக்குவிப்பதில் ரொம்ப ஆர்வம் கொண்டவர்.  ஆனந்த்துக்குப் பிடித்து விட்டால், அடுத்த நிமிடம் உரியவரின் வீட்டில் மஹிந்திரா கார் நிற்கும்.

அப்படி மஹிந்திராவின் கார்களை ஷோரூம் போய் காசு கொடுத்து வாங்கியவர்களுக்கு இணையாக, பரிசாக வாங்கிய வி.ஐ.பி.க்கள் பட்டியல், சாக்‌ஷி மலிக், பி.வி.சிந்து, மாரியப்பன் தங்கவேலு என்று  பெருசு. சாக்‌ஷி மலிக், ஆனந்த்  பரிசாகக் கொடுத்த தார் ஜீப்பில்தான் இப்போது பயணிக்கிறாராம்.

‘‘சாக்‌ஷி, இப்போது இந்தியாவின் மிகப் பெரிய மல்யுத்த வீராங்கனை. அவருடைய ஸ்டைலுக்கும், தன்மைக்கும் ‘தார்’ போன்ற ஆஃப்ரோடு கார்களில் பயணிப்பதுதான் அவருக்குச் சிறந்த கௌரவமாக இருக்கும். அவருக்கு தார் 4 வீல் டிரைவ் மாடலைப் பரிசாக அளிப்பதில் மஹிந்திரா கௌரவப்படுகிறது!’’ என்று அப்போது சொன்னார் ஆனந்த் மஹிந்திரா.  அதாவது, திறமையாளர்களின் தேவை அறிந்து பரிசு கொடுப்பதுதான் ஆனந்தின் ஸ்டைல். 

சுனிலுக்கு ஸ்கார்ப்பியோ மிகப் பிடிக்கும் என்பதால்தான், தனது ஆட்டோவை ஸ்கார்ப்பியோ ஸ்டைலிலேயே ரீ-டிசைன் செய்திருக்கிறார். ஆனந்த் நினைத்தால், சுனிலுக்கு ஸ்கார்ப்பியோவையே பரிசாகக் கொடுத்திருக்கலாம்தான். ஆனால், ஷேர் ஆட்டோவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்; மினி ட்ரக் ஆகவும் லோடு அடித்துக் கொள்ளலாம் என்பது சுப்ரோவின் ஸ்பெஷல் என்பதால்தான், ஆட்டோக்காரரான சுனிலுக்கு  5.50 லட்சம் மதிப்புள்ள சுப்ரோ வேனைப் பரிசாக இறக்கியிருக்கிறார் ஆனந்த்.

பிடிச்சதைச் செய்ங்க.. அதிர்ஷ்டம் ஆகாசத்துல இருந்து இல்ல... ஆனந்த்கிட்ட இருந்துகூட வரும்! 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு