Election bannerElection banner
Published:Updated:

மயிலிறகு, சங்கு, கிளிஞ்சல்களில் ஆபரணம்... குழந்தைகளுக்கான இலவசப் பயிற்சி!

மயிலிறகு, சங்கு, கிளிஞ்சல்களில் ஆபரணம்... குழந்தைகளுக்கான இலவசப் பயிற்சி!
மயிலிறகு, சங்கு, கிளிஞ்சல்களில் ஆபரணம்... குழந்தைகளுக்கான இலவசப் பயிற்சி!

மயிலிறகு, சங்கு, கிளிஞ்சல்களில் ஆபரணம்... குழந்தைகளுக்கான இலவசப் பயிற்சி!

நான் படிச்ச துறைக்கு சம்மந்தமில்லாத வகையிலதான், இப்போதைய என் வாழ்க்கை முறை இருக்குது. இதுக்கு, முன்கூட்டியே திட்டமிடாததுதான் காரணம். என்னோட படிப்பினையை, இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு வரக்கூடாதுன்னு ஆலோசனைக் கொடுக்கிறேன். தவிர எனக்குப் பிடிச்சு, செய்துகொண்டிருக்கிற கைவினைப் பொருட்கள் தயாரிப்பை, கிராமத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவசமாகச் சொல்லிக்கொடுத்து மகிழ்ச்சியடைகிறேன். இதுக்காக அடிக்கடி கிராமங்களை நோக்கிப் பயணிச்சுகிட்டு இருக்கேன்" என கலகலப்பாக பேசத் துவங்குகிறார் இயற்கை ஆர்வலர் பர்வதவர்த்தினி.

“ஸ்கூல் லைஃப் முடிஞ்சு, சொந்த ஊரான திருச்செங்கோட்டுலயே இளநிலை ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சேன். அப்புறம் பாட்னா நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில முதுநிலை ஃபேஷன் மேனேஜ்மென்ட் படிச்சேன். படிச்ச படிப்புக்கு பிளேஸ்மென்ட் கிடைச்சு, சென்னையில சில மாசம் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். ஒருகட்டத்துல தினமும் செய்யும் மெக்கானிக்கல் லைஃப் வாழ்க்கை முறை  எனக்கு பிடிக்கல. சொந்தமா எதாச்சும் பிசினஸ் செய்யணும்; அதுவும் எனக்கு அதீத ஆர்வமிருக்கும் ஆன்டி கிராஃப்ட் துறையாவும் இருக்கணும்னு முடிவெடுத்தேன்.

எனக்குச் சின்ன வயசுல இருந்தே கையில கிடைக்கும் எளிமையான, பயனில்லாமல் தூக்கி எறியும் பொருட்களை வெச்சு கிராஃப்ட் வொர்க் செய்றது ரொம்பவே பிடிக்கும். அந்த ஆர்வமே வேலையை விட்டுட்டு வந்த பிறகு, வீட்டுல இருந்தபடியே விதவிதமான கிராஃப்ட் வொர்க் செஞ்சு சேல்ஸ் பண்ற அளவுக்கு மாறினேன். சில வருஷத்துக்கு முன்னாடி, வானகம் கிராமத்துல நடந்த இயற்கை ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். அந்தப் பயிற்சி வகுப்பு, என்னை இயற்கைச் சார்ந்த வாழ்வியலை நோக்கி பயணிக்கிற ஆர்வத்தைத் தூண்டுச்சு. தவிர, வேறு ஒரு கிராமத்துல நிறைய ஏழைப் பெண் குழந்தைகள் கை, காது, கழுத்தில் எவ்வித ஆபரணங்களுமே இல்லாத நிலையைப் பார்த்தேன். இந்தச் சம்பவங்கள் எல்லாமே, ‘இனி நம்மாள முடிஞ்ச அளவுக்கு கிராமப்புற ஏழைக் குழந்தைகளோடு பயணிக்கணும்’ங்கிற எண்ணத்தை ஏற்படுத்துச்சு.

அதன்படியே மூணு வருஷமா அடிக்கடி பல்வேறு கிராமங்களுக்குப் போய், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு இலவசமா கிராஃப்ட் வொர்க் சொல்லிக்கொடுத்துகிட்டு இருக்கேன். கிராமப்புறப் பகுதியில் இலவசமா கிடைக்கும் மயில் தோகை, கோழி இறகு, புறா இறகு, தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள், கிளிஞ்சல்கள், சங்கு, இலைகளையெல்லாம் பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஆபரணங்கள் செய்ய சொல்லிக்கொடுக்கும்போது, உற்சாகமாக செய்ஞ்சு காட்டுவாங்க. அதை அவங்க போட்டு அழகு பார்க்கிறப்ப என் மகிழ்ச்சிக்கு விலையே இருக்காது. ஏழ்மை நிலையால் காசுக் கொடுத்து எவ்வித ஆபரணங்களையும் வாங்க முடியாதக் குழந்தைகள், தாங்களே எளிமையான முறையில நிறைய ஆபரணங்களை செஞ்சு பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்கும் இதுமாதிரியான சமயங்கள்ல, அவங்களுக்குள்ள என்ன திறமை இருக்குங்கிறதை தெரிஞ்சுக்குவேன். என்னோட படிப்பும், இப்போ செய்யுற செயல்பாட்டுக்கும் சம்மந்தமில்லாத நிலை மற்றக் குழந்தைகளுக்கும் வரவேண்டாம்னு ஆலோசனை கொடுக்கிறேன்” என்பவர் அரசுப் பள்ளி மாணவர்கள் காகிதப் பையைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்.

“சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை என்னால முடிஞ்ச அளவுக்கு தடுக்கணும்னு, காகிதப் பையைத் தயாரிச்சு அதைத்தான் அதிக அளவில் பயன்படுத்திகிட்டு இருக்கேன். இதையே வளரும் குழந்தைகளுக்கும் சொல்லித்தரணும்னு, நிறைய அரசுப் பள்ளிகளுக்குப் போய், அங்கிருக்கும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறேன். அதன்படி நிறையக் குழந்தைகள் இப்போ காகிதப் பைகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்திகிட்டு இருக்கிறாங்க. குழந்தைகளுடன் பயணிக்கும் இதுமாதிரியான நிகழ்வுகள்ல நானும் குழந்தையாகவே மாறிடுறேன்” எனப் புன்னகைக்கிறார் பர்வதவர்த்தினி.

- கு.ஆனந்தராஜ்
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு