வெளியிடப்பட்ட நேரம்: 05:22 (05/05/2017)

கடைசி தொடர்பு:06:55 (05/05/2017)

அகிலத்தின் மூலதனம் கார்ல் மார்க்ஸ்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

கார்ல் மார்க்ஸ்

''மக்களால் நான்... மக்களுக்காகவே நான்'' என்ற உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளை அடிக்கடி மக்களிடம் உரக்கச் சொல்லி, அவர்களுடைய உள்ளங்களில் வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், கட்சி நிகழ்வுகளிலும் அவருடைய கட்சியினர்வைக்கும் சுப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு குட்டிக்கதைகள் சொல்வது வழக்கம். அது, அப்போதைய காலத்தைக் குறிக்கும்வகையிலோ அல்லது எதிர்க்கட்சியைத் தாக்கும்வகையிலோ இருக்கக்கூடும். சில நேரங்களில், தம்பதிகள் குறித்த கதைகளாகக்கூட இருக்கும். இப்படியான ஒரு நிகழ்வின்போதுதான் தம்பதியருக்கு ஏற்ற ஓர் அழகான குட்டிக்கதையைச் சொல்லியிருப்பார். குடும்பத்தில் ஒரு தம்பதியினர் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு எப்படி ஒருமித்த கருத்துடனும், உள்ளன்போடும் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதே அந்தக் கதை... 

ஜெ. சொன்ன குட்டிக்கதை!

''வேலைக்குச் சென்ற கணவனை எதிர்பார்த்து வீட்டில் காத்திருக்கிறாள் அவனுடைய அன்பு மனைவி. தாமும் தம் கணவனும் சாப்பிடுவதற்காக, இருக்கும் இட்லிமாவைக் கொண்டு இட்லி சுடுகிறாள். மொத்தம் 12 இட்லிகள் இருக்கின்றன. 'சரி, கணவன் சாப்பிட்டதுபோக மீதியை நாம் சாப்பிடலாம்' என்று அவளுடைய எண்ண ஓட்டம் இருந்தது. இந்த நிலையில், வேலைக்குச் சென்ற கணவன், திடீரென்று அவனுடைய நண்பனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். மனைவியோ இதைக்கண்டு திகைத்துப் போகிறாள். கணவனோ, 'எங்கள் இருவருக்கும் உணவு எடுத்து வா' என்கிறான். அவளோ, 'மொத்தமே 12 இட்லிகள்தான் இருக்கின்றன. இதை எப்படி அவரிடம் புரியவைப்பது' என்ற குழப்பமான மனநிலையிலேயே இருவருக்கும் தலா 4 இட்லிகளைவைத்து உணவு பரிமாறுகிறாள். மீதமிருக்கும் 4 இட்லிகளை யாருக்குவைப்பது என்கிற குழப்பத்தில் அவள் இருக்கும்போது... கணவன் தனக்குவைத்த இட்லிகளை விரைவாகச் சாப்பிட்டுவிடுகிறான். அதனால், மேலும் இரண்டு இட்லிகளை எடுத்துவைக்கப்போன மனைவியிடம்... அவனோ, 'நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது' எனச்சொல்ல... இன்னும் இரண்டு இட்லிகள் அதிகமாகச் சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டு அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நண்பனுக்கோ, அவன் சொன்னதைக் கேட்டவுடன் பகீர் என்றது. அந்தச் சமயத்தில்... இவளோ, 'அண்ணா... உங்களுக்கு' என்று கேட்க, நண்பனோ... 'போதும்... போதும்... நான் எப்போதும் மூன்று இட்லிகள்தான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் அருமை. அதனால் நான்கு இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டேன்மா' என்று சொல்லி எழுந்தான். பின்னர் தன் மனைவியைப் பார்த்த கணவன், 'மீதமுள்ள இட்லியை நீ சாப்பிட்டுவிடு' என்றான். தம் எண்ணங்களைச் சரியாய்க் கணித்து விடை கண்ட கணவனை நினைத்து இப்போது மனைவி ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றாள்.'' இந்தக் கதை உணர்த்துவது என்ன? இருப்பதைக் கொண்டு இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்பதுதான். இந்தக் கதையில் வாழும் கதைமாந்தர்களைப்போன்றதுதான் கார்ல்மார்க்ஸ் - ஜென்னியின் காதல் கதையும்... 

கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸுக்குத் துணை!

''மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர, மாறாதது உலகில் இல்லை'' என்று சொன்ன கார்ல் மார்க்ஸ்தான், உலக விடியலுக்கான மாற்றத்தையே படைத்தார். அவருடைய பிறந்த தினம் இன்று. 

''அன்பே...  உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா, தடுக்கிவிழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமின்றி நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப்போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப்போல அவை சாகும். ஆனால், சரணடைய மாட்டா (elle meure, mais elle ne se rende pas)'' என அவருடைய எதிர்கால சிந்தனை எப்போதும் தடைப்பட்டுவிடாத அளவுக்கு மார்க்ஸுக்குத் துணையாக இருந்தார் ஜென்னி.

மார்க்ஸ் - ஜென்னி காதல்!

இந்த ஜென்னி வேறு யாருமல்ல... மார்க்ஸின் அடுத்த வீட்டில் இருந்த இளங்குமரி; பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த பேரழகி. ஜென்னியின் அழகில் மயங்கியவர்களும், அவளுடைய வருகைக்காகத் தவம்கிடந்தவர்களும் எத்தனையோ ஆயிரம் பேர்? அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத ஜென்னியின் காதல் இதயம்,  காணச் சகிக்க முடியாத தோற்றத்துடனும், கறுப்பு நிறத்துடனும் காட்சியளித்த மார்க்ஸுக்குக் கிடைத்தது. அவருடைய சிந்தனையும், கருத்துமே ஜென்னியின் இதயத்தைச் சிறைபிடித்தது; சிறகு விரித்தது; சேர்ந்துவாழத் துடித்தது. இனம், மதம், மொழி, வயது... இவை எதுவும் இல்லாமல் வருவதுதானே காதல்? தங்களுடைய மெளன மொழியில் இரண்டு இதயங்களும் பேசிக்கொண்டன; இரண்டு விழிகளும் பார்த்துக்கொண்டன; இணைவதற்கான முயற்சியில் இறங்கின. மார்க்ஸைவிட ஜென்னி நான்கு வயது மூத்தவர். ஆனால், மனதில் காதல் வந்துவிட்டால் வயதாவது... வசதியாவது?  இப்போது, இருவருடைய இதயங்களையும் காதல் களவாடியிருந்தது. ஜென்னி என்னும் கன்னி தன் இதயத்துக்குள் நுழைந்த பிறகுதான்.. பல கஷ்டநஷ்டங்களையும் தாண்டி அவருடைய வாழ்க்கை மின்னச் செய்தது. தத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்காகக் காதலியைப் பிரிந்தார், மார்க்ஸ். ஓர் ஆண்டோ... ஈராண்டோ அல்ல... ஏழு ஆண்டுகள். தங்களுடைய காதலுக்காக இருவருமே காத்துக்கிடந்தனர். காதல் என்றால் காத்திருப்புகளும், இழப்புகளும் வருவது சகஜம்தானே. ஆனாலும், காதலின் தவிப்பு காதலர்களுக்குத்தான் தெரியும். மற்றவர்கள் ஏதேதோ சொன்ன செய்திகளால் நிலைகுலைந்துபோனது ஜென்னியின் இதயம். மார்க்ஸின் தந்தைகூட, தன் மகனை மறந்துவிடும்படி வேண்டுகோள்வைத்தார். இது, எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை ஜென்னி. காதலனை நினைத்து வருந்தினார்; கண்ணீர் வடித்தார்; அவருடைய கடிதத்துக்காகக் காத்திருந்தார். 

கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸின் கடிதம்!

மார்க்ஸிடமிருந்து வந்த கடிதம் அவர் மனதைத் தேற்றியது; மகிழ்ச்சியைத் தந்தது; மனதைரியத்தைக் கொடுத்தது. ''இனிவரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும் காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்'' என்று தன் மனநாயகியை நினைத்து மார்க்ஸ் வடித்திருந்த வரிகள் கடைசிவரை ஜென்னியின் மனதை மாற்றவில்லை. வாழ்க்கை என்ற கால சக்கரத்துக்குள் அவர்கள் வாழ முற்பட்டபோது வறுமை அவர்களை வாட்டிவதைத்தது; வயிறுகளைச் சுருங்கவைத்தது; வாரிசுகளை அள்ளிச் சென்றது. கறுப்புக் காபியுடனும், சிகரெட் புகையுடனும் தன்னுடைய சிந்தனைகளை வார்த்தெடுப்பதற்காக அல்லும்பகலும் அயராது உழைத்துக்கொண்டிருந்த கார்ல் மார்க்ஸுக்கு ஆதரவாக ஜென்னி, வறுமையிலும் தம் வாழ்க்கையைச் செம்மையாக நடத்திக்கொண்டிருந்தார். ஒருமுறை, தன் தாயாரின் மரணம் காரணமாக ஜெர்மனிக்குச் சென்றிருந்த ஜென்னியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத மார்க்ஸ், ''உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்துபோவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். ஒருமுறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக்கொண்டால் போதும். என் இதயம் அமைதியாகிவிடும். அதன்பிறகு, எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது'' என வேதனையுடன் கடிதம் எழுதினார். 

அகிலத்தின் மூலதனம்!

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையில் வரும் கதைமாந்தர்களைப் போன்றே ஒருகட்டத்தில் மார்க்ஸும் - ஜென்னியும் வாழ்ந்திருக்கிறார்கள். இருக்கும் உணவைத் தன் குழந்தைகளுக்கும், தன் கணவருக்கும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார், ஜென்னி. இப்படி அவர்கள் இருவரும் மனம்கோணாதபடி இணைந்திருந்ததால்தான், இன்று கார்ல் மார்க்ஸ் - ஜென்னியின் காதல் காவியம் நமக்குக் கிடைத்திருக்கிறது.வறுமையினால், தன்னுடைய முதல் குழந்தை இறந்த சமயத்தில்கூட, ஜென்னி தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், ''இதுபோன்ற அற்ப சங்கடங்களில் எல்லாம் நான் ஒருபோதும் தளர்வடைவதில்லை. எனக்கு என் கணவர் அருகில் இருக்கிறார். இப்படி ஒரு மனிதரைக் கணவராகப் பெற்றமைக்காக நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்று தன் காதல் நாயகனை எங்கேயும் எப்போதும் விட்டுக்கொடுக்காத அளவுக்கு நேசித்துக்கொண்டிருந்தார். ''கொஞ்சமாவது மூலதனத்தைச் சேர்த்தால் சிறப்பு'' என்று தன் தாயார் சொன்னபோதும்... கொஞ்சமும் மூலதனமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த மார்க்ஸ், 'ஜென்னி - ஏங்கெல்ஸ்' என்ற மூலதனத்தாலும்... தன் சிந்தனையின் மூலதனத்தாலும் பின்னாளில் உலகத்துக்கே தேவையான 'மூலதன'த்தைப் படைத்தார். 

இன்று, 'மூலதன'த்தைப் படைத்த கார்ல் மார்க்ஸ் என்ற மூலதனம், நம்மிடம் இல்லாதபோதும்... அவருடைய, 'மூலதனம்'தான் அகிலத்துக்கே மூலதனமாக இருக்கிறது.

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்