வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (05/05/2017)

கடைசி தொடர்பு:14:58 (05/05/2017)

கார்ல் மார்க்ஸிடம் ஜென்னி காதல் சொன்ன கதை! #KarlMarx

ஜென்னி

ம்யூனிஸத் தத்துவத்தை உலகிற்கு அளித்த கார்ல் மார்க்ஸ்க்கும் அவரைக் காதலித்து மணம்புரிந்துகொண்ட ஜென்னிக்கு இடையேயான கடிதப் பரிமாற்றம் உலகப் புகழ்பெற்றவை. அவர்களுக்குள் காதல் மலர்ந்த தருணங்களில் இருவரும் பகிர்ந்துக்கொண்ட அன்பின் வெளிப்பாடே அந்தக் கடிதங்கள். குறிப்பாக, அவர்களின் திருமணத்திற்கு முன்பு, ஜென்னி கார்ல் மார்க்ஸுக்கு எழுதிய கடிதங்களில், பெண்ணுக்கே உரிய குதூகலத்தைப் படிக்கும் எவரும் உணரமுடியும். அவரின் காதல் எழுத்துகளின் சில பகுதிகள் இதோ..
 
என் சின்ன அன்பு பன்றியே (ஜெர்மனியில் பன்றி செல்ல பிராணி),

என்னுடைய கடிதம் உங்களைக் குதூகலப்படுத்தும்... எனக்காக நீங்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.. நீங்கள் கோலன் நகரில் மது அருந்தினீர்கள்.. இன்னும் சில காலங்களில் நீங்கள் என்னுடையவர் ஆகிவிடுவீர்கள்.. நீங்கள்  மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் .. இவையெல்லாம் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கின்றன! ஆனால், ஒரே ஒரு விஷயத்தை எனக்காக நீங்கள்  செய்ய தவறவிட்டீர்கள்.. என்னுடைய கிரேக்க மொழி புலமையை நீங்கள்  கொஞ்சமெனும் பாராட்டி இருக்கலாம். என் புலமையைப் பாராட்டி சிறிய கட்டுரையாவது எழுதியிருக்கலாம். மற்ற எல்லா ஆண்களைப் போல, நீங்கள் எதையும் கவனிப்பதே இல்லை... அது சாதனைகளின் உச்சமாக இருக்கலாம்...ஒருவேளை.. அது உங்களுடைய பார்வையில் சாதனையாக இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், என்னுடைய சிறிய மேதைமையிலிருந்து, இந்தச் சிறிய கடிதத்தை உலகிற்கு அனுப்புகிறேன்.

ஓ... என் அன்பே  இதயகனியே.. இப்போது நீங்கள் அரசியலில் ஈடுபட துவங்கி இருக்கிறீர்கள்.. மற்ற எல்லாவற்றையும் விட இது மிகவும் ஆபத்தான விஷயம்.  என் அன்பு கார்ல்... உங்களுக்காக  வீட்டில் எப்போதும் ஓர் அன்பு இதயம், உங்களை நம்பிக்கொண்டும், உங்களுக்காக ஏங்கிக்கொண்டும்  இருக்கிறது என்பதை மட்டும்  எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களை மற்றொரு முறை பார்க்க வேண்டும் என எவ்வளவு  ஆசையாக இருக்கிறது என்று தெரியுமா?
 
ஜென்னிஎன் அன்புக்குரியவரே, நீங்கள் என்னிடம் வெறும் இரண்டு வரிகள் மட்டும் கேட்டீர்கள். ஆனால், இந்தப் பக்கமே கிட்டதட்ட நிறைந்துவிட்டது.  இன்று, கடிதங்களுக்குரிய சட்டங்களை எதையுமே நான் பின்பற்றுவதாக இல்லை. எத்தனை பக்கங்கள் எழுத முடியுமோ.. அத்தனை பக்கங்களை எழுதவிருக்கிறேன். இந்த விஷயத்தைப் பொருத்தவரையில்,  இந்தச்  சின்னப் பெண் ஜென்னியிடம் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இன்று  என்  மூளையில் எதுவுமே இல்லை; காலியாக இருக்கிறது. என்னுடைய எண்ணங்கள் எல்லாம் எங்கோ சென்றுவிட்டன. ஆனால், மற்றொரு புறத்தில், என் இதயம் நிறைந்திருக்கிறது, காதலால் நிரம்பி வழிகிறது... உங்களுக்காக  ஏங்கிக்கொண்டே இருக்கிறது.. என் முடிவில்லா  காதலனே!

இதற்கிடையே,  வொபன் மூலமாக, பென்சிலில் எழுதிய கடிதம் உங்களுக்கு கிடைத்ததா? ஒருவேளை, நமக்கு இன்னும்  காதல்  தூதுவர்கள் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வருங்காலத்தில் என்னுடைய தலைவனுக்கே  நான் நேரடியாக கடிதம் எழுத வேண்டும்.
 
ஓ.. என் அன்புக்குரியவரே..எனக்கு தூக்கம் வராத இரவுகளில் உங்களைப் பற்றியும் உங்கள் காதலை பற்றியுமே  நினைத்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுக்காக அடிக்கடி இறைவன் இடத்தில் வேண்டிக்கொள்கிறேன். நமக்கு கிடைத்திருக்கும் வரங்களையும், கிடைக்கவிருக்கும் ஆசிர்வாதங்களையும்  நான் அடிக்கடி இனிமையாக நினைத்துக்கொள்வேன்.  
என் மனத்துக்கு  நெருக்கமான கார்ல், உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும்.. எல்லாமே  ‘பேசி இருக்க வேண்டும்’ என்பதோடு நிற்கிறது.  ஆனால், அம்மா இதனை இதற்கு மேலும்  பொறுத்துக்கொள்ள  மாட்டார். என்னிடமிருந்து என் பேனாவை எடுத்துக்கொள்வாள்.  என்னுடைய  அன்பான, ஆழமான  வாழ்த்துகளைக்கூட என்னால் வெளிப்படுத்த முடியாது. தூரத்திலிருந்து உங்களின் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தங்களையே அனுப்புகிறேன்.

என் அன்புக்குரியவரே,   இதற்கு மேலும்  என்னால் எழுத முடியாது. என் தலை முழுவதும்.... உங்களுக்கே தெரியும்! என் சின்ன  பையனே.. உங்களை நான் திருமணம் செய்துக்கொள்வது  நிச்சயம்தானே?

விடைபெறுகிறேன்..என் அன்பே
என்றும் காதலுடன்,
ஜென்னி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்