மூன்றாவது புகையின்போது பிடிபட்டால் மரண தண்டனை! - ரஷ்யா புகைப் பழக்கத்தின் ‘அடடே’ வரலாறு #History | Smoking habit of Russians - a history

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (05/05/2017)

கடைசி தொடர்பு:14:32 (05/05/2017)

மூன்றாவது புகையின்போது பிடிபட்டால் மரண தண்டனை! - ரஷ்யா புகைப் பழக்கத்தின் ‘அடடே’ வரலாறு #History

இன்று உலகிலேயே அதிகம் சிகரெட் ஊதித்தள்ளும் நாடுகளில் மூன்றாமிடத்தில் உள்ளது ரஷ்யா! அதிலும் 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள் புகைபிடிப்பதில் முதலிடத்தில் உள்ளது. 12 முதல் 16 வயதுவரை சிறுவர்கள் தாரளமாக அங்கு புகைபிடிக்கிறார்கள். மொத்தமாக சிகரெட் பிடிப்பவர்களில் 33% பேர் 20 வயதுக்குக் கீழுள்ளவர்கள். இளைஞர்களில் 55% பேர், இளைஞிகளில் 40% பேர் புகை பிடிப்பது அங்கு சாதாரணம்!

சிகரெட்

ஆண்டுக்கு 4 லட்சம் பேர் புகைபிடித்தல் காரணமாக இறக்கிறார்கள். பலவித நோய்களுக்கும் காரணமாக புகைப் பழக்கம் இருக்கிறது. அதிபர் புடின் புகைபிடித்தலைத் தடுக்க பல விதமாக சட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார். ம்ஹூம் யாரும் மசியக்காணோம். இப்படி, சிகரெட் வெறியன் என்று பெயரெடுத்திருக்கும் ரஷ்யா ஒரு காலத்தில் புகைபிடித்தல் என்றால் என்னவென்றேதெரியாத அம்பி நாடாக இருந்தது என்பதுதான்.. சாமியார் ரௌடியான கதை!  

1580கள் வரைக்கும் ரஷ்யர்களுக்கு புகையிலை உபயோகமோ, அதன் சுகமோ தெரியவில்லை.. ஏனைய உலகநாடுகள் ஊதித்தள்ளிக்கொண்டிருந்தபோது, அவர்கள் பனிக்காலத்தில் வாயில் வரும் பனிப்புகையைத்தான் ஊதிக்கொண்டிருந்தார்கள். முதலில் 1544 ஆண்டில்  பிரிட்டிஷ் வணிகக் கப்பல் ஒன்று புயலில் ரஷ்யத் துறைமுகத்தில் கரை ஒதுங்குகிறது. அதில் இருந்த பல பொருட்களில் புகையிலையும் ஒன்று.

அதனைக் கையிலெடுத்தவர்கள், அதைச் சுவைத்துப் பார்க்கிறார்கள், கடித்து, புகைத்துப் பார்த்துவிட்டு விட்டுவிடுகிறார்கள். அது என்ன பொருள், எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற தெரியவில்லை. பிறகு, 1584ல் ரஷ்ய மன்னன் இவான் , பாதரச விஷம் கொடுக்கப்பட்டு இறந்துபோகிறான். அவனது மகன் ஃபியோதர் 1, மனநிலை சரியில்லாத மாற்றுத்திறனாளி. அவன் ஆள முடியாது என்பதால், மருமகன் போரிஸ் ஆட்சிப்பொறுப்பேற்கிறான்.

திடீர் யோகம் அடித்த போரிஸுக்கு தலைகால் புரியவில்லை. உடனே பிரிட்டனைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறான். அங்கு போய் தன் பட்டாளத்துடன் கும்மாளம், கூத்து என்று இருக்கிறான். அப்போது ஓவராக ஆடியதில் ஒரு விடுதியில் குடித்து முடித்தபின் பில் கட்ட காசு இல்லை. அப்போது அவன் யாரென்று தெரிந்துகொண்ட ஒரு பிரிட்டிஷ் வியாபாரி, அவனது பில் 500 பவுண்டுகளைக் கட்டுகிறார். ‘நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்?’ என்று போரிஸ் போதையில் உளற, காரியக்கார அந்த வியாபாரி, “இந்தக்காசை எனக்குத் திருப்பித் தரவேண்டாம். நீங்கள் ஊருக்குப்போகக்கூட நானே காசு தருகிறேன். கவலை வேண்டாம். ஆனால், அதற்கு பதிலாக, நான் ரஷ்யாவில் புகையிலை வியாபாரம் செய்ய அனுமதி தரவேண்டும்” என்கிறார்.

“அதுக்கென்ன எடுத்துக்கோ!” என்று போரிஸ் ’மதர் ப்ராமிஸ்’ செய்ய.. போரிஸ் திரும்பிச்செல்லும் கப்பலிலேயே, 2000 பெட்டிகள் புகையிலையும், சுருட்டும் ரஷ்யா நோக்கிப் பயணிக்கிறது. அப்படி, BRITISH TOBACCO TRADE COMPANY ரஷ்யாவில் கால் பதிக்கிறது. முதலில் துறைமுக நகரமான Archangelsk -ல் புகையிலையும் சுருட்டும் விற்பனை ஆரம்பிக்கப்படுகிறது. இதே துறைமுகத்தில்தான், 1544ல் பிரிட்டிஷ் கப்பல் கரை ஒதுங்கியது. ஏற்கனவே சுவைத்துப் பார்த்து விட்டுவிட்டார்கள் என்று படித்தோமல்லவா.. அதே துறைமுகம்.   

இது நடந்து சில மாதங்களுக்குப்பிறகு, அந்த வியாபாரி நேராக போரிஸைச் சந்திக்கிறார். “நீங்க அனுமதி கொடுத்தீங்க சரி, ஆனால் ரஷ்யர்கள் யாரும் சிகரெட், சுருட்டை விரும்பி புகைக்க மாட்டேங்கிறாங்க. நீங்கதான் ஏதாவது செய்யணும்.! இனிமே விக்கிற ஒவ்வொரு சிகரெட்டுக்கும் நான் உங்களுக்கு கப்பம் கட்டிடுறேன்” என்று புலம்ப, பழக்கத்துகாகக் கொலைகூடச் செய்யும் போரிஸ், உடனே ஒரு சட்டம் இயற்றுகிறான். ‘ரஷ்யர்கள் அனைவரும் கட்டாயம் புகைபிடிக்கவேண்டும், இல்லையேல் அபராதம், தண்டனை வழங்கப்படும்!’  

தெரிந்தோ தெரியாமலோ ரஷ்யர்கள், கட்டாயமாக புகைபிடிக்கத் துவங்கிவிட்டார்கள். ஊரெங்கும் புகை மண்டலம்! அரச கட்டளைக்குப் பயந்து புகைபிடிக்கத் துவங்கியவர்கள், ஆசைக்குப் பிடிக்கத் துவங்கிவிட்டார்கள். அப்புறம், பிரிட்டிஷ் வியாபாரிக்கு அமோக அறுவடை. ஆனால், போரிஸுக்குப் பிறகு வந்த மன்னர்கள், அடுத்த 50 ஆண்டுகளில் ரஷ்யர்களின் புகையிலை போதைக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை. நிறைய தீ விபத்துக்கள், மரணங்கள், வேலை செய்யுமிடங்களில் பிரச்னைகள், புகையிலையை வைத்து மாஃபியாக்கள் என்று உருவாகி ஆட்டம் போடுகிறார்கள். இந்தப்பஞ்சாயத்துகளைச் சகித்துக்கொள்ளமுடியாத மன்னன் ஜார் அலெக்ஸிஸ், 1634ல் புகையிலைக்கு தடை கொண்டுவருகிறான். புகைபிடிப்பது தடை செய்யப்படுகிறது. முதல் தடவை பிடிக்கப்பட்டால் அபராதம் , இரண்டாம் முறை என்றால், மூக்கு வெட்டப்படும். மூன்றாம் முறை பிடித்தால் மரண தண்டனை என்று கட்டளையிடுகிறான். இதுவும் அமலுக்கு வந்து, கள்ள சிகரெட் சந்தை, கள்ள புகையிலைக் கடத்தல் என்று அந்த வகையில் குற்றங்கள் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனாலும் ரஷ்யர்கள் மெதுவாக புகையிலைப்பழக்கத்தைக் கைவிடத் துவங்குகிறார்கள்.

இப்போது கதையில் இன்னொரு ட்விஸ்ட்.. மீண்டும் 1689ல் பீட்டர் த கிரேட் என்றழைக்கப்பட்ட ஜார் பீட்டர், ஹாலந்துக்கு கப்பல் கட்டுமானம் படிக்கப் பயணிக்கிறார். அவருக்கு, ஒரு அரியவகை, தலைசிறந்த சுருட்டு ஒன்றை அழகான வேலைப்பாடு கொண்ட பெட்டியில் வைத்து, ஒரு டச்சுக் கலைஞர் பரிசளிக்கிறார். மன்னன் அதை இழுத்துப்பார்த்துவிட்டு, “ஆஹா.. இப்படிப்பட்ட ஐட்டத்தையா நம் நாட்டுக்குள் விடாம வம்பு பண்ணிட்டிருக்கோம்?” என்று நினைத்தானோ என்னவோ, மீண்டும் ஜகஜ்ஜோதியாக புகையிலைக்கு வாசலைத் திறந்துவிட்டான். அனைத்துத் தடைகளையும் நீக்கிவிட்டான். சிகரெட், சுருட்டுப் பிடிப்பது கௌரவம் என்று அறிவித்தான். புகையிலை விற்பதற்கு மோனோப்போலியாக ஒரு நிறுவனத்துக்கு ஏழு ஆண்டுக்கான லைசென்ஸ் கொடுத்து அதற்காக 2 லட்சம் பவுண்டுகளும் பெற்றுக்கொள்கிறான். அவனும் எப்போதும் பைப்பும் வாயுமாகத் திரிந்ததாகக் கேள்வி.  அவனுக்கு முன்னால், யாராவது புகைக்காமல் இருந்தால், அவர்களை அழைத்து சிகரெட் எப்படி பற்றவைப்பது என்று கற்றுக்கொடுத்திருக்கிறான். அன்று பற்றவைத்தவர்கள்தான் .. இன்றும் பல்வேறு சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தவே முடியாமல் திணறும் வகையில் ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக்கதையை நீங்கள் டாஸ்மாக்கோடு தொடர்பு படுத்திக்கொண்டால், நான் பொறுப்பல்ல மக்களே! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்