Published:Updated:

போயஸ்கார்டனின் நிலை... காஸ்மோ பாய்ஸ்... எங்கே செல்கிறார் கரன் சின்ஹா..? #NewsChat

போயஸ்கார்டனின் நிலை... காஸ்மோ பாய்ஸ்... எங்கே செல்கிறார் கரன் சின்ஹா..? #NewsChat
போயஸ்கார்டனின் நிலை... காஸ்மோ பாய்ஸ்... எங்கே செல்கிறார் கரன் சின்ஹா..? #NewsChat

போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்க ஆளில்லை...

போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்கக்கூட யாருமில்லையாம்! இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? ஜெயலலிதாவின் உதவியாளர்கள் விழிபிதுங்கி வருகிறார்கள்.  சில மாதங்களுக்கு முன்புவரை, போயஸ்கார்டன் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அங்கு கட்சியின் வி.ஐ.பி-க்கள் வரவே பயப்படுகிறார்கள். குறிப்பாக, சசிகலா குடும்பத்தினர் வரத் தயங்குகிறார்கள். காரணம்..ஜெயலலிதாவின் ஆவி இங்கே நடமாடுகிறது என்ற வதந்தி பரவியது தான். மாடியில் உள்ள ஜெயலலிதா, அறை பூட்டப்பட்டு கிடக்கிறது. ஜெயலலிதா ஆசையாக வளர்த்து வந்த அழகான நாய் ஒன்று, பல வருடங்களுக்கு முன்பு  இறந்து விட்டது. தற்போது அந்த நாயின் மரண ஒலம் அடிக்கடி கேட்பதாக கார்டன் ஊழியர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஜெயலலிதா விரும்பும் சேலைகளை சப்ளை செய்து வந்தவர் தி.நகரைச் சேர்ந்த ஒரு பெண்மணி. அவரிடம் கனவில், "அந்த சேலை என்ன ஆச்சு?...இது என்ன ஆச்சு?" என்றெல்லாம் ஜெயலலிதா கேட்கிறாராம். ஜெயலிதாவுக்கு மிகவும் பிடித்தவர் வயதான சமையல்கார பெண்மணி. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக போயஸ்கார்டனில் வசித்து வந்தவர். அவருக்கும் இதே கதி! அந்த பெண்மணியின் கனவில் ஜெயலலிதா வந்து, 'என்ன மெனு?' என்று கேட்டதால், அவரும் போயஸ்கார்டனை விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.. இதெல்லாம் ஒருபுறமிருக்க... போயஸ்கார்டனில் கூர்க்காக்கள் ஆறு பேர், தனியார் செக்யூரிட்டிகள் 6 பேர். உதவியாளர்கள் ஆறு பேர் பணியில் உள்ளனர். அவர்களில் பூங்குன்றன், கார்த்திகேயன், சிவக்குமார் ஆகிய மூவரும் தினமும் காலையில் போயஸ்கார்டனுக்கு வந்துவிட்டு அலுவலகப் பணிகளைப் பார்த்துவிட்டு மாலை கிளம்பிப் போகிறார்கள். நந்தகுமார், வினோத், கிருஷ்ண மோகன் ஆகிய மூன்று பேரும் பெங்களூருவில் வீடு பிடித்து தங்கியிருக்கிறார்கள். அங்கிருந்தபடியே, சசிகலா மற்றும் இளவரசிக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போயஸ்கார்டன் எதிரில் உள்ள ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பில்டிங்கில் பணியாளர்களுக்கு முன்பெல்லாம் விதவிதமான காலை டிபன் செய்து தருவார்களாம். இப்போது இட்லி மடடும்தான் சப்ளை ஆகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருதடவைதான் சம்பளம் தருகிறார்களாம். இதைச் சொல்லி கண்ணீர் விடுகிறார்களாம் ஊழியர்கள். "ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி தினகரன் கோஷ்டி, ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி, முதல்வர் எடப்பாடி கோஷ்டி, தீபா கோஷ்டி...என்று பலரும் அரசியல் செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு போயஸ்கார்டனே மறந்து விட்டது. மேடையில் மட்டும்தான் வாய்கிழியப் பேசுகிறார்கள். அங்கு வேலைபார்க்கும் அடிப்படை பணியாளர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களே? வீடு பாழடைந்து வருகிறது. எங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பண உதவி செய்தால், நாங்களும் வேறு வேலை தேடிப்போய் விடுவோம்" என்று புலம்பி வருகிறார்களாம் அவர்கள்.

காஸ்மோ பாய்ஸ்

* முதல்வர் எடப்பாடி நிர்வாகத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? பவர்ஃபுல் மீடியேட்டர்களாக வலம் வருகிறவர்கள் மூவர். ஒருவர், ஈரோட்டுக்காரர். இவர் அமைச்சர் செங்கோட்டையன் நிழலில் இருக்கிறார்: இன்னொருவர், 'பட்டுக்கோட்டை' அடைமொழியை கொண்டவர். இவர் மின்துறை அமைச்சர் தங்கமணியின் பெயரைச் சொல்லித் திரிகிறார். முதல்வர் எடப்பாடியின் அபிமானத்துக்கு உரிய மூன்றாவது நபர் யார் என்றால், 'மை' என்கிற அடைமொழியைக் கொண்டவர். சேலத்தைச் சேர்ந்த இவர் சொல்லுவதெல்லாம் ஓ.கே. ஆகிறதாம். இந்த மூவர் கோஷ்டி அண்ணாசாலையில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் முகாமிட்டிருக்கிறார்கள். இங்குதான், ரகசிய சந்திப்புகள், ஆலோசனைகள் நடக்கின்றன.

இரட்டைக்குழல் துப்பாக்கிகள்?

* எடப்பாடி பழனிசாமியும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் நெருங்கிய உறவினர்கள். அந்த வகையில், எடப்பாடியாரின் மகன் மிதுனும், தங்கமணியின் மருமகன் தினேஷும் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். இவர்களை இரட்டைக்குழல் துப்பாக்கி என்றே கொங்கு மண்டல அரசியல் பிரமுகர்கள் வர்ணிக்கிறார்கள். எடப்பாடியாரின் உள் வட்டத்தில் புதிய நபர்கள் யாரும் புகுந்து விடாமல் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். சமீபத்தில் போடப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மாற்றங்களின் பின்னணியில் இவர்களின் ஆலோசனையும் உண்டாம். தங்கமணியின் மின் துறையின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக மகேந்திரன் ஐ.பி.எஸ்-ஐ திடீரென நியமித்தன் பின்னணி புரியாமல், மின்துறை உயர் அதிகாரிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். அதன் ரகசியம் தங்கமணிக்கு மட்டுமே தெரியுமாம்.

சுஜீவனின் பிஸினஸ் தொடர்புகள் பற்றி விசாரணை ஆரம்பம்

* சசிகலாவின் பாதுகாவல் பணியில் இருந்த ஒரு பிரமுகர்தான் சுஜீவன், போயஸ்கார்டனுக்குள் நுழைய ரூட் போட்டுக் கொடுத்தவராம். வனத்துறை அமைச்சராக திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தன் ஆனதும் சுஜீவனின் உபயத்தில்தானாம். போயஸ்கார்டனில் இருந்த அந்த பிரமுகர் தற்போது எடப்பாடியாருடன் வலம் வருகிறாராம். அதே நேரத்தில், கோவையைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலருக்கும் சுஜீவனை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காதாம். கோவை ஆர்.எஸ்.புரம் ஏரியாவில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்தின் ஒரு பகுதியை சசிகலா உத்தரவின்பேரில் பர்னிச்சர் கடை நடத்த சுஜீவன் தரப்புக்கு தரப்பட்டதாம். இதை உள்ளூர் கட்சிக்காரர்கள் எதிர்த்தனர். அவர்கள் தற்போது சுஜீவனின் பிஸினஸ் விவகாரங்களைச் சேகரித்து போலீஸிடம் கொடுக்கப் போயிருக்கிறார்கள். 'போனஸ்' என்கிற அடைமொழியுடன் கூடிய ஒரு பிரமுகருக்கு சுஜீவனின் பிஸினஸ் நெட்வொர்க் முழுக்கத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார்கள். "கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை தொடர்பான விஷயங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம்" என்று சொல்லி போலீஸார் அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்களாம். சுஜீவனின் அரசியல் எதிரிகளை தற்போது மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!

மின் வெட்டைச் சமாளிக்க நிலக்கரி இறக்குமதியா?

* தடையில்லா மின்சாரம் வழங்க எடப்பாடி பழனிசாமி அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக, மத்திய அரசின் தரக்கட்டுப்பாடு பிரிவின் அனுமதியுடன் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை விலைக்கு வாங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதைக் கேள்விப்படட தி.மு.க. மேலிடம் அலர்ட் ஆகியிருக்கிறது. மின்துறையில் உள்ள தி.மு.க அனுதாபிகளை முடுக்கிவிட்டு, நிலக்கரி விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கச் சொல்லியிருக்கிறது.

அவர்தான் இயக்குகிறார்...

* ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் வெங்கட்ராமன். பணி நீட்டிப்பு தரப்பட்டு, அதே பதவியில் தொடர்ந்தார். சில முக்கிய துறைகளின் நிர்வாகத்தை இவரே கவனித்து வந்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சசிகலா முதல்வர் ஆக ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, வெங்கட்ராமனின் பணி நீட்டிப்பு கேன்சல் ஆனது. அவரும் வீட்டுக்குப் போய்விட்டார். சசிகலாவுக்கு வெங்கட்ராமனை சுத்தமாகப் பிடிக்காது. முதல்வரைச் சுற்றிலும் இவருக்கென அதிகாரிகள் லாபியை வைத்துக்கொண்டு சசிகலாவை நுழைய விடாமல் தடுத்து வந்தார். அவருக்கு டெல்லி அதிகாரிகள் வட்டாரத்தில் தொடர்புகள் உண்டு. அதை வைத்து, 'தினகரன் உள்ளிட்ட தங்கள் குடும்பத்தினர் பற்றிய ரகசிய விவரங்களை மத்திய அரசுக்கு இவர்தான் போட்டுக் கொடுத்திருப்பாரோ?' என்று சசிகலா குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கரன் சின்ஹா மத்திய அரசுப் பணிக்கு போகிறார்?

* சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கிறார் கரன் சின்ஹா. இதற்கு முன்பு, கமிஷனராக இருந்த ஜார்ஜ்விட்டுவைத்த பணிகளை துரிதமாக செய்து வருகிறார். அந்த வகையில், சென்னை போலீஸ் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்து வருகிறார். அவரும் மத்திய அரசுப் பணிக்கு விரைவில் செல்ல இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அடுத்த கட்டுரைக்கு