‘இதுக்கெல்லாம் எண்ட் கார்டே கிடையாது’ - செல்லூர் ராஜுவின் அடுத்த அதிரடி! | A satirical dig on Sellur Raju's recent statement

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (07/05/2017)

கடைசி தொடர்பு:10:46 (07/05/2017)

‘இதுக்கெல்லாம் எண்ட் கார்டே கிடையாது’ - செல்லூர் ராஜுவின் அடுத்த அதிரடி!

நாங்கதான் முன்னாடியே சொன்னோம்ல, 'செல்லூர் ராஜூவின் வைகை அணை தெர்மோகோல் விடல் 'சம்பவம்' போல மீம்ஸ் பார்ட்டிகளுக்கு அடுத்த நல்ல ஆபரேஷனை அவரே கொடுத்தாதான் உண்டு'ன்னு. இதோ, பத்திரிக்கையாளர்கள், 'கடும் வறட்சில எங்கேயும் தண்ணியே இல்லையே, மதுரையில கள்ளழகர் எப்படி ஆத்துல இறங்குவார்?'ன்னு கேட்டதுக்கு, முக்காலமும் உணர்ந்த முனிவர் செல்லூர் ராஜு, 'போன வருஷம் எப்படி இறங்குனாரோ, அப்படித்தான் இந்த வருஷமும் இறங்குவார்'ன்னு வரலாற்று சிறப்பு வாய்ந்த வார்த்தையை விட்டுட்டாரேப்பு. போன வருஷம் எப்படி அழகர் வைகை ஆத்துல இறங்குனார்ங்கிறது இருக்கட்டும். இந்த வருஷம் அழகர் இறங்க என்னன்ன யோசனைகளை செல்லூர் ராஜு வைத்திருக்கிறார் என்று நம்பத்தகுந்த சோர்ஸ்களிடம் ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சுக்கு  சேகரித்தோம். அவற்றை ஓப்பன் பண்ணினா....

செல்லூர் ராஜு


இப்போ தண்ணி வராம வைகை ஆத்துல பள்ளிகூட பசங்க எல்லாம் மட்டை புடிச்சு, பந்தை வீசி கிரிக்கெட் விளையாடுறாங்க. வைகைபுயல் வடிவேல் வேற மதுரைக்காரர்தான். அதனால், அவரை விட்டு வைகை ஆத்துக்குள்ள அங்கேயே கிரிக்கெட் விளையாடவிடலாம். இங்கிலீஸ்காரன் படத்துல அவர் மட்டையால டொக்கு டொக்குன்னு பூமியில தட்டும்போது பொத்துக்கிட்டு தண்ணி ஊத்துமில்லையா?. அப்படி தண்ணி ஊத்து கிளம்பி, வைகை ஆத்துல தண்ணீர் ஓட வைத்துவிடும்.

அப்படியும் ஒத்து வரலையா, வைகை ஆறு முழுக்க காட்டுத்தனமா ஓடும் கானல்நீரை பானை நீராக மாற்றும் விஞ்ஞான யுக்தியை நாசா விஞ்ஞானிகளின் கூட்டுச்சதியோடு.. ஸாரி, கூட்டோடு செய்ய இருக்கிறாராம். அதாவது, வெயிலை இழுத்து கரன்டாக கபால்ன்னு அனுப்பும் சோலார் சிஸ்டம் போல, கானல் நீரை உண்மை நீராக மாற்றி ஆறு நிறைய ஓடவிடும் சிறப்பு மெஷினை ரஷ்யாவில் இருந்து வரவழைக்க போகிறாராம். பார்த்து சின்ன மெஷினா வாங்குகங்கப்பு.
 
நூறுநாள் வேலை திட்டம் மூலமாக அக்கம்பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் அழைத்து வந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்து வர வைத்து, ஆத்துல ஊத்த வைத்து, அழகர் ஆத்துல இறங்க வழிவகை செய்ய போகிறாராம். இதற்காக, அங்கங்கே ஸ்பீக்கர்கள் கட்டி, 'தண்ணி குடம் எடுத்து, பக்தர்கள் நடந்து வந்தா, நிறையுது ஆறு நிறையுது'ன்னு வைகாசி பொறந்தாச்சு பட பாட்டை ரீமிக்ஸ் விட்டு, அப்படியே வைகை ஆறு முழுக்க அலறவிடும் திட்டம் இருக்காம். அதை கேட்டு, பக்தர்கள் உற்சாகமாகி இன்னும் நிறைய தண்ணி கொண்டு வந்து ஊத்துவாங்களாம். இப்பவே கண்ணைக் கட்டுதே!.

அப்படியும் இல்லையா, முதல்நாள் இரவே வேறு நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டு, வைகை ஆற்றுக்குள் நாலைந்து கிலோமீட்டருக்கு பல பெரிய சைஸ் டி.விக்களை வைத்து மக்களை குலுங்கி குலுங்கி அழ வைத்த மொரட்டு சீரியல்களை ஓட விட போகிறாராம். இதனால், வைகை ஆத்துக்குள் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த சீரியல்களை பார்த்து கேவி கேவி அழுவார்கள் இல்லையா?. அப்போது, அவர்களின் கண்களில் இருந்து கட்டுக்கடங்காமல் பெருகும் கண்னீரை ஆற்றுக்குள் திருப்பிவிட்டு, திருப்தியாக அழகரை ஆற்றில் இறக்க பக்கா பிளான் அவரது கைவசம் தயாராம். ஸ்வப்பப்பப்பா......

இப்படியும் தண்ணி கிடைக்கலையா, ஊர்ப்பட்ட கழுதைகளை வைகை ஆற்றில் நிறுத்தி அவைகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தோ, இல்லைன்னா பெண்களை மொத்தமாக உட்கார வைத்து ஒப்பாரி வைக்கச் சொல்லி வராத மழையை வர வைத்து, வைகை ஆத்துல ஓடாத தண்ணியை ஓட வைத்து, அழகரை ஜாம் ஜாமென்று ஆற்றுக்குள் இறக்கும் 'பிரம்மாஸ்திர திட்டம்' இருக்கிறதாம். ரைட்டு!


டிரெண்டிங் @ விகடன்