வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (07/05/2017)

கடைசி தொடர்பு:07:43 (07/05/2017)

2017-ம் ஆண்டுக்கான ஜாவா பைக்ஸ் - இந்தியாவுக்கு வருமா? #Jawa

 

எஸ்.யூ.வி-களுக்குப் பெயர்பெற்ற மஹிந்திரா நிறுவனம், பழம்பெரும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்றான ஜாவாவை கடந்த ஆண்டு வாங்கியது. அந்த பிராண்டை, 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மறு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது மஹிந்திரா. செக் குடியரசைச் சேர்ந்த ஜாவா, ஐரோப்பிய டூவீலர் சந்தைகளில் இரண்டு புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதுகூட `2-ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்கின் தயாரிப்பாளர்' என்று பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஜாவா அறியப்பட்டாலும், இந்நிறுவனம் தற்போது களமிறக்கியுள்ள `350 OHC', `660 விண்டேஜ்' எனும் இரண்டு புதிய பைக்குகள், 4 ஸ்ட்ரோக் யூரோ-IV இன்ஜின்களைக் கொண்டுதான் இயங்குகின்றன. இதை காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்! 


ஜாவா - வரலாறு

 

ஜாவா


1929-ம் ஆண்டில் செக் குடியரசில் பைக்குகளைத் தயாரிக்கத் தொடங்கிய ஜாவா நிறுவனம், கடந்த 1960-ம் ஆண்டில் இந்தியாவில் கால் பதித்தது. அப்போது மக்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இது கடுமையான போட்டியாக இருந்தது. எளிமையான தொழில்நுட்பம், தனித்தன்மையான 2 ஸ்ட்ரோக் இன்ஜின் சத்தம், நீண்ட உழைப்புக்கும் இவை புகழ்பெற்றது. இன்றளவும் இந்திய சாலைகளில் ஜாவா பைக்குகள் பயன்பாட்டில் உள்ளதே, இதன் தரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. 100சிசி-க்கும் அதிகமான 2 ஸ்ட்ரோக் பைக்குகள் வெளிப்படுத்தும் புகை அளவுகளில் எழுந்த பிரச்னையின் காரணமாக, 1996-ம் ஆண்டில் (Yezdi 175, 250 Monarch, Deluxe Road King, CL II 350) பைக்குகளின் உற்பத்தி முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில்தான் மற்றுமொரு பிரபல 2 ஸ்ட்ரோக் பைக்கான `யமஹா RX-100' பைக்கும், இதே காரணத்தால் மூடுவிழா கண்டது.

தற்போது நிகழ்காலத்தில், ஜாவா புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் பைக்குகளைப் பற்றிப் பார்ப்போம்.


2017 ஜாவா 350 OHC:

 

ஜாவா


ஜாவாவின் 2017-ம் ஆண்டுக்கான புதிய மாடல்தான் `350 OHC'. இதன் டிசைனும் 1970-களில் இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த டைப் 634 - 2 ஸ்ட்ரோக் 350 பைக்குக்கு மரியாதை செலுத்தும்படியாகவே அமைந்திருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 397சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - இரட்டை எக்ஸாஸ்ட் கூட்டணியை, சீன நிறுவனமான ShineRay-விடமிருந்து வாங்கியுள்ளது ஜாவா. இது ஹோண்டாவின் XR400 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பது கவனிக்கத்தக்கது. Delphi நிறுவனம், இதற்கான ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தைத் தயாரித்துள்ளது. 27.73bhp@6,500rpm பவரையும், 3.06kgm@5,000rpm டார்க்கையும் இது வெளிப்படுத்துகிறது. 160 கிலோ எடையுள்ள 350 OHC, 130 கிமீ வேகம் செல்லும் என்கிறது ஜாவா.

 

ஜாவா


350 OHC பைக்கின் க்ளாசிக், பிரிட்டிஷ் ரோட்ஸ்டர் தோற்றத்துக்கு ஜாவாவுக்கே உரித்தான வடிவத்தில் இருக்கும் 12 லிட்டர் க்ரோம் பெட்ரோல் டேங்க், வட்டமான ஹெட்லைட், நீளமான இருக்கை மற்றும் அனலாக் டயல்கள் உதவுகின்றன. 19 இன்ச் முன் பக்க மற்றும் பின் பக்க 18 இன்ச் ஸ்போக் வீல்களைக்கொண்டிருக்கும் இந்த பைக்கின் எடை 160 கிலோ மட்டுமே! 350 OHC பைக்கின் பின்புறம் டிரம் பிரேக் இருந்தாலும், ஜாவா வரலாற்றில் முதன்முறையாக, முன் பக்க 280மிமீ டிஸ்க் பிரேக்கில் ABS பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பு, கறுப்பு என இரண்டு கலர் ஆப்ஷன் உண்டு. செக் குடியரசில் CZK 99,930 என்ற விலையில் கிடைக்கும் இந்த பைக்கின் இந்திய மதிப்பு, கிட்டத்தட்ட 2.6 லட்சம் ரூபாய்.


2017 ஜாவா 660 வின்டேஜ்

 

ஜாவா


660 வின்டேஜ், முற்றிலும் புதிய தயாரிப்பு அல்ல. கடந்த 2011-ம் ஆண்டில் வெளியான Sportard மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன். இதில் இருக்கும் பேரலல் ட்வின் 660சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - இரட்டை எக்ஸாஸ்ட் செட்-அப்பை, இத்தாலிய நிறுவனமான Minarelli -இடமிருந்து வாங்கியுள்ளது ஜாவா. இது யமஹாவின் XT660 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் புதிய வின்டேஜ் மாடல், இந்த நிறுவனத்தின் பிரபல டைப் 634 போல மிகவும் பாரம்பர்யமிக்க பாணியிலான தோற்றத்தையேகொண்டிருக்கிறது. சிவப்பு, கறுப்பு என இரண்டு கலர் ஆப்ஷன்கள் உண்டு. 49bhp@6,000rpm பவரையும், 5.75kgm@6,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது 660 வின்டேஜ்.  

 

ஜாவா


இதை க்ளாசிக் டிசைனுடன்கூடிய ஸ்ட்ரீட் பைக்காகப் பொசிஷன் செய்துள்ளது ஜாவா. `198 கிலோ எடையுள்ள இந்த பைக், அதிகபட்சமாக 160 கிமீ வேகம் செல்லும்' என்கிறது ஜாவா! 19 இன்ச் முன் பக்க மற்றும் பின் பக்க 17 இன்ச் ஸ்போக் வீல்கள், 15 லிட்டர் க்ரோம் பெட்ரோல் டேங்க், முன்பக்க இரட்டை 305 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 220மிமீ டிஸ்க் பிரேக், சிங்கிள் பீஸ் சீட், அனலாக் - டிஜிட்டல் டயல்கள் ஆகியவை, இந்த பைக்கின் மற்ற அம்சங்கள். செக் குடியரசில் CZK 179,830 என்ற விலையில் கிடைக்கும் இந்த பைக்கின் இந்திய மதிப்பு, கிட்டத்தட்ட 4.7 லட்ச ரூபாய். இதனுடன், முன்பு சொன்னதுபோலவே, ஸ்க்ராம்ப்ளர் போன்ற டூயல் பர்ப்பஸ் Sportard மாடலும் உண்டு.


ஜாவா - இந்தியா?

350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்குகளை, ஜாவா இந்தியாவுக்கு கொண்டுவந்தால், பிதாம்பூரில் இருக்கும் தனது ஆலையில்தான் பைக் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஏனெனில், யூரோ-IV மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், 350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்கை, ஐரோப்பிய மற்றும் இந்தியச் சந்தையில் விற்பனை செய்வது சாத்தியமே! என்னதான் இந்தியாவில் 350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்குகள் தயாரிக்கப்பட்டாலும், அதன் விலை செக் குடியரசின் சந்தை மதிப்பின்படியே இருக்கும் என்றே தெரிகிறது. ஆனால், டிரையம்ப் போன்ற ரெட்ரோ டிஸைன் - மாடர்ன் தொழில்நுட்பம் உடனான அசத்தல் பேக்கேஜாக இவை இருப்பதால், பிரிமியம் விலை ஒரு மைனஸாக இருக்காது என்றே தெரிகிறது.

 

ஜாவா

 

2018 -ம் ஆண்டுக்குள்ளாக, ஜாவாவுக்கு எனப் பிரத்யேகமான டீலர்களையும் துவக்கும் எண்ணத்தில் மஹிந்திரா உள்ளது. ஆக யுட்டிலிட்டி செக்மென்ட்டில் சிறந்து விளங்கும் மஹிந்திரா, அந்த வெற்றியை இரு சக்கர வாகன தயாரிப்பிலும் பெற முயற்சிப்பது தெரிகிறது. தனது வருங்காலத் தேவையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருப்பதுடன், அதற்கான பாதையிலும் கவனமாக அடியெடுத்து வைத்திருக்கிறது. 2019-ம் ஆண்டுக்குள், ராயல் என்ஃபீல்டுக்கு மீண்டும் சவால் அளிக்கத் தயாராகும் ஜாவா, அதிக போட்டி நிலவும் இந்தியாவின் இரு சக்கர வாகன மார்க்கெட்டில் அசத்தும் என நம்பலாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்