அகதிகளின் ஓர் இரவு - துல்கர் படம் நினைவூட்டிய ஒரு கதை

CIA

 வறண்ட பாலைவனக் காடு. உங்களுக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது. உங்களோடு பயணிப்பவர் குறித்தும் உங்களுக்கு எதுவும் தெரியாது. யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எதுவும் புரியாது. கையில் இருக்கும் ஒரு கேன் தண்ணீரும் தீரும் நிலையில்... பகலில் அந்த வெப்பம் உங்கள் தோலை உரித்தெடுக்கும். இரவில் அந்தப் பாலைவனக் குளிர், உங்கள் எலும்புகளை உறையவைக்கும். உடலும் மனமும் மரத்துப் போயிருக்கும். உணர்வுகள் செயலிழந்துப் போயிருக்கும். உணர்ச்சிகள் செத்துப் போயிருக்கும். ஆனாலும், எப்படியாவது வாழ்ந்திட வேண்டும் என்ற  நம்பிக்கையில் தான் இந்தப் பயணம். ஒன்று வாழ்வு, அல்லது சாவு. மலைகள், காடுகள், ஆறுகள், பாலைவனம், துப்பாக்கி, பாம்புகள், விஷப் பூச்சிகள், தாகம், பசி என இன்னும் இன்னும் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்தால்... கடந்து உயிர் பிழைத்திருந்தால்... உங்களுக்கு வாழ வழி கிடைக்கலாம். அகதியின் ஒரு நிமிடம் இப்படித்தான் இருக்கும். எல்லாம் இருக்கும் நமக்கு இந்த வலியை உணர்ந்துகொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். அகதியாக இருப்பதென்பது நூறு மடங்கு வலி மிகுந்தது.

இதுவரை இந்திய சினிமாவில் காட்டப்படாத ஓர் பயண வழியை, அதன் வலியை காட்டியிருக்கிறது துல்கர் சல்மான் நடிப்பில், சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'காம்ரேட் இன் அமெரிக்கா' திரைப்படம். மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்ஸிகோ வழியாக உயிரைப் பணையம் வைத்து புலம்பெயரும் மனிதர்களின் பயணத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. தமிழ் சினிமாவில்கூட இதுவரை காட்டப்படாத விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் போட்டாவை இதில் காட்டியிருக்கிறார்கள். படத்தின் விமர்சனத்துக்குள்ளோ, அதன் கமர்ஷியல் அமசங்களுக்குள்ளோ நான் போகவில்லை. அந்தப் படத்தின் களம், படித்த சில பழைய கதைகளை நினைவூட்டியது. அதைப் பற்றி மட்டுமே பேச நினைக்கிறேன். 

மெக்ஸிகோ நாட்டின் கணக்குப்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானாவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் குடியேற முயல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்திய அமெரிக்க நாடுகளான கெளதமாலா, ஹண்டுராஸ், எல் சால்வேடார், நிக்காருகுவா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் கடக்கும் அந்தப் பாதையை ஸ்பானிய மொழியில், 'எல் கமினோ டெல் டியாப்லோ' என்று சொல்கிறார்கள். அதாவது, 'சாத்தான் நெடுஞ்சாலை' (Devils Highway).  பல நூறு ஆண்டுகளாகவே இந்தப் பாதைக்கு இந்தப் பெயர்தான் . ஒரு காலத்தில் சிவப்பிந்தியர்கள் இந்த வழியைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தூரத்துக்கு பரந்து, விரிந்திருக்கும் பாலைவனக் காடு. சாலை வழியாக அமெரிக்காவுக்குள் குடியேற நினைப்பவர்கள், இந்த வழியில்தான் சென்றாக வேண்டும். 

மெக்ஸிகோவில் 'எல் அல்பெர்டோ' என்றொரு சிறிய டவுன் இருக்கிறது. இதை 'அகதிகளின் ஊர்' என்று சொல்வார்கள். அந்தளவுக்கு அகதிகளால் நிறைந்த ஊர் இது. இங்கிருப்பவர்கள் அனைவருக்குமே 'அமெரிக்கக் கனவு' உண்டு. சில ஆண்டுகளுக்கு  முன்னர், இந்த ஊரில் இருந்தவர்களில் 90 சதவிகிதத்துக்கு அதிகமானோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். வயதான தாத்தா, பாட்டிகள் மட்டுமே இருந்தனர். பின்னர், அமெரிக்காவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள், தங்களின் 'அமெரிக்க கனவு' மீது நம்பிக்கை இழந்தோர் போன்றோர், எல் அல்பெர்டோவுக்கு மீள் குடியேற்றம் செய்ய ஆரம்பித்தனர்.

வாழ்வோ, சாவோ அதை நம் சொந்த மண்ணிலேயே செய்துவிட்டுப் போகலாம். அடையாளங்களை இழந்து ஏதுமற்றவர்களான அகதிகளாக நிற்பதைக் காட்டிலும், சொந்த மண்ணில் இருக்கும் வாய்ப்புகளைக்கொண்டு வாழலாம் என்ற எண்ணம், அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்களை ஒன்றிணைத்தது. தங்கள் ஊரைப் புனரமைக்கத் தொடங்கினர்.

இதையெல்லாம் கடந்து இந்த ஊர் அதிகம் புகழ்பெற்றதற்குக் காரணம், அகதிகள் வலி சொல்லும் ஒரு விளையாட்டை இவர்கள் உருவாக்கியதுதான். கடந்த 2012-ம் ஆண்டு 'ஈகோ அல்பெர்டோ' என்ற பூங்காவை ஆரம்பித்தார்கள். இங்கு 'நைட் வாக்' என்று ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது, எல்லைகளைத் தாண்டும் அகதிகளின் ஓர் இரவு எப்படி இருக்கும் என்பதை நேரடியாக அனுபவிக்கலாம்.

இரவு 9 மணிக்கு இது தொடங்கும். கும்பலான ஒரு வேனில் ஏற்றப்படுவார்கள். பாலைவனக் காட்டில் கொஞ்ச நேரம் நடப்பார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், எல்லையோரப் பாதுகாப்பு படைகள், திருடர்கள் என பல விஷயங்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என விளையாட்டாக இதில் உணர முடியும். இரவு 9 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயணம், காலை 5 மணி வரை நடக்கும். 

அகதிகளை கேவலப்படுத்துகிறார்கள், நாடு கடக்க மறைமுகப் பயிற்சிகளை வழங்குகிறார்கள் என இந்த ஊர் மக்களுக்கு பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தாலும்கூட 'அகதிகளின் வலியை' உணர்த்தவே தாங்கள் இதை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். 

அதேபோல, 'பீஸ்ட்' என்றொரு ரயிலின் கதை மிகவும் வேதனை மிகுந்தது. மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் சரக்கு ரயிலான இதில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் அகதிகள் தொங்கிக்கொண்டுப் போவார்கள். இந்த ஆபத்தான பயணங்களில் இதுவரை பல ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். ஆனாலும், வாழ்வதற்கு இறுதியாக இருக்கும் இந்த ஒரு வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என ஒவ்வொரு நாளும் தாங்கள் பிறந்து, வளர்ந்த, தங்கள் வேர்கள் படர்ந்திருக்கும் சொந்த நிலங்களைவிட்டு இந்த நொடிகூட எத்தனையோ கால்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

 - இரா.கலைச் செல்வன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!