Published:Updated:

“வாழ்க்கையில் முன்னேற இந்தி படியுங்கள்!” - எஸ்.வி.சேகர் டிப்ஸ்

“வாழ்க்கையில் முன்னேற இந்தி படியுங்கள்!” - எஸ்.வி.சேகர் டிப்ஸ்
“வாழ்க்கையில் முன்னேற இந்தி படியுங்கள்!” - எஸ்.வி.சேகர் டிப்ஸ்

“வாழ்க்கையில் முன்னேற இந்தி படியுங்கள்!” - எஸ்.வி.சேகர் டிப்ஸ்

‘மைல் கற்களில் ஹிந்தியை அழிப்பதற்கு பதில் தமிழில் எழுதினாலும் அதே அளவு தார்தான் தேவைப்படும். ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துங்கள்' என்று நடிகரும் பி.ஜே.பி-யின் மூத்த தலைவருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில் இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிக்க... அவரது கருத்துக்கு எதிராக சமூகவலைதளங்களில் இளைஞர்கள் கொந்தளித்து வருகிறார்கள். இந்த நிலையில், மத்திய பி.ஜே.பி அரசின் மொழிக் கொள்கை குறித்த நமது சந்தேகங்களுக்குப் பதில் கேட்டு எஸ்.வி.சேகரை சந்தித்தோம்....

''உங்களது ட்விட்டர் கருத்தின்மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள்?''

''யாருமே தாய்மொழியைப் படிக்கக்கூடாது, ஆங்கிலம் படிக்கக்கூடாது என்றெல்லாம் சொன்னால்தான் அது இந்தி திணிப்பு. இந்தி மூன்றாவது மொழியாக இருப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது? எனவே, இந்தியை தார் போட்டு அழிப்பதை விட்டுவிட்டு அதே தாரைக் கொண்டு தமிழில் எழுதிவிட முடியாதா என்ன? இப்படி ஆக்கப்பூர்வமாக சிந்திக்க ஏன் மறுக்கவேண்டும் என்பதுதான் என் கேள்வி. அடுத்த தலைமுறை கூடுதலாக ஒரு மொழியைப் படித்துக்கொள்வதை ஏன் தடுக்கவேண்டும்? எத்தனை காலத்துக்குத்தான் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது?''

''ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியில் எழுதுவதும், இன்னும் சில இடங்களில், வெறுமனே இந்தியை மட்டுமே எழுதுவதும் இந்தி திணிப்பு இல்லையா?''

''எல்லாவற்றையும் அழித்துவிட்டு இந்தியை மட்டுமே எழுதவேண்டும் என்று எஸ்.வி.சேகர் சொல்லவில்லை. எனக்கும் இந்தி தெரியாது. எனது தாய்மொழியும் தமிழ்தான். ஆனால், இங்கே அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த இந்திக்குப் பக்கத்திலேயே தமிழிலும் எழுதிவிட்டால் பிரச்னை முடிந்துபோய்விடும். அதைச் செய்யாமல், மக்களை உணர்ச்சிப்பூர்வமாகத் தூண்டிவிட்டு எதிர்க்கச் செய்வது நியாயம்தானா? 
எத்தனையோ ஆயிரம் கோடிகளை மட்டும் இலவசத்துக்காகவே ஒதுக்கி பட்ஜெட் போடுகிற தமிழக அரசு, ஒரு கோடியோ இரண்டு கோடியோ செலவழித்து தமிழ்நாடு முழுக்க புதிதாக தமிழிலேயே மைல் கற்களை எழுதி வைத்துவிட வேண்டியதுதானே?''

''தமிழ் மாணவர்கள் இந்தி படிப்பதால் என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது? என்று கேட்கிறீர்கள். தமிழ் மாணவர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்?''

''டெல்லி ஏர்போர்ட்டில், நம்ம திருநெல்வேலி பையன் ஒருவனைப் பார்த்தேன். அவ்வளவு அழகாக இந்தி பேசுகிறான். 'நம்ம ஊர் பசங்களும் இந்தி கத்துக்கிட்டா இங்கெல்லாம் எவ்வளவு வேலை வாய்ப்பு இருக்கு தெரியுமா?' என்று சொல்கிறான். இதுதான் எதார்த்தம். இந்தி படிக்கவில்லை என்றால், யாரும் செத்துப்போய்விட மாட்டார்கள். ஆனால், வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசையிருந்தால் இந்தி படித்துக்கொள்ளுங்கள். தமிழ் படித்தால், தமிழ்நாட்டுக்குள்ளேயே அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தால், அவன் தமிழைத் தவிர வேறு எதையும் படிக்க வேண்டாம்.''

''இந்தி பேசும் வட மாநில இளைஞர்களே வேலை வாய்ப்புதேடி தமிழகத்துக்குத்தானே வருகிறார்கள்?''

''இந்திக்காரன் இங்கே வர்றான்ல... அப்ப தமிழ்நாட்டுக்காரனும் ஏன் அங்கே போய் வேலை பாக்கமுடியாதா? நாளைக்கே ரயில்வே எக்ஸாம் இந்தில வருதுன்னா... இந்தியில் எழுதி நிறைய மார்க் வாங்கினால் கண்டிப்பாக வேலை கிடைக்கப்போகிறது.''

''தங்களது தாய்மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலங்கள் மீது வலுக்கட்டாயமாக மத்திய அரசு இந்தியை திணிப்பது, இந்தியாவின் பன்மைத்துவத்தை கெடுக்கும் செயல்தானே...?''

''மத்திய அரசின் ஆட்சி மொழி இந்தி. ஆக, அந்த மொழியை வைத்துத்தான் அது செயல்படும்.''

''கல்வி, வேலைவாய்ப்பில் மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதுதானே அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கை? ஆனால், மத்திய பி.ஜே.பி அரசு தொடர்ந்து இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பில் தீவிரமாக இருக்கிறதே...?''

''ஒவ்வொரு அரசுக்கும் ஒரு பாலிசி உண்டு. 28 கோடி பேருக்கு போடப்பட்ட சட்டத்தை இப்போது 100 கோடியைத் தாண்டிய பிறகும் கடைப்பிடித்துக்கொண்டிருப்பது சரியாக வராது. கம்ப்யூட்டர் வந்ததுக்குப் பிறகு எல்லோரும் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டோமா இல்லையா? அதேபோல், காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். தேவை இருப்பவர்கள் இந்தி படித்துக்கொள்ளட்டும்.''

''வழக்கொழிந்துபோன சமஸ்கிருத மொழியை மக்கள் மீது வலிந்து திணிப்பது, பி.ஜே.பி-யின் இந்துத்துவா கொள்கையை நிலை நாட்டும் செயல்தானே?''

''ஒரு மொழியை கற்றுக்கொள்வதில் எதற்கு மதத்தை கொண்டுவருகிறீர்கள்? ஜெர்மன்காரனே சமஸ்கிருதம் கற்றுக்கொள்கிறான். ஏற்கெனவே இந்தியாவில் இருந்த பழமையான மொழி சமஸ்கிருதம். அதனை கட்டாயம் படிக்கவேண்டும் என்று சொல்லவில்லையே... எல்லாவற்றையும் திணிப்பு என்று சொல்லாதீர்கள். இது மத்திய அரசின் பாடத்திட்டம். மாநில அரசான நீங்களும் அதற்கு சமமாக செய்வதை விட்டுவிட்டு மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டிருப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லை.''

''தென்னகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள்தான் இந்தியாவில் அதிகம். அப்படியிருக்க மைல் கற்களில் இந்தியை மட்டும் எழுதி வைப்பது எந்தவகையில், நியாயம்?''

''அந்த தென்னக்கத்து ஓட்டுநர்கள் எல்லோருமே இந்தி பேசுகிறார்களா இல்லையா? தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு இந்தியில்தானே எழுதும்?''

''ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி - என்ற தனது கொள்கையை நோக்கித்தானே நாட்டை இழுத்துச் செல்கிறது பி.ஜே.பி?''
''ஒரே தேசம், ஒரே இனம் என்றுதான் சொல்கிறோமே தவிர, ஒரே மொழி என்றெல்லாம் நாங்கள் சொன்னதில்லை. ஏனெனில், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடிப்படைதான் இந்தியாவின் பலமே! இங்கே நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும் 300-க்கும் மேற்பட்ட சாதிகளும் இருக்கின்றன.''

''நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனாலும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10-ம் வகுப்புவரை இந்தியை கட்டாயப் பாடமாக்குவது மொழித் திணிப்புதானே?''

''சி.பி.எஸ்.சி பாடத்திட்டமே மத்திய அரசில் வேலை பார்க்கக்கூடியவர்கள் மாற்றலாகிப் போகக்கூடிய இடங்களில் எல்லாம் கல்வி கற்பதற்கு வசதியாகத்தானே உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நீங்கள் ஏன் சி.பி.எஸ்.சி பள்ளியில் குழந்தைகளை சேர்க்கிறீர்கள்? மாநில வழிக் கல்வியில் படிக்கவேண்டியதுதானே?

நீங்கள் என்னதான் சொன்னாலும், நான் மத்திய அரசுக்கு எதிராகப் பேசமாட்டேன். நான் பி.ஜே.பி.! அடிப்படையாக மோடி கொண்டுவரும் தொலைநோக்குத் திட்டங்கள் அனைத்தும் சரியென்று நினைப்பவன் நான். அதுதான் நாட்டுக்கும் சரியாக வரும். இன்னும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மோடிதான் இந்தியாவின் பிரதமர்!''

அடுத்த கட்டுரைக்கு