Published:Updated:

’மை நேம் ஈஸ் பாகுபலி!’ - கேரளச் சிறுவனின் குஷி!

’மை நேம் ஈஸ் பாகுபலி!’ - கேரளச் சிறுவனின் குஷி!
’மை நேம் ஈஸ் பாகுபலி!’ - கேரளச் சிறுவனின் குஷி!

’மை நேம் ஈஸ் பாகுபலி!’ - கேரளச் சிறுவனின் குஷி!

ன் பெயர் ஸ்டைலிஷா... கேட்சியா இருக்க வேண்டும் என்பது இளைய தலைமுறையின் ஆசைகளில் ஒன்று. `குப்பம்மா', `சுப்பம்மா' எனப் பெயர் இருந்தால், வளர்ந்ததும் 'பெயர் வெச்சிருக்காங்க பாரு... பெயர்னு' எனப் பெற்றோரிடம் சண்டைபோடுவர். 'டேய்... அது நம்ம குலதெய்வப் பேருடா... பழிக்காதே'னு நம்மைச்  சமாதானப்படுத்துவார்கள். பிறகு, நாமே ஸ்டைலாக ஒரு பெயரைத் தேர்தெடுத்து வைத்துக்கொண்டு, நண்பர்களை அந்தப் பெயரிட்டே அழைக்கச் சொல்வோம். அவர்களோ, பெயருக்கு புனைபெயரைப் பயன்படுத்தினாலும் சில சமயங்களில் ஒரிஜினல் பெயரைச் சொல்லி நம்மை ஓட்டுவார்கள்; 'உன்னோட பேரு இதுதானே... ஊரை ஏமாத்திட்டுத் திரியுறியா?' என்று மானத்தை அடுத்த நாட்டுக்கே கப்பல் ஏற்றுவார்கள்.

 ‘பாகுபலி' படம், பிரபாஸுக்கு மட்டும் புகழைத் தந்துவிடவில்லை; கேரளாவைச் சேர்ந்த   ஒரு சிறுவனுக்கும்  மிகப்பெரிய குஷியைக் கொடுத்துள்ளது. ஆம், 'பாகுபலி' என்ற பெயர்கொண்ட ஒரு சிறுவன், இதுநாள் வரை பள்ளி நண்பர்களால் கேலிக்குள்ளானான். கால மாற்றத்தால், இப்போது 'நான்தான் பாகுபலி' எனப்  பெருமிதத்துடன்  உலாவருகிறான். `உன் பெயர் என்ன?' என்று கேட்காதபோதுகூட, 'ஹலோ... மை நேம் இஸ் `பாகுபலி'' என்று அவனே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறானாம்.

இந்தப் படம் வெளியாகும் வரை, இது போன்ற பெயரை நாம் கேள்விட்டிருக்கவே மாட்டோம். இந்தியாவில் பரவலாக அறியப்பட்ட பெயரும் அல்ல.  'பாகுபலி' என்றால், 'தோள் வலிமை மிக்கவன்' என அர்த்தம்.

கேரள மாநிலம் கொச்சியில் பெற்றோருடன் வசித்துவரும் ஜூனியர் பாகுபலி, இரு வருடங்களுக்கு முன்பு வரை பெற்றோருடன் தினமும் சண்டையிடுவானாம்.

'இது என்ன பெயர்?', 'யார்கிட்ட கேட்டுட்டு இந்தப் பெயரை எனக்கு வெச்சிங்க?' என்று ஒரே புலம்பல். பெற்றோரும் அவனை இத்தனை காலமாகச் சமதானப்படுத்தி வந்தனர். காலம் மாறியது. `பாகுபலி' முதல் பாகம் வந்த பிறகுதான்,  பெற்றோருடன்  சண்டையிடுவதை நிறுத்தியுள்ளான் அந்தச் சிறுவன். இரண்டாம் பாகம் வந்து சக்கைப்போடுபோட, பள்ளியே இவனுடைய சாம்ராஜ்யமாகிவிட்டது. பள்ளித் தோழர்கள் இவனைப் பார்க்கும்போதெல்லாம் `ஜெய் பாகுபலி..!' என்று சொல்கிறார்களாம்.

கொச்சியைச் சேர்ந்த கே.எம்.ஜெயராஜ்-சாரபாய் தம்பதியின் மகன் இந்த ஜூனியர் பாகுபலி. தற்போது ஒன்பது வயதாகும் இவன்,  ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்தப் பெயரை எப்படி செலெக்ட் செய்தீர்கள்? - என தந்தை ஜெயராஜிடம் கேட்டபோது...

என்னோட மூத்த மகனுக்கு `விஸ்வாமித்ரா'னு பெயர் வெச்சேன். இளையவன் பிறந்தப்போ அவனுக்கும் வித்தியாசமான பெயர் வெக்கணும்னு ஆசைப்பட்டுத் தேடினேன். ஜைன மதத்தில்தான் `பாகுபலி'ங்கிற பெயரைப் பார்த்தேன். வித்தியாசமா இருந்துச்சு; பார்த்ததும் பிடிச்சுப்போச்சு. `பாகுபலி'னு பெயர் வைக்க, வீட்டில் கடும் எதிர்ப்பு. அதையெல்லாம் சமாளிச்சுதான் இளையவனுக்கு இந்தப் பெயரை வெச்சேன். பாகுபலி வளர்ந்த பிறகு, எங்கிட்ட பல முறை `என்ன பெயர் இது?'னு சண்டைபோட்டிருக்கான்.  இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கான். முதல் பாகம் வந்தபோதே, ' `பாகுபலி'னு பையனுக்கு எப்படி பெயர் வெச்சிங்க?'னு நிறைய பேர் கேட்டாங்க. பதில் சொல்ல மாளல''  என்று சிரிக்கிறார்.

''முதல்ல இந்தப் பேரு எனக்கும் பிடிக்கவேயில்லை.ஃப்ரெண்ட்ஸ்கிட்ட `'பாகு'னுதான் கூப்பிடணும்'னு சொல்வேன். என்னை இப்போ பார்த்தா, `ஜெய் பாகுபலி..!' -ங்கிறாங்க. எங்க அப்பா எனக்கு சூப்பர் நேம் செலெக்ட்பண்ணி வெச்சிருக்கார்'' என சந்தோஷத்தில் திளைக்கும், ஜூனியர் பாகுபலியின்  ஆசை என்ன தெரியுமா? சீனியர் பிரபாஸை மீட் பண்ண வேண்டுமாம்!

அடுத்த கட்டுரைக்கு