பல வல்லரசுகளை இந்த குட்டித்தீவு எதில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது தெரியுமா? | Tokelau leads in Top-level domains World Map

வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (09/05/2017)

கடைசி தொடர்பு:16:25 (09/05/2017)

பல வல்லரசுகளை இந்த குட்டித்தீவு எதில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது தெரியுமா?

"மூளையில் உள்ள நியூரான்களைப் போல தான், நாம் அனைவரும் இணையத்தால் கனெக்ட் செய்யப்பட்டிருக்கிறோம்" என இன்டர்நெட் பற்றிக் குறிப்பிடுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். தொலைந்துபோன பைக் சாவியைக் கூட கூகுளில் தேடும் அளவுக்கு, இணையம் என்பது வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. இவ்வளவு ஏன்... இணையம் இல்லை என்றால் இந்த வரிகளை இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்க முடியாது.

மனிதர்களுக்குப் பெயரைப் போலதான் இணையத்தில் ஒவ்வொரு இணையதளங்களும் தனித்தனி டொமைன் பெயர்களால் அடையாளம் காணப்படுகின்றன. Google.com என்பது கூகுள் நிறுவனத்தின் டொமைன் பெயர் ஆகும். இதில் .com என்பது டாப்-லெவல் டொமைன் (அதியுயர் ஆள்களப் பெயர்) என அழைக்கப்படுகிறது. இதே போல ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி டாப்-லெவல் டொமைன்கள் உண்டு. உதாரணமாக .in என்பது இந்திய நாட்டின் டாப்-லெவல் டொமைன். சில விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி டொமைன் பதிவு செய்துகொள்ளலாம்.

இணைய சேவையைப் பொறுத்தவரை இந்தியா பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் இணைய தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-ம் ஆண்டு டிசம்பர் வரை, இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 39 கோடியாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்திய நாட்டின் டாப்-லெவல் டொமைனான .in என்பதன் கீழ், மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமான (22,21,531) இணையதளங்கள் பதிவாகியுள்ளன.

இன்டர்நெட் - டாப்-லெவல் டொமைன் மேப்

கிரேட் பிரிட்டனின் டாப்-லெவல் டொமைனை (.uk) பதிவு செய்யும் நிறுவனமான நாமினெட் (Nominet), டாப்-லெவல் டொமைன்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இணையதளங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலக நாடுகளின் மேப் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா தான் இதில் முதலிடம் பிடித்திருக்கிறது. சீனாவுக்குச் சொந்தமான .cn என்ற டொமைனில் 2 கோடிக்கும் அதிகமான இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக சுமார் 1.8 கோடி இணையதளங்களுடன் நியூசிலாந்து அருகே உள்ள டகலோ என்ற குட்டித்தீவுக் கூட்டங்களின் .tk டாப்-லெவல் டொமைனானது இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சுமார் 1.6 கோடி இணையதளங்களுடன் ஜெர்மனியின் டாப்-லெவல் டொமைனான .de மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வெறும் இரண்டு இணையதளங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும், ஆப்பிரிக்காவில் உள்ள கினி-பிசாவு நாட்டின் .gw என்ற டாப்-லெவல் டொமைன் தான் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

உலகில் அதிகம் பிரபலமான .com டாப்-லெவல் டொமைனின் கீழ் தான் அதிக இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் மொத்தம் 12.3 கோடி இணையதளங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது பொதுவான டொமைனாகப் பயன்படுத்தப்படுகிறது. இது எந்த நாட்டுக்கும் சொந்தமானது அல்ல.

டகலோ தீவு

உலக மேப்பில் லென்ஸ் வைத்துப் பார்க்கக்கூடிய அளவிலான சிறிய நாடான டகலோ, இந்த மேப்பில் சீனாவுக்கு அடுத்த பெரிய நாடாக உருவெடுத்துள்ளதுக்கு சுவாரசியமான பின்னணி இருக்கிறது. நான்கு சதுர மைல்களுக்கும் குறைவான பரப்பளவைக் கொண்ட நாடு தான் டகலோ. சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு சுமார் 1,500 பேர்தான் வசிக்கிறார்கள். டகலோ தீவுக்கூட்டத்துக்கு இன்னும் தனி நாடு அங்கிகாரம் இல்லை. நிதி நிலைமையைப் பொறுத்தவரை, இந்த நாடு இன்னும் நியூசிலாந்தைச் சார்ந்து தான் உள்ளது. 2012-ம் ஆண்டு இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு வருவாய் .tk என்ற டொமைன் மூலமாக தான் கிடைத்துள்ளது. தற்போதும் பெரும் அளவிலான வருவாய் டொமைன் பதிவுகளினால் கிடைத்து வருகிறது.

ஜூஸ்ட் ஜூர்பியர் என்ற டட்ச் நாட்டு தொழிலதிபர் இந்நாட்டின் டாப்-லெவல் டொமைனை தனது பெயரின் கீழ் பதிவு செய்துகொண்டார். இந்த டொமைனின் கீழ் இலவசமாக இணையதளங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இணையதளத்தின் உரிமை ஜூர்பியரிடம் மட்டுமே இருக்கும். விருப்பமானவர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, இணையதளத்தின் உரிமையை பெற்றுக் கொள்ளலாம். இப்படி பதிவு செய்யப்படும் இணையதளங்களில் விளம்பரங்களை இடம்பெறச்செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை டகலோ நாட்டிற்கு ஜூர்பியர் வழங்கிவிடுகிறார். இலவசமாக இணையதளத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் என்ற காரணத்தினாலேயே இந்த டாப்-லெவல் டொமைன் பிரபலமானது. தங்கள் நாட்டிற்கு வருவாய் கிடைப்பதால், டகலோ நாட்டினரும் இதை வரவேற்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்