Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக சென்சேஷன் ஜஸ்டின் பீபரின் வாழ்க்கை ஆரம்பித்தது எங்கே தெரியுமா? #JustinBieber

‘அம்மா... அம்மா... எனக்கு டிஸ்னி லேண்ட் போகணும்னு ஆசையா இருக்கு. கூட்டிட்டுப்போறீங்களா?' என்று எல்லா பிள்ளைகளும் கேட்பார்கள்... அடம்பிடிப்பார்கள். ஆனால் "நீங்க கவலைப்படாதீங்கம்மா… உங்ககிட்ட காசு இல்லைன்னா என்ன... நான் பணம் சம்பாதிச்சு டிஸ்னி லேண்டுக்கு நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து போலாம்" என்றான் அந்த ஏழு வயதுப் பையன்.

ஜஸ்டின்  

"நீ எப்படி பணம் சம்பாதிக்கப்போற?" என்று அம்மா கேட்டதும், வேக வேகமா கிட்டாரை எடுத்துக்கொண்டு ரோட்டில் நின்று பாடல் பாடத் தொடங்கினான். அந்தப் பாடலைக் கேட்டு பாதசாரிகள் எல்லாரும் காசு போடத் தொடங்கினார்கள்.

இப்படித்தான் ஆரம்பித்தது ஜஸ்டின் பீபருடைய இசைப் பயணம். சாலையோரத்தில் பாடினார் என்றதும் சிலர் முகம் சுழிக்கக் கூடும். ஆனால், ஜஸ்டின் அப்படி நினைக்கவில்லை. தன்னுடைய இசைத்திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம். இதை விரும்பி கேட்டவர்கள் பணம் தந்தார்கள். கிட்டத்தட்ட 3,000 டாலர்கள் சேர்ந்தது. இதை வைத்துக்கொண்டு ஜஸ்டினும் அவரது அம்மா பாட்ரீசியாவும் டிஸ்னி லண்டனுக்குச் சென்று வந்தனர்.

"இதுதான் எங்களுடைய முதல் விடுமுறைப் பயணம்" என்கிறார் பாட்ரீசியா.

ஜஸ்டின் பீபர் பிறந்தபோது, அவருடைய அம்மா பாட்ரீசியாவுக்கு வயது பதினெட்டு. அந்த இளம் வயதில், திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றுக்கொண்டுவிட்டார். ஜெரெமி ஜாக் பீபர் என்பவர்தான் ஜஸ்டினின் தந்தை. ஆனால், அவர் பாட்ரீசியாவைக் கடைசி வரை மணந்துகொள்ளவில்லை. ஜஸ்டினுக்கு மூன்று வயதாகியிருக்கும்போதே அவர் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். பல சிரமங்களுக்கிடையே தனியாளாக ஜஸ்டினை வளர்த்தது அவருடைய தாய்தான்.

`என் தாய் நிறைய தவறுசெய்திருக்கிறார்’ என்று ஜஸ்டினே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார், ‘இளவயதில் அவர் புகைத்திருக்கிறார்; மது அருந்தியிருக்கிறார்; போதைப் பொருள்களுக்குக்கூட அடிமையாகியிருக்கிறார். இவையெல்லாம் நான் பிறக்கும் வரைதான். நான் பிறந்தவுடன், அவர் எல்லா கெட்டபழக்கங்களையும் விட்டுவிட்டார்’ என்கிறார் ஜஸ்டின். ‘எனக்காக அவர் மாறிவிட்டார். எனக்காகவே வாழத் தொடங்கிவிட்டார்.’ இதையெல்லாம் பாட்ரீசியாவே ஜஸ்டினிடம் சொல்லியிருக்கிறாராம், ‘மகனே, உனக்கும் சேர்த்து நான் நிறைய கெட்டது செய்துவிட்டேன். ஆகவே, நீ எந்தக் கெட்டபழக்கத்திலும் ஈடுபட வேண்டாம்’ என்றாராம் அவர்.

பதினெட்டு வயதில் பிள்ளை பெற்றுக்கொண்ட பாட்ரீசியாவுக்கு, ஜஸ்டின்தான் எல்லாமே. பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில்கூட, தன் மகனுக்கு எல்லாவற்றையும் பெற்றுத்தர வேண்டும் என்று அவருக்கு தீராத ஆசை.

லண்டனில் பிறந்த ஜஸ்டின் வளர்ந்தது ஸ்ட்ராட்ஃபோர்டில். சிறுவயதிலிருந்தே மிகுந்த இசை ஆர்வத்தோடு இருந்த இவன், பியானோ, கிடார், ட்ரம்பெட் ஆகியவற்றை தானே வாசிக்கக் கற்றுக்கொண்டான். வீட்டில் ஓய்வு நேரங்களில் எல்லாம் வாயில் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருப்பான்.

தன் மகனின் இசைத்திறமையைக் கண்டு பாட்ரீசியாவுக்குப் பெருமை. அவன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை எல்லாம் வீடியோ படம் எடுத்துவைத்தார். அதைத் தனது நண்பர்கள், உறவினர்களிடம் யூடியூப் மூலம் பகிர்ந்துகொண்டார்.

இப்படி ஜஸ்டினின் மேடை நிகழ்ச்சிகள், சாலையோர நிகழ்ச்சிகள் யூடியூபில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்திருந்தன. அவனுடைய குரலும் இசையும் பலருக்குப் பிடித்திருந்தன. இந்த நேரத்தில், ஸ்கூட்டர் ப்ரௌன் என்றொருவர் இணையத்தில் இன்னொரு பாடகரைப் பற்றித் தேடிக்கொண்டிருந்தார். அப்போது எதேச்சையாக ஜஸ்டின் பீபரின் ஒரு வீடியோவை க்ளிக் செய்துவிட்டார்.

ஜஸ்டினின் குரலைக் கேட்ட ப்ரௌன் அசந்துபோனார். ‘யார் இந்தப் பையன்? இந்தப் பையனைச் சரியாக வழிநடத்தினால் பெரிய ஆளாக வருவான்’ என்று ப்ரௌனுக்குத் தோன்றியது. அவனைத் தேட ஆரம்பித்தார். 

ப்ரௌன், பிரபலத்தின் பின்னே ஓடுகிறவர் அல்ல; திறமையுள்ள இளைஞர்களைக் கண்டுபிடித்து வளர்த்து, அவர்களின் வெற்றிக்கு வழிவகுப்பவர். அவருடைய முதலீடும் இதுதான்.

ஜஸ்டின் எந்தக் கட்டடத்துக்கு முன்னே வாசிக்கிறான் என்று வீடியோவைப் பார்த்துக் கண்டுபிடித்தார் ப்ரௌன், அங்கிருந்து நூல் பிடித்துச் சென்று  அவனுடைய பள்ளியைக் கண்டுபிடித்தார், அந்தப் பள்ளியின் பொறுப்பாளர்களிடம் விசாரித்து எப்படியோ பாட்ரீசியாவைச் சந்தித்தார்.

ஜஸ்டின்

‘உங்கள் மகனுக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது, உலகமே அவனுடைய பாடலைக் கேட்கப்போகிறது. நான் அவனைக் கவனித்துக்கொள்கிறேன். என்னோடு அனுப்பிவையுங்கள். நல்ல இசை நிறுவனமாகப் பார்த்து அவனைச் சேர்த்துவிடவேண்டியது என்னுடைய பொறுப்பு’ என்றார்.

முதலில் தயங்கிய பட்ரீசியா, பிறகு எப்படியோ மனம் மாறி ஜஸ்டினை ப்ரௌன் வசம் ஒப்படைத்தார். ப்ரௌனும் பல இசை நிறுவனங்களுக்கு ஜஸ்டினை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார். ஆனால், எந்த நிறுவனமும் ஜஸ்டினை நம்பி வாய்ப்புகள் தரவில்லை. காரணம், எந்த ஒரு முன் அனுபவமும் கிடையாது. பெயர் தெரியா கச்சேரிகள், தெருவோர யூடியூப் பாடல்கள் அவ்வளவே.

'இப்படி வாய்ப்பு தரா நிறுவனங்களை நம்பி எந்தவிதப் பயனும் இல்லை. நாம் ஏன் கையில் இருக்கும் பணத்தைக்கொண்டு பாடல் வீடியோ ஒன்றை உருவாக்கக் கூடாது? நமக்கு மிகப்பெரிய கேமரா தேவையில்லை, அதிநவீன தொழில்நுட்பம் தேவையில்லை. ஜஸ்டின் மிகப்பெரிய திறமைசாலி. அவனுடைய பாடல்கள் மக்களுக்குப் பிடித்தால் போதும். மற்ற அனைத்தும் தானாகவே நடக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருந்தார். ஜஸ்டினின் யூடியூப் பாடல்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் மக்களை ஈர்த்தன. இவருடைய யூடியூப் ரசிகர்கள் வட்டம் படிப்படியாக அதிகரிக்க அதிகரிக்க, இசை நிறுவனங்கள் இவரைத் திரும்பிப் பார்த்தன. 'தி ஐலண்ட் டெஃப் ஜாம் மியூசிக் குரூப் ஜஸ்டினைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டது. 2009-ம் ஆண்டில் ஜஸ்டினின் முதல் சிங்கிள் பாடல் 'ஒன் டைம்' வெளியானது. அப்போது அவருக்கு வயது 15. இன்னும் உடையாத மென்மையான குரலில் உலகத்தையே தன்வசப்படுத்தினான். இவனது வசீகரக் குரலைக் கேட்ட ரசிகர்கள் மத்தியில் ஜஸ்டினின் முதல் ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமானது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஜஸ்டினுடைய முதல் ஆல்பம் 'மை வேர்ல்டு' வெளியானது. அதன் பிறகு வந்த அவருடைய எல்லா ஆல்பம்களுமே மிகப்பெரிய வெற்றிதான். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் மக்கள் அவருடைய குரலைக் கொண்டாடினார்கள். குறிப்பாக, இளைஞர்கள். அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் இவரது இசையையும் நடனத்தையும் கண்டு கிறங்கினார்கள். பல  மில்லியன் டாலர் ஹிட்டுகளை அடித்து கிடுகிடுவென டாப் சிங்கர்கள் பட்டியலில் இடம்பிடித்தான் ஜஸ்டின். உலக இசை வரிசையில் முக்கியப்புள்ளியாகவும் வலைதளங்களில் அதிகமாகத் தேடப்பட்டு வரும் பிரபலமானான் ஜஸ்டின். 

மே 10-ந்தேதி அன்று மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பநிலை டிக்கெட் ரூபாய் 4,000. ஆன்லைனில் இ.எம்.ஐ-க்குக்கூட  டிக்கெட் கிடைக்கிறது என்றால், எவ்வளவு டிமாண்ட் ஜஸ்டினுக்கு என்று சற்று யோசித்துபாருங்கள். சுமார் 4,000 பணியாளர்கள் இதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாகவே வலைதளங்களில் ஜஸ்டின் எந்த ஹோட்டலில் தங்கப்போகிறார், எந்த இந்திய உணவைச் சாப்பிடப்போகிறார், எத்தனை நாள் இங்கு இருக்கப்போகிறார் என்பது போன்ற செய்திகள் வைரலாகப் பரவிவருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்பைக்கொண்ட இசை ப்ரியர்களுக்கு இது ஒரு மாபெரும் விருந்தாக அமையப்போகிறது என்றே கூறலாம். வயதுக்கேற்ற முதிர்ச்சியும் திறமையும் அனுபவங்களும் வழிகாட்ட, அவரின் சாதனைகள் தொடர வாழ்த்துகள்.

- சுஜிதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement