Published:Updated:

'இமயமலை ஏற, வயது உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும்' - நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு கோரிக்கை!

'இமயமலை ஏற, வயது உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும்' - நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு கோரிக்கை!
'இமயமலை ஏற, வயது உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும்' - நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு கோரிக்கை!

உலக சாகச விரும்பிகளின் கனவு, இமயமலையின் உச்சத்தைத் தொட வேண்டும் என்பதுதான். எவரெஸ்ட் சிகரத்தை அடைய, நேபாளில் இருந்து மலையேறத் தொடங்குகின்றனர். இதற்கு, உடல் வலிமையும் உறுதியான மனமும் தேவை. இவையெல்லாம் இருந்தும் இயற்கையின் சில இடர்பாடுகளில் சிக்கி பலர் உயிரிழக்கின்றனர். 

அப்படி, கடந்த வாரம் எவரெஸ்ட் மலையேற முயன்ற 85 வயதான 'மின் பஹதூர் ஷெர்ஷான்', மலையடிவார கேம்ப்பில் தங்கியிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 29 ஆயிரம் அடி உயரத்தை அடைந்த வயதானவர் என்ற உலக சாதனை, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஹதூரிடம்தான் இருந்தது. 2013-ம் ஆண்டு, அந்தச் சாதனையை உடைத்தார் 80 வயதான ஜப்பானியர் யூஷிரோ. அதை உடைத்து, மீண்டும் புதிய சாதனை படைக்க முயன்றபோதுதான் பஹதூர் மரணமடைந்தார். 

பஹதூர் உயிரிழந்த அதே வாரத்தில், உலகப் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்தின் மலையேற்ற வீரர் இயூலியும் எவரெஸ்ட் ஏறும்போது உயிரிழந்தார் . கடந்த மாதம், தைவானைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவனும் மாணவியும் மலையேறும்போது பனிப்பள்ளத்தில் சிக்கினர். இதில், 47 நாள்களுக்குப் பின்னர், அந்த இளைஞர் உயிரோடு மீட்கப்பட்டார். அந்தப் பெண் இறந்துவிட்டார். இப்படியாக, நேபால் மரணங்கள் தொடர்கதையாகிவருகின்றன. 

இதைக்  குறைக்கும்விதமாக, அரசாங்கம் மலையேற்றத்துக்கான வயது உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று 'நேபால் மலையேற்றக்  கூட்டமைப்பினர்' கோரிக்கை வைத்துள்ளனர். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்சம் 75 வயது என்ற உச்சவரம்பை கட்டாயப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இமயமலையின் திபெத் பகுதியில் மலையேற, அந்நாட்டு அரசாங்கம்     18 - 60 என்ற வயது உச்சவரம்பை அமல்படுத்தியுள்ளது. அதுபோலவே, நேபாள அரசாங்கமும் செய்ய வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.