Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

70 நாள்கள் ... 700 பேர்... காணாமல் போன ஆற்றை மீட்டெடுத்த கடவுள் தேசத்தினர்!

ஆறு

கேரளா. எழுதும்போதே ஜில்லென்றிருக்கிறது. கண்களை மூடி கேரளாவை நினைத்துப் பாருங்கள். பச்சை நிறமில்லாமல், சிறிது ஈரம் இல்லாமல் கேரளாவில் ஒரு நிலப்பகுதி உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? நிஜமோ, சினிமாவோ… கேரளா வளமான பிரதேசம். குளிர்ந்த நிலம். தண்ணீர் தளும்பும் மாநிலம்.அவர்கள் வீட்டுக்குப் பின்னால் தோட்டம் இருக்காது.ஆறு ஓடும். படகு விட்டுக்கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் அவர்களுக்குக் கிடைக்க காரணமிருக்கிறது. 

ஆலப்புழா மாவட்டம் பூதனூர் கிராமம் வழியே ஓடுகிறது கூட்டாம்பேரூர் ஆறு. பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளின் கிளை நதி இது. 12 கி.மீ நீளமும், 100 அடி அகலும் கொண்ட இந்த ஆறுதான் பூதனூர் கிராமத்தின் வளத்துக்கும் குடிநீருக்கும் ஆதாரம். அந்தப் பகுதி மக்களின் விவசாயத்துக்கும் இந்த ஆறுதான் நீர் தந்தது. அது போக, வியாபாரத்துக்கு உதவும் நீர்வழித்தடமாகவும் இருந்தது. பம்பையும், அச்சன்கோவில் ஆறும் மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும்போது, வெள்ளத்தைத் திசை திருப்பி பல தடவை பேரழிவிலிருந்து  காப்பற்றிய பெருமையும் கூட்டாம்பேரூர் ஆற்றுக்கு உண்டு. ஆனால், காலம் செல்ல செல்ல கதை மாறியது. அருகிலிருக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளும், ஆற்றின் கரையில் எழுப்பப்பட்ட ஆக்ரமிப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆற்றை அழித்தன. தங்கள் கண் எதிரே தங்களுக்கு வாழ்வளித்த ஆறு சாவதை இந்த மக்கள் பார்க்க வேண்டியதிருந்தது. 

பூதனூர் பஞ்சாயத்தின் தலைவர் விஸ்வம்பர பணிக்கருக்கும், ரேஷ்மி என்ற சமூக ஆர்வலருக்கும் இந்த ஆற்றை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என ஆசை. முதலில் இதைச் சொன்னபோது ஊர்மக்கள் கண்டுகொள்ளவில்லை. ஆறு எல்லாம் தானாக உருவாக வேண்டியது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால், அந்த ஆற்றை அழித்ததே மனிதர்கள் தான். அதனால், அதை மீட்டெடுக்கவும் மனிதர்களால் முடியும் என நம்பினார்கள் ஊர்த்தலைவரும், அவர் முயற்சியை ஆதரித்தவர்களும். 

ஒரு வழியாக 700 பேரை அவர்களால் ஒன்று சேர்க்க முடிந்தது. அந்த 700 பேருக்கும், 70 நாள்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை தந்தார்கள். ஆனால், அந்த 700 பேரும் இதை வெறும் வேலையாக பார்க்காமல் முழு அர்ப்பணிப்புடன்  செய்தார்கள். விஷச்செடிகளின் ஆபத்து இருந்தது. சில முதலைகள் கூட வழியில் இருந்தன. வழியெங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக் கிடந்தன. எதுவுமே அவர்களைத் தடுக்கவில்லை. மீண்டும் அந்த ஆற்றை மீட்டெடுத்து, தங்கள் கிராமத்தைச் செழிப்பாக்க முடியும் என நம்பி வேலை செய்தார்கள். மனிதர்களின் ஆக்கப்பூர்வமான நம்பிக்கைக்கு இயற்கை எப்போதும் செவிமடுக்கும். பூதனூரிலும் அதுதான் நடந்தது.

ஆறு

படங்கள்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இரண்டு மாதங்களுக்கு மேல்  700 பேர் உழைத்து கூட்டாம்பேரூர் ஆற்றைத் திரும்ப பிறக்க வைத்தார்கள். ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. வழியை மறித்துக் கொண்டிருந்த அனைத்து தேவையற்ற தாவரங்களும் நீக்கப்பட்டன. இப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து வந்துவிட்டது. படகு சவாரி செய்ய முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஐந்து கி.மீ சுற்றளவிலுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. பூதனூரில் மகிழ்ச்சி திரும்பி இருக்கிறது.

இப்போது மாநில அமைச்சர்கள் ஊர் மக்களையும், விஸ்வம்பர பணிக்கரையும் புகழ்கிறார்கள். இனிமேல், தங்கள் ஆற்றை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என்கிறார்கள் பூதனூர் மக்கள். இயற்கை கேரளாமீது கரிசனம் காட்ட காரணம் இருக்கிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement