Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்

நானே கேள்வி... நானே பதில்

##~##

''ஆட்சியை இழந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு நெருங்கிவிட்டது... ஆனால், இன்னமும் காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே?''

''அவர்கள் எப்போதுமே இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதைப் பிடிக்க முயல மாட்டார்கள்!''

- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை.

''இந்தியாவிலேயே சிரமமானது எது?''

''இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் எதிர்க்கட்சியாக இருப்பது!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி

''வெற்றிபெற பயிற்சி அவசியம். வெற்றி பெற்ற பிறகுமா?''

''இக்னாசியான் பதரவ்ஸ்கி என்கிற உலகப் புகழ்பெற்ற பியானோ இசைக் கலைஞர் இப்படிக் கூறுகிறார்... 'ஒருநாள் என் பயிற்சியை விட்டுவிட்டால், நான் அதைக் கவனிப்பேன். இரண்டு நாட்கள் பயிற்சி செய்வதை  விட்டுவிட்டால், விமர்சகர்கள் அதைக் கவனிப்பார்கள். மூன்று நாட்கள் பயிற்சியை விட்டுவிட்டால், ரசிகர்கள் அதைக் கவனித்துவிடுவார்கள்!’ ''

- கே.சரஸ்வதி, ஈரோடு-12.

''குடிகாரர், குடிகாரன் - என்ன வித்தியாசம்?''

''டாஸ்மாக்கில் நுழையும்போது - குடிகாரர். அங்கிருந்து வெளியே திரும்பும்போது - குடிகாரன்!''

- புதூர் பாலா, நாமக்கல்.

''மன்மோகனையும் சோனியாவையும் தனக்குக் கிடைத்த 'இரண்டு குருக்கள்’ என்கிறாரே ராகுல்?''

''ஆம். ஒருவர் இத்தாலிய குரு; மற்றொருவர் மௌனகுரு!''

- சம்பத் குமாரி, திருச்சி.

நானே கேள்வி... நானே பதில்

''எல்லை தாண்டி அராஜகம் செய்யும் பாகிஸ்தானிடமும் சீனாவிடமும், நம் மத்திய அரசு 'கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அடிக்கடி கூறுகிறதே... அப்படி என்ன கடுமையான நடவடிக்கை?''

''ஒன்று, 'பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்வது. இரண்டாவது, 'பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை’ என்று சொல்வது. இந்த இரண்டுதான் இந்திய அரசின் கடுமையான நடவடிக்கைகள்!''

- தீ.அசோகன், சென்னை.

'' 'அரைவயிறு’, 'கால்வயிறு’ என்று சாப்பிடுபவர்களின் நிலை பற்றி!?''

'' 'உன் வயிறு நிரம்பி இருந்தால், உன்னை அறிவால் நிரப்புவது கடினம்’ என்கிறது கன்ஃபூஷியஸம்!''

- அனார்கலி, தஞ்சாவூர்

நானே கேள்வி... நானே பதில்

''எம்.ஆர்.ராதா மிகுந்த முரட்டு சுபாவம் கொண்டவராமே?''

''அந்த முரட்டுத்தனத்தில் ஓர் உண்மை இருக்கும். 1954-ம் வருடம் திருச்சி தேவர் ஹாலில் நடந்த 'கீமாயணம்’ நாடகத்துக்குத் தடை விதிக்கப்பட்டபோது, எம்.ஆர்.ராதா செய்த விளம்பரம், 'என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராக இருந்தாலும் கண்டிப்பாக வரவேண்டாம்; அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்து மனம் புண்பட்டால், அதற்கு நான் ஜவாப்தாரி அல்ல!’

நாடகம் நடத்தும்போது உருவான கலவரச் சூழலில் ராதா மைக்கில் சொன்ன அறிவிப்பு, 'உயிருக்குத் துணிந்தவர்கள் மட்டும் நாடகம் பார்க்க வரலாம்!’ இத்துடன் இன்னோர் அறிவிப்பையும் செய்தார். 'இந்த நாடகத்தில் தவறு இருந்தால், என்னைத் திருத்திக்கொள்ள நான் தயார். நாடகம் சரியாக இருக்குமானால், நீங்கள் உங்களைத் திருத்திக்கொள்ளத் தயாரா?’

மனசாட்சிக்கு நேர்மையாக நடந்துகொள்பவர்கள், மற்றவருக்கு கோபக்காரராகத்தான் தெரிவார்கள்!''

- மல்லிகா அன்பழகன், சென்னை-78