Published:Updated:

கருத்தரித்தல் முதல் உயிர்ப்பித்தல் வரை... பெண்ணின் தாய்மை தருணங்கள் #Mother'sDay

கருத்தரித்தல் முதல் உயிர்ப்பித்தல் வரை... பெண்ணின் தாய்மை தருணங்கள் #Mother'sDay
கருத்தரித்தல் முதல் உயிர்ப்பித்தல் வரை... பெண்ணின் தாய்மை தருணங்கள் #Mother'sDay

லகின் 7.6 பில்லியன் மனிதப் புன்னகையின் யுனிவர்சல் உரிமை, ஆதிப் பெண்ணின் கருவறைக்கே சொந்தம். அவளில் இருந்து இத்தனை கோடி இன்பமாய் பெருக்கெடுத்து, கடந்த நொடி பிறந்த குழந்தை வரை மனித குலத்தைப் படைத்து அளிக்கும் தாய்மை, பெண்மையின் தனிச்சிறப்பு. ஒரு பெண், தாய் ஆக தன் உடலால், மனதால் செய்யும் தியாகங்களுக்கு இணையாக எதுவும் இல்லை இந்தப் பிரபஞ்சத்தில். 

இங்கு ஆணும், பெண்ணுமாய் பிறந்து வாழ்வதன் முதல் அர்த்தம், அடுத்தொரு உயிரை உருவாக்குவதுதான். அந்த உயிரை தனது கருவில் வாங்கி பெண் தாயாகும் அற்புதம் ஆணுக்குத் தகவல்; பெண்ணுக்குப் பெருவாழ்வு, பேரனுபவம். அவஸ்தைகள் பல அனுபவித்து தன் உயிருக்குள் உயிர் வளர்த்து உலகுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு ஜனனமும், அவள் கருணையின் கொடை. 

சிசுவாகக் கையில் தவழும் காலத்தில் இருந்தே, பெண் குழந்தையை ஒருவனின் மனையாகத் தயார்படுத்தியே வளர்த்தெடுக்கும் சமூக அமைப்பு இது. அவள் சிவப்பாகப் பூசிக் குளிப்பாட்டப்படும் குளியல் பொடியில் இருந்து, கண் மை, வளையல், கொலுசு அலங்காரம் வரை, அனைத்துக்கும் அதுவே ஆதாரம். ஓடி விளையாடும் வயதில் அடிபடும்போதுகூட, 'இன்னொரு வீட்டுக்கு வாழப் போற புள்ள, வம்சத்த வளர்க்கப் போறவ, சேதாரமில்லாம கொடுக்கணும்' என்றே பதறும் கிழவிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவள் பூப்பெய்தியவுடன், 'தாய்மை அடையத் தயாராகிவிட்டாள்' என்று நல்லெண்ணெய், நாட்டுக்கோழி முட்டை என அவள் கருப்பைக்கு கவனிப்புகள் அதிகமாகும். 

இப்படி இந்த உலகம் பெண்ணை ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரசவிக்கும் உயிர் இயந்திரமாகவே பார்க்கிறது. ஆனால், அந்தத் தாய்மைக்கான தகவமைப்புக்காக அவள் உடல் கடக்க நிர்பந்திக்கப்பட்டுள்ள வலிகள் பற்றிய அக்கறையோ கரிசனமோ இந்த உலகுக்கு இருப்பதில்லை. ரத்தமும் ரணமுமான மாதவிடாய் வேதனையை ஒவ்வொரு மாதமும் அனுபவிக்க வேண்டும். 'நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?' என்று எல்லா பெண்களும் ஏதாவது ஒரு மாதவிடாய் நாளில் நொந்தவர்களாகவே இருப்பார்கள். 

திருமணம்... குழந்தைப் பேற்றுக்காக அங்கீகரிக்கப்பட்ட சமூக ஒப்பந்தம். அதுவரை பிறந்த வீட்டில் வளர்ந்த சூழல் அப்படியே வேரோடு பெயர்க்கப்பட, புதிய இடத்தில் நடப்படுகிறாள் பெண். அவளது வாழ்க்கை மாறிப்போகிறது. குறிப்பாக, திருமணத்துக்குப் பின்பான மாதவிலக்கு தருணங்கள் அவளுக்கு வேறுவேறான அனுபவங்களைத் தருகின்றன. 'இந்த மாதம் எந்த நாள்?' என்று காலண்டர் தேடிக் குறித்துவைத்து படபடப்போடு காத்திருக்கிறாள். குடும்ப விசேஷம், நல்லது, கெட்டது, கோயில் கும்பிடு, கணவனோடு சுற்றுலா உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்கு முன்னும் 'இந்த நாள் இந்த மாதத்தில் எப்போ துவங்குது?' என்பதே கேள்வியாகிறது. தாய்மை அடையத் தாமதமானால் ஊரும் உறவுகளும் அவள் மனதில் சொருகும் அம்புகள் கிழிக்க, வெளிப்படும் மாதவிடாய் ரத்தம் அவள் கண்ணீரின் குருதி வடிவமாகிறது. 

பெண் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம், அந்த ஒரு நாளில் இருந்துதான் தொடங்குகிறது. 'தேதி தள்ளிப்போயிருக்கே? அப்போ?!' என்று மனதில் மின்னல் வெட்ட, ஓர் உயிர் தனக்குள் மொட்டவிழ்ந்து அன்போடு பற்றிக்கொண்டு விட்டது என்று அறியும் அந்தத் தருணம்... பெண் வாழ்வில் பொக்கிஷ நொடி. அது வார்த்தைகள் தோற்று மகிழ்ச்சி கண்ணீர் வடிவத்துக்கு மாறும் நிமிடம். காதல், காமம் கடந்து தாய்மைக்கு நகரும் அதிஅற்புத காலம். கூடவே, 'இனி ஒன்பது மாதங்களுக்கு மாதவிலக்கு தொந்தரவு இல்லை' என்று மனசுக்குள் ஒரு மகிழ்ச்சிக் குயில் ரகசியமாய்க் கூவும். 

எந்த மகிழ்வும் வலியின்றிக் கிடைக்காது என்பதே பெண்ணுடலுக்கான பொது விதி. கர்ப்பகாலம், அதில் முதன்மையானது. அதிர நடக்காதே, சட்டென எழாதே, மல்லாந்து படுக்காதே என்ற அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றி, தன் பனிக்குடத்தில் வளரும் குட்டிச் செல்லத்துக்காக புது வாழ்வைத் தொடங்குவாள். குமட்டும் இரும்புச் சத்து மாத்திரைகளை கடமையென மறுயோசனையின்றி விழுங்குவாள். 'குழந்தைக்கு நல்லது' என்று யார் எதைச் சொன்னாலும் செய்வாள், சாப்பிடுவாள். 

மசக்கை, கர்ப்பகாலத்தின் தண்டனை. சிலருக்கு நான்கு மாதங்களுடன் நின்றுபோகும் அந்த வாந்தியும் குமட்டலும் மயக்கமும். சிலருக்கு ஒன்பது மாதம் வரை உடன் வந்து படுத்திவிடும். 'எல்லாம் உன் குழந்தைக்காகத்தான்' என்று மனதைத் தட்டித் தட்டி தன்னை சமாதானம் செய்து கொள்வாள். மாதங்கள் உருள உருள, உடல் விரிந்து, வயிறு பெருத்து, தோலே தழும்பாகி, எடை கூடி,  பனிக்குடம் நிறைந்து... கண்ணாடி அவளையே அவளுக்கு அந்நியமாகக் காட்டும். உடல் அளவில் இருந்து அழகு வரை, தன் இளமை கண் முன்னே கடகடவெனக் கரைந்தாலும், தாய்மையின் பூரிப்பு கண்களில் மினுங்கச் சிரிப்பாள். 

கருவறையில் கண்மூடித் துயிலும் செல்லம் கேட்கும் என்பதற்காக கை நிறைய கண்ணாடி வளையல்கள் அடுக்குவாள். பிடித்த பாடல்கள் கேட்பாள். அந்தியில் நடைப்பயிற்சி செய்வாள். தனக்குள் வளரும் அந்த குட்டி உயிர் இந்த உலகை எட்டிப் பார்க்கும் தவத்தில் எண்ணிலா தெய்வங்களை வேண்டிக்கொள்வாள். மறு பேச்சின்றி குழந்தையின் நலன் ஒன்றையே மனதிலும் சுமந்து தாய்மை காலத்தில் மகிழ்வுறுவாள். தன் உடல் படும் அத்தனை வேதனைகளையும் தாய்மையின் இயல்பென்று ஏற்றுக் கொள்வாள்.  

பிரசவம் என்பது ஓர் உயிரின் ஜனனம் மட்டுமன்று, அது இரண்டு உயிர்களின் ஜனனம் என்பதை அவள் அறிவாள். பிரசவ அறைக்குள் நுழையும் பெண்ணுக்கு எவ்வளவு தைரியம் சொல்லப்பட்டாலும், 'நான் திரும்பி வந்துவிடுவேனா?' என்ற ஒற்றைக் கேள்வி நெஞ்சைக் கிள்ளவே செய்யும். அந்தக் கேள்வியையும் தன் மழலைச் செல்லத்தின் அழுகுரல் கேட்க அதட்டி அடக்கிவிட்டு, தன்னையே தருகிறாள் ஒரு தாய். 

'இந்த உலகிற்கு என் உயிரிலிருந்து ஒரு குழந்தையை பரிசளிக்கப்போகிறேன்' என்ற உறுதி, மகிழ்வு எல்லாம் இடுப்பு வலியில் மாயம் ஆகிடும். அடுத்தடுத்து முதுகுத் தண்டில் ஒற்றை வலி பிரம்படியாய் உயிர்வரை நகரும். ஒவ்வொரு வலியும் எங்கு துவங்கி எங்கு முடிகிறதென்று மனம் பார்த்துக்கொண்டிருக்கும். புயல் காற்றில் ஆலம் விழுதுகள் உடைந்து விழுவதைப் போல, அந்த குட்டிச் செல்லம் பனிக்குடம் கடந்து வெளிவர முயற்சிக்கும் கணம்  இடுப்பு எலும்புகள் விலக, தொடைகள் கதற, அந்த வலி அவளை உலுக்க, மூச்சுப் பிடித்து, கைகள் முறுக்கி, பிரசவ வலி பிரபஞ்சத்தில் அறைகிறது, பனிக்குடம் தாண்டி அந்த மீன் குட்டி மருத்துவரின் கைகளில் தவழ்கிறது. உயிர் கொடுத்து உயிர் தந்தவளின் கண்கள் அதன் பிஞ்சுப் பாதத்தில் உருள்கிறது. ஆம், அந்தச் செல்ல அழுகுரலில் அவள் அத்தனை வலிகளையும் சட்டெனத் தொலைத்துவிட்டு மகிழ்வுறுகிறாள். அவள் மார்புகள் ஊறத் துவங்குகின்றன. 

எந்தப் பெண்ணுக்கும் பெற்றுப் போட்டதோடு தாய்மைக்கான பொறுப்புகள் முடிந்து விடுவதில்லை. குழந்தை வயிற்றில் வளரும் வரை தேவதையாக பார்க்கப்பட்டவள், இனி ஆயிரம் தேவதைகளின் ஒற்றை உருவான அம்மா. தான் பெற்ற குழந்தைக்காக எப்பொழுதும், எதையும் தியாகம் செய்கிறாள். அந்த குழந்தையை மையமாகக் கொண்டே அவள் வேலை, உணவு, கனவு எல்லாம் தீர்மானிக்கப்படும். தாயான பின் பெண்ணுக்கென்று தனிப்பட்ட சந்தோஷங்களோ கனவுகளோ அனுமதிக்கப்படுவதில்லை. தன் மழலையின் கண்களின் வழியாக தன் உலகத்தைக் காணத் துவங்குகிறாள். தன் கடைசி மூச்சு வரை தன் தாய்மைக்கு ஒரு மாற்றும் குறைந்து விடாமல் வாழும் பெண்ணினத்துக்குச் சொல்வோம் உணர்வுபூர்வமான வாழ்த்து!