ப்ளஸ் டூ ரிசல்ட்டுக்கு வருந்திய மகனுக்கு அப்பா எழுதிய கடிதம்! | Read this father's letter written for his son about +2 Results

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (11/05/2017)

கடைசி தொடர்பு:10:49 (11/05/2017)

ப்ளஸ் டூ ரிசல்ட்டுக்கு வருந்திய மகனுக்கு அப்பா எழுதிய கடிதம்!

விஜயபாஸ்கர் விஜய் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக எழுதி பலரின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது எழுத்துகளில் எந்த ஒரு விஷயத்தையும் பாஸிட்டிவாகவும் வேறு கோணத்தில் பார்க்கும் விதமும் அதிகமிருக்கும். அதற்குக் காரணமாக தன் அப்பாவே எனக் குறிப்பிடுவார். 

இவர் முதன்முதலில் ஒரு வேலைக்குச் சேர்ந்தபோது, அந்த வேலை இவருக்கு கொஞ்சமும் பிடிக்க வில்லை. அதைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருக்கும்போது அதைப் புரிந்துகொண்ட அவரது அப்பா, 'வேலை பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடு. ரொம்பவும் சிரமப்பட்டு செய்யாதே. வேறு வேலை தேடிக்கொள்ளலாம்' என்றிருக்கிறார். வழக்கமாக எந்த அப்பாவும் இப்படிச் சொல்லமாட்டார்கள். அதானலேயே அந்த வேலை எனக்குப் பிடித்துபோனது. மேலும், அதில் உழைத்தேன் எனச் சொல்லுவார் விஜய்பாஸ்கர் விஜய். 

மகனின் மனதை தெளிவாக உணர்ந்து அப்பா பேசுவதும், அவர் கூறுவதை சிதையாமல் புரிந்துகொள்ளும் மகனாக விஜய் இருப்பதும் ஆச்சர்யமான ஒன்று. இது எப்படி சாத்தியமானது எனக் கேட்டபோது, "சரியாக சொன்னால், ப்ளஸ் டூ ரிசல்ட்டின்போது நடந்ததுதான் காரணம் என நினைக்கிறேன்' என்றார் விஜய்பாஸ்கர். அது என்னவென்று கேட்டோம்.

 

letter


பத்தாம் வகுப்பில் எல்லோரும் பாராட்டுகிற அளவுக்கு அதிகமான மதிப்பெண்கள். அதே போன்ற நல்ல மதிப்பெண் பிளஸ் டூ தேர்வில் வராது என்று தெரியும். ஆனால், இவ்வளவு குறைவாக வரும் என நினைக்க வில்லை. அதை எப்படி எதிர்கொள்வது என்றும் இருபது வருடங்களுக்கு முன் எனக்குத் தெரியவில்லை.

பதினாறு வயதின் ’பக்குவமில்லாத மனம்’ வாழ்க்கையே போய்விட்டதைப் போல பயந்தது. பதட்டப்பட்டது. அடுத்து என்ன செய்வோம். எதிர்காலம் என்னவாகும் போன்ற பல குழப்பங்கள் வந்தன. பத்தாம் வகுப்பில் கவனமாக படித்த அளவுக்கு ப்ளஸ் டூவில் படிக்காத குற்ற உணர்வு அதிகம் வாட்டியது.

ப்ளஸ் டூ தொடங்கும் ஜூன் மாதம் பள்ளிக்குள் நுழையும்போது என்னவெல்லாம் கனவு வைத்திருந்தோம். அடுத்த வருடம் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோமே. நாட்கள் பரபரவென ஓடிவிட்டன. 270 நாட்களுக்கு முன்பு கனவுகள் நிறைந்து, தன்னம்பிக்கை மிக்கவனாக இருந்த நான், இப்போது வாழ்க்கையையே இழந்தவன் போல ஆகிவிட்டேன் என்றெல்லாம் தோன்றியது. ஏனென்றால் பப்ளிக் எக்ஸாம்தான் வாழ்க்கை என்று துளியும் சந்தகேமின்றி நம்பியிருந்தேன்.

'உன் வாழ்க்கையைத் தீர்மானிக்க விருக்கும் பப்ளிக் எக்ஸாமில் மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டாயே' மனசு அரற்றிக்கொண்டிருக்க, என்னையும் அறியாமல் அழுதுகொண்டிருந்தேன். எளிதாக கைக்கு வரும் பந்தை கேட்ச் பிடிக்கத் தவறிய கிரிக்கெட் ஆட்டக்காரனைப் போல என்னை நினைத்துக்கொண்டேன். சொந்தக்காரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அசடு வழிய வேண்டுமே என்ற கூச்சமும் தோன்றியது.

நம் மதிப்பெண்களை அண்ணன்களின்  நல்ல மதிப்பெண்களோடு ஒப்பிடுவார்களே என்ற வெட்கம் வந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தேன். நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று அங்குள்ள சிமண்ட் சுவரில் அமர்ந்தபடி அலைவீசும் கடலையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மனதின் துக்கம் தனிமையில் இன்னும் அதிகமாகும் என்பதாக என் வாழ்க்கையை நானே அழித்துக்கொண்டேன் என்ற குற்றஉணர்வுக்கு ஆளானேன்.

அன்றிரவு வீட்டுக்கு வந்ததமும் என் மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் சென்னையில் இருந்த அப்பாவுக்கு நீண்ட கடிதமாக எழுதி அனுப்பினேன். என் கடிதம் 696 கிமீ பயணம் செய்து அப்பாவை அடைந்தது. அதைப் படித்ததும் அப்பா என்ன நினைப்பார் என்று குழம்பினேன். அடுத்த சில நாட்களில் அப்பா எழுதிய கடிதம் வந்தது.

விஜயபாஸ்கர் விஜய்


அன்புள்ள விஜய்,

உன் கடிதம் வந்தது. மார்க் குறைந்துவிட்டதால் அம்மாவை நினைத்து வருந்தினேன். பின், அப்பாவை நினைத்ததும் மனதில் தாங்க முடியாத சோகம். எஸ்.எல்.பி அரசமரத்தடியில் நின்று கண் கலங்கினேன் என்று எழுதியிருந்தாய். அந்த வார்த்தைகளை மட்டும் ஆயிரம் முறை படித்தேன். கடவுளின் விளையாட்டை நினைத்து திகைத்தேன். என் பிள்ளைகள் கண் கலங்குவது எனக்குப் பிடிக்காது.

உன் எழுத்தே என்னை இவ்வளவு வருத்ததிற்கு ஆளாக்கினால் என் கண்முன்னே நீ அழுதால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. No.my dear, நீ எந்தக் காரணத்திற்கும் கலங்கக் கூடாது.

நீ அழுது கொண்டு கடிதம் எழுதிய எஸ்.எல்.பி மரத்தடியில், நீ எஸ்.எல்.எல்.சி பரீட்சை எழுதச் சென்றிருக்கும்போது, அப்பா தவம் கிடப்பேன், உன் வரவை எதிர்பார்த்து காத்திருப்பேன். நீ வந்ததும் எப்படி எழுதினாய் விலாவாரியாய் கேட்பேன். அது ஒரு காலம். ஆனால், இப்போது என் பிள்ளைக்கு ஆறுதல் கூற நான் அருகில் இல்லையே என்ற வருத்தம்தான் என்னை தினம்தினம் வதைக்கிறது.

நிறைவாக அப்பா கூறுவது இதைத்தான். ஒருவழியில் முயற்சி செய்கிறோம். வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை. சங்கருக்கு (என் இரண்டாவது அண்ணன்) எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தபோது சிரித்தோம். ஒருவேளை கிடைக்கா விட்டால் வாய்விட்டா அழுவோம் எல்லோரும். அது முறையா?

நாம் செல்லும் பாதை எல்லாம் வெற்றிக்கே அழைத்துச்செல்லும் என்று உறுதியாய் சொல்ல முடியுமோ? அல்லது எல்லாமே வெற்றியாகி விடுவது என்பது உலகத்தில் நடந்து கொண்டா இருக்கிறது. தைரியமாய் இரு. மனதை அலைய விடாதே.

Be nomarl, be cheerful. அப்பா நேரில் ஆறுதல் கூறுவதுபோல் இதை எடுத்துக்கொண்டு சகஜ நிலைக்கு வா. எல்லாம் சரியாகிவிடும். மீண்டும் கலகலப்பாக பேசு, பழகு, பாரம் குறையும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். குழம்பாமல் தெளிவாகு.

இன்று எழுத நேரம் இல்லை. உன் லெட்டர் கண்டவுடன் உடனே பதில் எழுத வேண்டும் என்றே அவசரமாய் இதை எழுதுகிறேன்.

ஒருமுறை அப்பா உன்னை நேரில் பார்த்தால் உன் குழப்பம் எல்லாம் தீரும். இதற்குத்தான் அப்பா வேண்டும் என்பது. அப்பா அருகே இல்லாத பிள்ளைகள் தெளிவில்லாமல் குழம்பி போகிறார்கள் இப்படித்தானோ என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு...
அப்பா.

அப்பாவின் அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது. ஆனால், இதில் உள்ள ஒவ்வொரு வரியும் எனக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்தன. ஒரு வழியே முயற்சி செய்கிறோம். கிடைக்கவில்லையாஅதற்கு என்ன செய்ய முடியும். அதையே நினைத்துக்கொண்டே இருக்க முடியுமா. மாற்று வழியில் செல்ல வேண்டியதுதான். இதில் கவலைப்பட ஒன்றுமே இல்லை என்று எளிதாக, ஆனால் மனதில் படும்படியான ஆறுதலைச் சொல்லியிருந்தார்.

டிப்ளமோ மெக்கானிக்கல் சேர்ந்து, இறுதி வருடம் முடிந்தவுடனேயே வேலையில் சேர்ந்து, வேலையில் இருந்து கொண்டே பகுதி நேரமாக பொறியியல் படித்து ஒரு மெக்கானிக்கல் பொறியாளராக ஆகி முடித்து, இன்று திரும்பிப் பார்க்கும்போது நானும் எல்லோரைப் போல நல்லபடியான ஒரு வேலையில்தான் இருக்கிறேன் என்பதாக உணர்கிறேன்.

ஒரு தன்னம்பிக்கை வகுப்பில் கலந்துகொள்ளும் போது பயிற்சியாளர் "When things go wrong say what next " வாக்கியம் சொன்னார்.( ”ஒரு விஷயம் கை கூடவில்லை என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று பார்”) அதைக் கேட்ட போது அப்பா பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. அந்தப் பயிற்சியாளர் சொன்னதை அப்பா அப்போதே எனக்கு சொல்லித் தந்திருக்கிறார். வாழ்க்கை மிகப் பெரியது. பிளஸ் டூவில் மார்க் குறைவது எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அப்போது தோன்றிற்று. மாணவர்களுக்கு கல்வியை சுமையில்லாமல் ஆக்கும் முயற்சிகளும் தேவை என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.


டிரெண்டிங் @ விகடன்