'வரணும்... நீங்க திரும்ப லைம்லைட்டுக்கு வரணும்!' - தீபாவுக்கு சில யோசனைகள்

ஜெயலலிதா மறைந்தபிறகு, தீபாவுக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து, 'அடுத்த சி.எம்' ரேஞ்சுக்கு யோசிச்சோம். ஆனால், கொஞ்ச நாள்களிலேயே, 'இவர் கிச்சுக்கிச்சு தாம்பாளம்,கிய்யா கிய்யா தாம்பாளம் பார்ட்டி'ன்னு தெரிஞ்சுடுச்சு. பத்தாததுக்கு, அவர் கணவர் மாதவன் வேற கட்சியை பிச்சுக்கிட்டு(!?) போய் தனியா கட்சி ஆரம்பிக்க, 'அதுக்குள்ளேயா?' என்று ஊர் உலகத்துக்கு நல்ல 'காமெடி சீன்' கிடைச்சுச்சு. இட நெரிசலில் சிக்கித் தவித்த தீபா ஆபிஸில் இப்போது ஈ, காக்கா இல்லை. 'ஜெயலலிதா மாதிரியே இருக்காங்க'ங்கிற சமாசாரம்தான் அவருக்கு செல்வாக்கை தந்தது. கடைசியில் அவரது செயல்பாடுகளைப் பார்த்த மக்கள், 'முகத்துல மட்டும்தான் இவங்க ஜெயலலிதா. செயல்ல இல்லை'ன்னு சூட்சமத்தை கண்டுட்டதுனால, தீபா செல்வாக்கு குறைஞ்சு படுவீக்கா இருக்கு. பழையபடி அவர் பவரை உயர்த்த என்னன்ன பண்ணலாம்னு எங்களால முடிஞ்சதை சொல்லிருக்கோம்!

தீபா

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவெல்லாம் படங்களில் நடித்ததால்தான், மக்கள் மனசுல பசை போல ஒட்டி, இத்தாம் பெரிய செல்வாக்கை பெற்றார்கள். அதனால், தீபா கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு படத்தில் நடிக்கலாம். (யோசிச்சா அவருக்கே மனசாட்சி உறுத்த வாய்ப்பிருக்கு...அதான்!) கணவர் மாதவனை சமாதானப்படுத்த அவரை படத்தின் தயாரிப்பாளர் ஆக்கிடலாம்.  படம் முழுக்க கஷ்டப்படுற கேரக்டரில் நடிப்பது மக்களிடம் சிம்பதியை க்ரியேட் பண்ணி நல்ல பலனைத் தரும். தீபாவுக்கு இந்த முயற்சி இழந்த செல்வாக்கை பெற்றுத் தர உதவுமே தவிர, படத்தின் தயாரிப்பாளர் மாதவனுக்கு அம்மஞ்சல்லி லாபத்தைக்கூட தராது. அதனால், லோ பட்ஜெட் படமாக எடுப்பது நல்லது.
 
அதுக்கு கஷ்டமா இருந்தா, சின்னத்திரையில் ஒரு வண்ணக்கோலம் படைக்கலாம். வெள்ளிதிரையில் மார்க்கெட் போன நடிகைகளெல்லாம் மறுபடியும் டாப்பா வந்தது சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்துத்தானே. அதனால், தீபாவே தயாரித்து, ஒரு சீரியலில் நடிக்கலாம். வடிவுக்கரசியை வில்லி மாமியாராக போட்டு, இவர் அப்பாவி மருமகளாக நடிக்கலாம். தினமும் ஒரு வசவு, அடிதடி என தீபா வடிவுக்கரசி கையால சித்ரவதையை அனுபவிக்கிறது போல் எபிசோடுக்கு எபிசோடு கண்ணீரை பிழியவிடும் கேரக்டரில் நடித்தால், மொத்த தமிழ்நாடும் அவரைப் பார்த்து உச் கொட்டும். ஓட்டு போட்டுக் கொண்டாடும்.
 
அப்புறம் இது திருவிழா சீசன்...அதனால், பிரபல கோயில்களுக்கு போய் மண் சோறு சாப்பிடுறது, பழனிக்கு பாதயாத்திரை போறது, 'பன்னீர்' காவடி எடுக்கிறதுன்னு தூள் கிளப்பலாம். வர்ற ஆடி மாசம் அம்மன் கோயில்கள்ல கூழ் ஊத்துற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இப்போதே தேதி கொடுக்கலாம். இதைப் பாக்குற வயசானவங்க நெகிழ்ந்து போய் ஓட்டை அள்ளிப் போட வாய்ப்பிருக்கு!
 
முன்பு மீடியாவெல்லாம், 'தீபா என்ன சொல்லுவாங்க?'ன்னு கூர்ந்து பார்க்கும். ஓ.பி வேன்களோடு வீட்டு வாசலில் காத்திருக்கும். ஆனால், இப்போது மருந்துக்கும் அவரை சீந்துவதில்லை. அதனால், மீடியாவைக் கவர, அ.தி.மு.கவை மீட்க மெளன விரதம், சிறைக்குப் போன வைகோவுக்கு ஆதரவாய் நீண்ட நெடிய நடைப்பயணம் என எதையாவது செய்து லைம்லைட்டுக்கு வரலாம். 
 
அப்புறம், அவருக்கு சரியாக பேச தெரியவில்லை என்றும் தமிழ்கூறும் நல்லுலகம் சொல்கிறது. இதற்காகவே அடிக்கடி பிரஸ்மீட் வைத்து மழலை மொழி பழகலாம். அதுவும் அவரின் அத்தை ஜெயலலிதாவின் பஞ்ச் வசனமான, 'மக்களால் நான்; மக்களுக்காக நான்'ங்கிற டயலாக்கை ரீமேக்கி, 'ஜெயலலிதாவால் நான்; ஜெயலலிதாவுக்காக நான்'னு பேசினால், மக்கள் மத்தியில் பழைய பன்னீர்செல்வமா (இது வேற பன்னீர்செல்வம்) வந்து உட்காரலாம். 
 
என்ன இருந்தாலும், பாட்டாவே பாடி சொன்னால்தான், தமிழர்கள் மனசுல நச்சுன்னு பதியும். ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பாடுன 'பூமி உள்ளவரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும். புரட்சித் தலைவி பெயர் மக்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்' பாடலை ட்ரெண்டுக்கேற்றது போல ரீமிக்ஸ் செய்து ரிலீஸ் செய்யலாம். நடுநடுவுல தீபா புகழ் பாடுற வரிகளை 'என்னம்மா ஆச்சு உங்களுக்கு' பாடலாசிரியரை விட்டு எழுதித் தரச் சொல்லி சேர்த்தா பியூட்டிபுல்லா இருக்கும்.  
 
இதில் எதற்குமே தமிழ்நாடு அசரவில்லையென்றால் கடைசி அஸ்திரமாக தியானத்தை கையில் எடுத்துவிட வேண்டியதுதான். ஓ.பி.எஸ் ஸ்டைலில் மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ஆழ்ந்த தியானம் பண்ணலாம். 'அம்மா சத்தியமாக அரசியலை விட்டு விலகப் போறேன்'ன்னு சபதம் எடுத்துக்கிட்டு, வேற வேலையை பார்க்கலாம். வேற வழி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!