அசத்தலான டூருக்கு இந்தத் தீவுதான் பெஸ்ட் சாய்ஸ்! | For a fantastic tour, this island is the best choice!

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/05/2017)

கடைசி தொடர்பு:19:59 (22/05/2017)

அசத்தலான டூருக்கு இந்தத் தீவுதான் பெஸ்ட் சாய்ஸ்!

து, உலகின் 25-வது பெரிய தீவு. ஆஸ்திரேலியாவின் ஒரே தீவு மாநிலமும் இதுதான். இந்தத் தீவைச் சுற்றி 364 தீவுகள் உள்ளன. இவற்றில் 45 சதவிகித அளவில் தேசியப் பூங்காக்களும் உலகப் பாரம்பர்ய இடங்களும் அடக்கம். இங்கு புதிரான பல இடங்கள் இருப்பதால், இதை 'புதிர் தீவு' என்று அழைக்கிறார்கள். 

tasmania

இந்தியாவுக்கு அந்தமான் தீவுகள்போல ஆஸ்திரேலியாவுக்கு `டாஸ்மேனியா தீவு'. ஆஸ்திரேலியாவிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த அழகிய தீவு, முன்னொரு காலத்தில் `டாஸ்மேனியா' என்ற பழங்குடி மக்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. கருமை நிறம்கொண்ட இந்தப் பழங்குடிகளுக்கு வெளி உலகமே தெரியாது. தங்களுக்கென ஒரு தனிக் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்த இந்த மக்களை அழிப்பதற்காகவே வெள்ளையர்கள் இங்கு வந்தனர்.

இந்தத் தீவில் முதன்முதலாக 1810-ம் ஆண்டு காலடி எடுத்துவைத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். ஆங்கிலேய ஆட்சியின்போது தண்டனைக் கைதிகளை இந்தத் தீவுக்கு அனுப்பிவைத்துவிடுவார்கள். கப்பலில் வந்து இறங்கும் கைதிகளை அடைத்துவைப்பதற்காகப் பெரும் சிறைச்சாலைகளைக்  கட்டிவைத்திருந்தார்கள். வெள்ளை நிறம்கொண்ட  அவர்களின் உருவத்தைப் பார்த்ததுமே பயந்து ஓடினார்கள் டாஸ்மேனியா மக்கள். இது வெள்ளையர்களுக்குச் சாதகமானது.

tasmania

பல கப்பல்களிலிருந்து தீவில் வந்து இறங்கிய ஆங்கிலேயர்கள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள். சிறுவர்கள் அடிமையாக்கப்பட்டார்கள். வெளியுலகத் தொடர்பு இல்லாத அந்த மக்களுக்கு, ஆயுதம், யுத்தம் எல்லாம் அநியாயமாக இருந்தன. எதற்காக தாங்கள் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலேயே மாண்டார்கள். 

tasmania

1828-ம் ஆண்டில் வெள்ளையர் அரசு ஆட்சி புரிந்தது. 'வெள்ளையர்கள் அல்லாத எவரையும் கொல்லலாம்' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. `ஒரு கருப்பரைக் கொன்றால், மூன்று பவுண்ட் பரிசு. ஒரு குழந்தையைப் பிடித்துக் கொடுத்தால், ஒரு பவுண்ட் பரிசு' என்றும் அறிவித்தார்கள். கொன்றதற்கு அடையாளமாக அவர்களின் காதுகளை மட்டும் கொண்டுவந்தால் போதும்.

ஐந்தாயிரம் பேர்கொண்ட அந்தப் பழங்குடிச் சமூகம், 75-ஆகக் குறைந்துபோனது. அவர்களில் 72 ஆண்களும், மூன்று பெண்களும் இருந்தனர். இந்த இன அழிப்புக்கு எதிராக, ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதனால் அந்த 75 பழங்குடியினரையும் கொல்லாமல் விட்டுவைத்தார்கள். 

tasmania

ஆனாலும் அவர்களை இருள் சிறைக்குள் அடைத்து, உணவின்றி கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றார்கள். 1876-ம் ஆண்டில் கடைசிப் பழங்குடிப் பெண்ணும் இறந்துபோனாள். 66 ஆண்டுகளில் ஓர்  இனத்தையே அழித்துவிட்ட பெருமை, வெள்ளையர்களுக்கு உண்டு. இப்படி அழிந்த டாஸ்மேனியா ஆவிகள், இந்தத் தீவில் அலைவதாகக் கூறப்படுகிறது. இங்கே வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கொல்வதாகவும், அடர்ந்த வனங்களில் இரவில் விபத்தில் அடிபட்டு வருபவர்களை இந்த ஆவிகள் சாப்பிடுவதாகவும் நம்புகிறார்கள் அங்கு இருக்கும் மக்கள். அதனால்தான் இதை `புதிர் தீவு' என்கிறார்கள்.

இந்தத் தீவில் சுற்றுலா பயணிகளை வசீகரிக்க நிறைய இடங்கள் உள்ளன. பே ஆஃப் ஃபயர்ஸ் அற்புதமான இடம். நீல நிறக் கடல் நீர், சிவப்பு நிறப் பாறைகள், வெள்ளை மணல் நிறைந்த கடற்கரை... என்று அற்புதமான ஓர் உலகத்துக்கு இந்த இடம் நம்மை அழைத்துச் செல்லும். அழகு மட்டும் அல்ல, முகாம் அமைத்துத் தங்குதல், படகு சவாரி, பறவைகளைப் பார்வையிடுதல், மீன் பிடித்தல், நீச்சல், சர்ஃபிங், கடற்கரையில் நடத்தல் எனப் பல பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்தலாம். ஹாஸ்டிங்ஸ் குகைகள், ஒரு மாயாஜால உலகத்துக்குள் நுழைந்த உணர்வைத் தரும். நீண்ட குகை சுற்றுலாவாக இது அமையும். 

மேலும், ஆர்துர் துறைமுகம், சாலமங்கை, மோல்க்ரீச் கார்ட்ஸ், கிரெடிர் மலை, கார்டன் நதி, கேட்ராக்ட் ஜார்ஜ், வெல்லிங்டன் சிகரம் என்ற அனைத்துமே நமக்கு இயற்கை வழங்கியுள்ள கொடை. வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் அற்புத இடங்களைக்கொண்டது டாஸ்மேனியா தீவு. என்ன, உங்கள் Must Visit Listல் டாஸ்மேனியாவைச் சேர்த்துவிட்டீர்கள்தானே?

- சுஜிதா


டிரெண்டிங் @ விகடன்