Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'+2 ரிசல்ட் வரும் நாள்..!' - ஒரு நாஸ்டால்ஜியா நோட் #Results

+2 தேர்வு முடிவுகள் வெளியான இன்று மாநில, மாவட்ட வாரியான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படமாட்டாது என முன்பே அறிவித்திருந்தது தமிழக அரசு. அதன்படி ரேங்க் பட்டியல் இல்லாமல் ரிசல்ட் வெளியிடப்பட்டது. மாணவர்களிடையே கற்றலில் ஆரோக்கியமான போட்டி இருக்கும் என நம்பித்தான் இந்த தரவரிசை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அது சமீபகாலமாக கோழிப்பண்ணைப் பள்ளிகளுக்கு இடையேயான வியாபாரப் போட்டியாக உருவாகிவிட்டது என்பதே உண்மை. தம் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் என முழுப்பக்க அளவில் நாளிதழ் விளம்பரங்கள் கொடுப்பதற்கும், ஊருக்கு ஊர் பெரிய சைஸ்களில் பேனர் வைப்பதற்கும் மட்டுமே மாணவர்களின் தரவரிசை பயன்பட்டு வருகிறது. 

+2 தேர்வு

மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் இந்தத் தரவரிசை முறை இப்போது விலக்கிக்கொள்ளப்படுகிறது எனும் இந்த அறிவிப்புக்கு ஆதரவான கருத்துகளும் எதிரான விமர்சனங்களும் வருகின்றன. அவற்றையெல்லாம் அப்புறம் அலசலாம். வழக்கமாக ரிசல்ட் வெளியாகும் நாளில் சமூக வலைதளங்களில் தனது பள்ளிக்கால ரிசல்ட் அனுபவங்களைப் பகிர்வார்கள். முன்பெல்லாம் +2, பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் நாள்கள் எப்படி இருக்கும்... ஒரு நாஸ்டால்ஜியா கொசுவத்தி சுத்துவோம் வாங்க... 

+2 ரிசல்ட் பார்ப்பதற்கென்றே முதல்முறையாக தினசரி செய்தித்தாளை வாங்கினவர்கள் எல்லாம் எங்கள் ஊரில் உண்டு. அப்போதெல்லாம் இப்போது போல பத்து மணிக்கு ரிசல்ட் வெளியிடப்பட்டதும் நெட்டில் தட்டி பிரின்ட் அவுட்டாகக் கையில் எடுத்துப் பார்த்துவிட முடியாது. தேர்ச்சி அடைந்ததைத் தெரிந்து கொள்ளவே சாயங்காலம் வரும் மாலை நாளிதழுக்குக் காத்திருக்க வேண்டும். அன்றைய பேப்பர் முழுவதும் கல்வி மாவட்ட வாரியாக தேர்வானவர்களின் பதிவு எண்கள் மட்டுமே இருக்கும். அந்த எண்களுக்குள் நம் பதிவு எண்ணைப் பார்த்துவிட்டால் மட்டுமே மனம் நிம்மதி அடையும். அதுவரை நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியாமல் நெஞ்சு படபடக்கும். மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாகப் பள்ளிக்கூடத்திற்குத்தான் செல்ல வேண்டும். கூட்டமாக நின்று ரஜினி பட முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்குவதைப் போல முண்டியடித்து மார்க் லிஸ்ட் ஒட்டப்பட்டிருக்கும் போர்டை மொய்த்துக் கொண்டிருப்பார்கள். 

மாநில அளவில் முதல் இடங்களைப் பெறுபவர்களுக்கு பெற்றோர்கள் லட்டு ஊட்டிக் கொண்டிருக்கும் புகைப்படம் அடுத்தநாள் செய்தித்தாள்களில் வெளிவரும். 'நான் டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்வேன்...' எனவோ, 'கலெக்டராகி மக்களுக்காகப் பாடுபடுவேன்' என்றோ டெம்ப்ளேட்டாகப் பேட்டியைத் தட்டிவிடுவார்கள் மாணவக் கண்மணிகள். கலைப்பிரிவு படித்த மாணவர் கூட 'நான் டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்வேன்' என மாற்றிக் கூறும் சம்பவங்கள் எல்லாம் கூட நிகழும். பாஸ் ஆகிவிட்டால் மிட்டாய் கொடுக்குற வைபவங்கள் எல்லாம் நடக்கும். மதிப்பெண்களைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் 'பாஸா... ஃபெயிலா..?' என மட்டுமே கேட்பார்கள். 

அடுத்து ஊருக்கு ஊர் பிரவுசிங் சென்டர்கள் முளைக்கத் தொடங்கிய காலம் வந்தது. 'இங்கு +2, 10th ரிசல்ட் பார்க்கப்படும்' என எழுதிய பேப்பரை பிரவுசிங் மையத்தின் சுவர்களில் ஒட்டி வைத்திருப்பார்கள். ரிசல்ட் வெளியானதும் ஆன்லைனில் நம் மார்க்கைப் பார்த்துக் கொள்ளலாம். அதற்காகவே, பிரவுசிங் சென்டர்களில் கூட்டம் அலைமோதும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சொந்தக்காரர்கள் எல்லாம் போன் போட்டு மார்க்கை விசாரிப்பார்கள். அதோடு விட்டாலும் பரவாயில்லை. அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என ஆளுக்கொரு ஐடியாவைத் தெளிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

ரிசல்ட்

ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி படிக்க வேண்டிய மாணவனைக் குழப்பிக் கும்மி அடிக்க விடுவார்கள். ரிசல்ட் வெளியாகி சில நாள்களுக்கு சொந்தக்காரர்கள் கண்களில் சிக்காமல் இருப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. தேர்வில் ஃபெயில் ஆன மாணவர்கள் நான்கைந்து நாள்கள் வெளியூர்க்குப் போய் தலைமறைவாக இருந்த சம்பவங்கள் எல்லாம் கூட நடக்கும். 'திரும்ப பரீட்சை எழுதி பாஸ் ஆகிக்கலாம்ப்பா... வீட்டுக்கு வா...' எனத் தேற்றிக் கூட்டி வருவார்கள். பத்தாவது ரிசல்ட் வந்த அன்றே பெட்டி படுக்கையோடு கிளம்பிப் போய் எங்காவது வேலைக்குச் சேருபவர்கள் பத்து வருடங்கள் கழித்து தீபாவளிக்கு ஊருக்கு வந்த நிகழ்வுகள் எல்லாம் கூட அரங்கேறி இருக்கின்றன. 

எத்தனை மார்க் எடுத்தாலும், எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்குறதுனு டவுட் ஆகுறது மட்டும் எல்லோருக்குமே நடக்கும். இன்ஜினீயரிங் படிக்கலாம்னு பசங்க ஒரு முடிவு பண்ணி வெச்சுருந்தா யாராவது வந்து 'மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சா வேலை கிடைக்காதாம்ல... மரைன் இன்ஜினீயரிங் படிச்சா... கழுத வருசம் பூராம் கடல் தண்ணிக்குள்ள கிடக்கணுமாம்ல...' என யாராவது கேட்டு மண்டையைக் கழுவிவிட்டுப் போவார்கள். ஆக, எல்லாக் காலகட்டங்களிலும் பப்ளிக் எக்ஸாம் எழுதி முடிக்கிற மாணவர்களை எல்லோருமாகச் சேர்ந்து ஒருவித டென்ஷன்லேயே வெச்சுருப்பாய்ங்க. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close