Published:Updated:

'மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்கமுடியாது?' : நீதிமன்றத்துக்கு படியேறும் புல்லட் மகேஸ்வரி

பாலமுருகன். தெ
'மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்கமுடியாது?' : நீதிமன்றத்துக்கு படியேறும் புல்லட் மகேஸ்வரி
'மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்கமுடியாது?' : நீதிமன்றத்துக்கு படியேறும் புல்லட் மகேஸ்வரி

மாணவர்கள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் எல்லாம் போராடி பெற்றுத் தந்ததுதான் ஜல்லிக்கட்டு. அலங்காநல்லூரில் பற்றிய ஜல்லிக்கட்டு தீ, மெரினா புரட்சி என வெடித்து டெல்லி செங்கோட்டையை கிடுகிடுக்க வைத்தது மாணவர் புரட்சி. கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் போலீசாரின் லத்திக்கு ரத்தம் சிந்தி பெற்றதுதான் ஜல்லிக்கட்டு. 


அப்படி போராடிப் பெற்ற ஜல்லிக்கட்டை போராடியவர்கள் அடிவாங்கியவர்கள், அலங்காநல்லூரின் பாலமேடு அவனியாபுரம் போன்ற ஊர்களின் உள்ளேயே விடாமல் போலீஸ் விரட்டியத்தது. ஜல்லிக்கட்டை பார்க்கமுடியாமல் ஊர் திரும்பியவர்கள் அதிகம்.

இவர்களின் மனக்குமுறல்கள் மனவேதனையை போக்குவதற்காகவும், கவுரவப்படுத்துவதற்காகவும், சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி கேட்டு மார்ச் மாதம் மனு கொடுத்தார், பாண்டிச்சேரியை சேர்ந்த புல்லட்  மகேஸ்வரி.


இதுகுறித்து, புல்லட் மககேஸ்வரிடம் பேசும் போது, "ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் தைப்பொங்கல் நேரத்தில்தான் நடைபெறும். ஆனால் போராடிய எங்களைப் போன்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்க்க அனுமதியில்லை. பாஸ் கொடுத்தும் எங்களை அனுமதிக்கவில்லை போராடியவர்களுக்கு அங்கீகாரம் இல்லை. இது எங்களைப் போன்றவர்களுக்கு மனவேதனையைத் தந்தது"  என்கிறார் வேதனையுடன்


நீங்கள் ஏன் அலங்காநல்லூரைத் தேர்ந்தெடுக்காமல் சிவகங்கை சிராவயலை தேர்ந்தெடுத்தீர்கள்?


"அலங்காநல்லூர் வாடிவாசல் இடமெல்லாம் சிறியது. அனுமதியும் கிடைக்கவில்லை. குறைந்தது நாங்கள் ஐந்துலட்சம் பேர் கூட இருக்கிறோம். அதற்கு ஏற்ற இடம் சிராவயல்தான். சிராவயல் வேலுச்சாமி அய்யாவிடம் இடம் கேட்டோம் அவருக்குச் சொந்தமான நுறு  ஏக்கர் இடத்தை ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ள வழங்கியிருக்கிறார். நிறைய பேர் எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.


 

ஏப்ரல் 30-ம் தேதி எங்களுக்கு தேதி கொடுத்தார்கள். மே 1-ம் தேதி பிள்ளையார் பட்டி கும்பாபிஷேகம் என்பதால் கோட்டாச்சியார், வட்டாச்சியார் எல்லாம், வேலுச்சாமி அம்பலத்திடம் வேறு தேதியில் ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ளுங்கள். தேதி சொல்லுங்கள் என்று சொன்னதும், அவர்  மே 14-ம் தேதி சொல்லிவிட்டு வந்தார்.


அதற்கிடையில்  நடந்தது  மர்மமாக இருக்கிறது. மே 11-ம் தேதி இரவு தாசில்தார், இரவு பதினொரு மணிக்கு வந்து என்னிடம் நோட்டீஸ் கொடுக்கிறார்கள். மார்ச், ஏப்ரல் இரண்டுமாதமும் நான் டிஆர்ஓ, கலெக்டருக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன். அதிகாரிகள் வேலைசெய்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. யாருக்காக இவர்கள் வேலை செய்கிறார்கள்?


 நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி, மே14-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த இருக்கிறோம் என்றேன். அப்பகூட அதிகாரிகள் அனுமதியில்லை என்று சொல்லியிருக்கலாமே? இப்பவந்து நடத்தக்கூடாது என்று சொல்வதற்கு யார் காரணம்? 650 டோக்கன் வழங்கியாச்சு. வாலண்டியர்ஸ் ஆயிரம் பேர் வந்துட்டாங்க .கிட்டதட்ட ஐந்துலட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம். பாதி ஜல்லிக்கட்டு மாடுகள் மதுரை மேலூர் வரை வந்துருச்சு.


இவங்களுக்கு யாரு வண்டி வாடகை கொடுப்பா? இதற்கெல்லாம் பணம் கலெக்டர் கொடுப்பாங்களா? நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டாங்க. கலெக்டர் முதல் தாசில்தார் வரை, ஜல்லிக்கட்டுக்காக நான் சம்பாதித்த பணத்தை செலவு செய்திருக்கிறேன் எனக்கு தேவையா ? போராட்டக்காரர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்பதற்காகதான் நடத்துகிறோம்.


இதற்காக ஸ்பான்சர் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது. போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட அதிகாரிகளும் மிரட்டலுக்கு நாங்கள் பயந்துபோகமாட்டோம். அறவழியில் போராட்டத்தின் மூலம் வெற்றிபெறுவோம். தடுத்தால் மீண்டும் மெரினா புரட்சியாக வெடிக்கும்.


ஜல்லிக்கட்டுனா அத ஜல்லிக்கட்டு பேரவை மட்டும் தான் நடத்தனுமா ? ஏன் நாங்க நடத்தக்கூடாதா? மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்கமுடியாது. அன்று ஜல்லிக்கட்டுக்கு போராடினது, அடிபட்டது, ரத்தம் சிந்தியது மாணவர்களும் இளைஞர்களும்தான் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் மீது மான நஷ்ட வழக்கு போடமுடியும். ஆனாலும் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி நிச்சயம் சிராவயலில் ஜல்லிக்கட்டு நடத்துவேன். இதில் ஆயிரம் சூழ்ச்சிகள் இருந்தாலும் தகர்க்கப்படும்" என்றார் உறுதியுடன்.


சிவகங்கை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பேசும்போது.. "போன மாசம் எம். புதூரில் நடந்த ஜல்லிக்கட்டுல  உயிர்; சேதம் நடந்திருச்சு. காயம் ஏற்பட்டுப் போச்சு. அதே மாதிரி இந்த முறையும் நடந்திறக்கூடாது. அதே நேரத்துல அவுங்களுக்கு நாங்க அனுமதி கொடுக்கல. அவங்களா எல்லா வேலையும் பார்த்தாங்கனா எப்படி? நாளைக்கு பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தா நாங்க தான் பதில் சொல்லனும் அனுமதிவாங்கிட்டு முறையான பாதுகாப்பு வசதிகளோட நடத்துங்கனு சொல்லியிருக்கோம்" என்கிறார்கள் அதிகாரிகள்.