Published:Updated:

''20 வருஷத்துக்கு முன்னாடி படிக்க முடியல.... இப்போ படிச்சுகிட்டு இருக்கேன்!'' - தேவதர்ஷினி

''20 வருஷத்துக்கு முன்னாடி படிக்க முடியல.... இப்போ படிச்சுகிட்டு இருக்கேன்!'' - தேவதர்ஷினி
''20 வருஷத்துக்கு முன்னாடி படிக்க முடியல.... இப்போ படிச்சுகிட்டு இருக்கேன்!'' - தேவதர்ஷினி

சின்னத்திரையில் நகைச்சுவை நடிகையாகப் போட்டியே இல்லாமல் பல ஆண்டுகளாகக் கலக்கிக்கொண்டிருக்கிறார், நடிகை தேவதர்ஷினி. ஐந்து ஆண்டுகளாக சன் டிவி 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சியில் பல கேரக்டர்களிலும் அசத்திக்கொண்டிருப்பவர், சினிமாவில் நடிப்பதோடு, பல ஆண்டுகளாகப் படிப்பிலும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.

"காலேஜ் படிச்சுகிட்டு இருந்த சமயத்துல, தூர்தர்ஷன் சேனல்ல ஒரு சீரியல்ல நடிச்சேன். ஆனாலும் அடுத்து நடிச்ச 'மர்மதேசம்' சீரியல்தான் எனக்குப் பெரிய ரீச் கொடுத்துச்சு. அதே சமயம் காலேஜ்லேயும் என் மதிப்புக் கூடுச்சு. தொடர்ந்து நிறையப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா சீரியல், சினிமா, தொகுப்பாளினினு பிஸியானதுனால படிக்க முடியல. திரைப்படங்கள்ல எனக்கு நகைச்சுவை கேரக்டர்கள் அமைய ஆரம்பிச்சது.

நடுவுல குடும்பம், குழந்தைன்னு குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டியதா இருந்துச்சு. அதுவும் என்னோட 'மர்ம தேசம்' சீரியல்ல நடிச்ச சேத்தனையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. நடிப்புதான் என்னோட லைஃப்னு நினைச்சு இன்டஸ்ட்ரிக்குள்ள வரல. ஆனா அவர் சினிமா, ஆக்டிங்தான் தன்னோட உலகம்னு நினைச்சு வந்தாரு. நல்ல நண்பரா இருந்தவரு, நல்ல லைஃப் பார்டனரானார். என்னோட ஒவ்வொரு தேவைகளையும் சரியா நிறைவேற்றிக் கொடுக்கிறதுலயும் சரி, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து உற்சாகப்படுத்துறதுலயும் சரி. அவரை மிஞ்சவே முடியாது. வாழ்க்கை நல்ல புரிதலோட நகருது.

அடுத்தடுத்து நிறையச் சினிமா, சீரியல்கள்ல நடிச்சுகிட்டு இருந்தாலும் காமெடிங்கிறது மட்டும் எனக்கு மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அப்போதான் சன் டிவி 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சியில நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. முதல்ல ஒரு வருஷம்னு பிளான் பண்ணியிருந்தாலும் அடுத்தடுத்து அந்த நிகழ்ச்சிக்குக் கிடைச்ச வரவேற்புல இப்போ அஞ்சு வருஷத்தைக் கடந்தும் நிகழ்ச்சி வெற்றிகரமா போயிட்டு இருக்குது. குறிப்பா சினிமாவுல கூட எனக்கும் இந்த நிகழ்ச்சியில நடிக்கிறமாதிரியான வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்காது. வார வாரம்  வித்தியாசமான கதாபாத்திரங்கள்னு நடப்புச் சமூக நிகழ்வுகள், கால நிலை, முக்கியமான நிகழ்வுகள்னு ஒவ்வொரு விஷயத்தையும் கணிச்சு ஸ்கிரிப்டை தயார் செய்கிறோம். இந்த நிகழ்ச்சி எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கு. கூடவே காஞ்சனாவுல இருந்து சினிமாவுலயும் நிறைய காமெடி ரோல்ஸ் வந்துகிட்டு இருக்கு. தவிர '36 வயதினிலே' மாதிரியான வித்தியாசமான கதாபாத்திரங்களும் வருவது சந்தோஷமாதான் இருக்கு" என்பவர் தான் படித்துவரும் கைடன்ஸ் அண்டு கவுன்சலிங் கோர்ஸ் பற்றிக் கூறுகிறார்.

"என்னோட அப்பா காலேஜ் பிரின்சிபல். அம்மா ஸ்கூல் பிரின்சிபல். அக்கா காலேஜ்ல படிக்கிறப்போ கோல்டு மெடல் வாங்கினவங்க. என்னோட குடும்பமே படிப்புக்குடும்பம். அப்படித்தான் எனக்கும் படிப்புமேல ஈடுபாடு வந்துச்சு. வேலைக்குப் போறதுக்காகப் படிக்கிறது, ஆசைக்காகப் படிக்கிறதுனு ரெண்டு வகையில படிக்கலாம். நான் இப்போ ஆசைக்காகப் படிக்கிறேன். முன்ன நல்லா படிக்கணும்னு ஆசை இருந்தாலும், படிக்க நேரம் இல்லாம இருந்தது. காஞ்சனா படம் வெளியான உடனே நான் தொடர்ந்து படிக்கணும்னு முடிவெடுத்தேன். சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில எம்.எஸ்ஸி அப்ளைட் சைக்காலஜி அப்ளை பண்ணி நடிப்புக்கு நடுவுல படிச்சு முடிச்சேன். இப்போ டிப்ளோமா இன் கைடன்ஸ் அண்டு கவுன்சலிங் கோர்ஸ் படிச்சுகிட்டு இருக்கேன். ஆக்டிங் தாண்டி ஃப்ரியா இருக்கிற நேரத்துல பெரும்பாலும் படிச்சுகிட்டேதான் இருப்பேன். அதுவும் என்னோடப் பொண்ணு நியத்தியும் நானும் ஒண்ணா படிக்கிற சூழலும் அடிக்கடி நிகழும். எனக்கு அதுவே புதுமையான ஃபீலிங்கா இருக்கும். 

நான் படிச்சு முடிச்சு உடனே கவுன்சலிங் சென்டர் ஆரம்பிப்பேனான்னு தெரியல. ஆனா படிச்ச படிப்பு எப்போதுமே வீணாகாதுங்கிறதை ரொம்பவே நம்புறேன். அதுவும் இன்னைக்குப் பெரும்பாலானவங்க தொடர்ச்சியா நிறைய உளவியல் பிரச்னையில சிக்கியிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் உளவியல் பிரச்னையில சிக்கியிருந்தா, என்னோட படிப்பு அவங்களுக்கு உதவும்னு நினைக்கிறேன். நடிப்பு, படிப்புத் தவிர குடும்பத்துக்கான நேரத்தைச் சரியா கொடுத்துகிட்டு இருக்கேன்" என்பவரிடம் 'உங்க ஃபிட்னஸ்' என்றதும் சிரிக்கிறார்.

"இன்டஸ்ட்ரிக்கு வந்த சமயத்துல இருந்து டெலிவரி ஆகுற வரைக்கும் எந்த டயட் கன்ட்ரோலும் ஃபாலோ பண்ணல. நல்லா சாப்பிடுவேன். ஆனா உடம்பு அதுவா ஸ்லிம்மாவே மெயின்டெயின் ஆகிட்டு இருந்துச்சு. டெலிவரிக்குப் பிறகு கொஞ்சம் வெயிட் ஆனாலும் அடுத்து நானா எதுவும் செய்யாம உடம்பு குறைஞ்சுது. அடுத்து வெயிட் ஏறக்கூடாதுன்னு ஃப்ரீ டைம்ல வொர்க் அவுட், வாக்கிங் பண்ணுவேன். அவ்ளோதான் என்னோட ஸ்லிம் சீக்ரெட்'' என்கிறார் தேவதர்ஷினி.