Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆர்.ஜே பாலாஜிக்கு நான்தான் சீனியர்' - சேட்ட சேது கலகல!

"முதல் மாற்றுத் திறனாளி ஆர்.ஜே" என்று சமீபத்தில் லிம்கா புத்தகத்தில் இடம்பெற்ற சேட்ட சேதுவின் குரலுக்கு மதுரையே குலுங்குகிறது. சென்னையின் பிரபல 'க்ராஸ் டாக்' ஷோவுக்கு முன்னோடியும் பல தன்னம்பிக்கை முயற்சிகளை முன்னெடுப்பவருமான சேட்ட சேதுவுக்கு வாழ்த்துகள் சொன்னால் 'தேங்க்ஸ் ஜி' என அசால்ட் சேதுவாக அவதாரம் எடுக்கிறார்.

"என்னோட ஒரிஜினல் பேரு சேதுபதி. ஆனா அதுவே யாருக்கும் தெரியாது. எல்லாருக்கும் ‘சேட்ட சேது’ன்னு தான் என்னைத் தெரியும். ஒரு முறை ரேஷன் கார்டுல சேட்ட சேதுன்னு என்னோட பேர மாத்தச் சொல்லி நான் போனப்போ அவங்கவிட்ட லுக் இருக்கே... என்னிக்கும் மறக்க முடியாது!' என தன் ட்ரேட்மார்க் சிரிப்போடு கேள்வி பதிலுக்குத் தயாராகிறார் சேதுபதி என்கிற சேட்ட சேது.

சேட்ட சேது

ரேடியோ என்ட்ரி எப்படி?

படிச்சது பி.காம். அதுக்கப்புறம் ஒரு கம்பெனியில கூட உருப்படியா வேலை பாக்கல. கம்பெனி விட்டு கம்பெனி மாறிகிட்டே எதுலயும் நிரந்தரமில்லாம ஓடிட்டே இருந்தப்போதான் ஒரு பிரபல ரேடியோ ஸ்டேஷன்ல ஆர்.ஜேக்கு ஆடிஷன் நடந்துச்சு. என் வாழ்க்கைல என் படிப்புல மட்டும்தான் ’காம்' இருந்துருக்கே தவிர நான் ஒரு நாளும் காமா (calm) இருந்ததில்ல. அது தவிர ஆர்.ஜேயிங்லயும் எனக்கு பெரிய அளவுல ஆர்வம் இருந்தது. பேசுற வேலைதானே... ஜாலியா ட்ரை பண்ணிப் பாப்போமேன்னு பண்ண, அது க்ளிக் ஆகி 4 வருஷங்கள் அந்த ஸ்டேஷன்ல இருந்துட்டு இப்போ சூரியன் எஃப்.எம்ல 5 வருஷமா ஆர்.ஜேவா இருக்கிறேன். இப்போ லிம்கா புத்தகத்துல நான் இடம்பிடிச்சிருந்தாலும் முதன்முதலா என்னை 2010ல் விருது கொடுத்து அங்கீகரிச்சது நம்ம விகடன்தான் என சிலாகிக்கிறார்.

'ராங் கால்' எஸ்.டி.டியைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க பாஸ்!

எப்ப பாத்தாலும் சும்மாவே பேசிட்டும் பாட்டு ப்ளே பண்ணிட்டும் இருந்து போரடிச்சுப் போச்சு. புதுசா ஏதாவது நம்ம ரேடியோ துறைல ட்ரை பண்ணணுமேன்னு யோசிச்சப்போ உதிச்ச ஐடியாதான் ‘ராங் கால்”. அதுவரை பெருசா என் பேர் மக்களுக்குத் தெரியல. ராங் கால் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம்தான் நம்ம பேரும் ஷோவும் மக்கள்கிட்ட பெரிய அளவுல ரீச் ஆச்சு. முதல்ல நாங்களா செட் பண்ணி காலர்ஸை பேச வைக்கிறோம்னு மக்கள் நினைச்சாங்க. அப்புறம் அவங்ககிட்ட இருந்தே அவங்க கலாய்க்க விரும்புறவங்களோட நம்பரை வாங்கி நான் கலாய்க்கவும்தான் ஷோ ரொம்ப கலாட்டாவா போச்சு. மக்களும் சிறப்பா ஏத்துக்கிட்டாங்க. மதுரைல நான் பண்ண ராங் கால் ஷோவையே திருச்சி, சென்னைனு வெவ்வேறு ஊர்கள்லயும் ஒலிபரப்ப ஆரம்பிச்சாங்க. அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு அத நான் விட்டுட்டு வேற ஷோ பண்ணப் போயிட்டேன். அதோட தொடர்ச்சியாத்தான் நம்ம ஆர்.ஜே. பாலாஜி க்ராஸ் டாக்னு ஒரு ஷோ பண்ண ஆரம்பிச்சார்.

மறக்க முடியாத ராங் கால் அனுபவம்?

ஒரு முறை ஆபீஸ்ல முக்கியமான ஒரு மீட்டிங்ல இருந்த ஒருத்தருக்கு கால் பண்ணி ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் கொஞ்சம் வெளியே வந்து பேசுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். முதல்ல முடியாதுன்னு சொன்னவர், என் வாய்ஸ்ல இருந்த சீரியஸ்னெஸை புரிஞ்சுகிட்டு மீட்டிங்ல எக்ஸ்க்யூஸ்லாம் கேட்டுட்டு வெளியில வந்து ”சொல்லுங்க சார்! என்ன விஷயம்?”ன்னு பதட்டமா கேட்டார். நான் சிரிச்சுகிட்டே "சிலுக்கோட அக்கா பொண்ணுக்கு காது குத்தப் போறோம். டொனேஷன் தாங்க"ன்னு கேக்கவும் கட கடன்னு கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சுட்டார். கெட்ட வார்த்தைனா உங்க வீட்டு கெட்ட வார்த்த எங்க வீட்டு கெட்ட வார்த்த இல்ல. உலக மகா கெட்ட வார்த்தைகள். பாரபட்சம் பாக்காம திட்டுனதை நானும் சிரிச்சுகிட்டே கேட்டுக்கிட்டேன். 

ரகளைக்கார சேட்ட சேதுவோட பெர்சனல் பக்கங்கள்?

சேட்ட சேது

என்னோட குரலயும் நான் காமெடியா பேசுறதையும் கேட்டு நிறைய பொண்ணுங்க எனக்கு ப்ரப்போஸ் பண்ணுவாங்க. ஆனா அதுக்கப்பறம் நேர்ல வந்து பாத்துட்டு கண்டுக்காம போய்டுவாங்க. அப்படி ஒரு முறை பாரதின்னு ஒரு பொண்ணு வந்து என்னை பார்த்துட்டு போனாங்க. பேசிப் பழகுனதுல எங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரையொருத்தர் பிடிச்சுப் போக, கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணோம். வழக்கம் போல பொண்ணு வீட்டுல ஒத்துக்கலை. அதனால திண்டுக்கல்ல போய் கல்யாணம் பண்ணிகிட்டு சில நாள்கள் இருந்தோம். அப்புறம் பிரச்னைகள் சரியாகி இப்போ எங்களுக்கு சாம்பவி, ஐஸ்வர்யான்னு ரெண்டு பெண் குழந்தைங்க. மனைவி பாரதி டாக்டரேட் வாங்கி இப்போ மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா இருக்காங்க. அழகான குட்டிக் குடும்பம் எங்களோடது.

சில நாள்களுக்கு முன்னாடி உங்களோட கார் ட்ரைவிங் வீடியோ ஒண்ணு வைரல் ஆச்சே?

உடல் குறைபாடு உள்ளவங்க அதை ஒரு பெரிய குறையா எடுத்துக்காம தன்னம்பிக்கையோட கார் ஓட்டுறது முதலான வேலைகள்ல கூட தயங்காம ஈடுபடணும்னு மக்களுக்கு சொல்ல நினைச்சேன். என்னோட ஸ்விஃப்ட் டிஸையர் காரை எனக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்க சொல்லி என்னோட கார் மெக்கானிக்கிட்ட  கொடுத்தேன். அவரும் அதை பண்ணிக் கொடுத்தார். 'ஃபேஸ்புக் லைவ்' மூலமா மக்களுக்கு அந்த காரை ஓட்டிக் காண்பிச்சேன். பல ஆயிரங்களைத் தாண்டி லைக்ஸ் வாங்கியிருந்த அந்த வீடியோவைப் பார்த்துட்டு தன்னம்பிக்கை வந்ததா நிறைய பேர் மெசேஜ் பண்ணியிருந்தாங்க. என்னை மாதிரி போலியோவால பாதிக்கப்பட்டவங்களும் இந்த முயற்சியை முன்னெடுக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. 

சேட்ட சேதுவோட வருங்கால ப்ளான்?

பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்பராஜ்... இவங்க ரெண்டு பேர்கூட இருந்த பழக்கத்துனால 'இறைவி' படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணேன். இப்போ என்னோட நண்பனும் தம்பியுமான கவுதம் இயக்கத்துல 'மிகைநாடி'னு ஒரு க்ரைம் த்ரில்லர் குறும்படத்துல டிடெக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன். பாபி சிம்ஹா வெளியிட்ட இந்த படத்தோட டீஸரைத் தொடர்ந்து கூடிய சீக்கிரமே இன்னும் ஒரு முக்கியமான பிரபலம் அந்தப் படத்தை வெளியிட, சில நாள்கள்லயே நீங்க எல்லாம் என்னை ‘டிடெக்டிவ் சேது’வா ஸ்க்ரீன்ல பாக்கப் போறீங்க. யாரந்த முக்கியமான பிரபலம்னு மட்டும் கேக்காதீங்க... சஸ்பென்ஸ். இப்போ லிம்கா புத்தகத்துல இடம்பிடிச்ச மாதிரி கூடிய சீக்கிரம் கின்னஸ் புத்தகத்துலயும்  இடம்பிடிக்கணும். அப்படியே ஒரு நல்ல படம் இயக்கணும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close