Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொண்டாடுவோம் நம் உறவுகளை! #InternationalFamilyDay

உறவுகள்

ரு தாயின் வயிற்றில் பிறந்து, ஒன்றாய் வளர்ந்து, அடித்துப் புரண்டு சந்தோஷிக்கும் காலங்களில் தெரிவதில்லை, பின்னாள்களில் அந்த உறவுகள் எல்லாம் எத்தனை அழகான பொக்கிஷ கணங்களாய் நினைவில் நிற்கப் போகிறார்கள் என்று!

சண்டைகளும் சமாதானங்களும் சமரசங்களும் அவரவர்க்குத் திருமணம் ஆகிச் செல்லும் வரையில் மிக எளிதான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. பின் ஒவ்வொருவரும் திருமணம் முடிந்து தனித்தனியாய் குடும்பம் குழந்தைகள் என்றான பின்.. எங்கிருந்து வருகின்றன இந்த மனஸ்தாபங்களும்.. நீயும் நானுமாய் இருந்தவர்களுக்குள் நீயா நானா போட்டிகளும்.. நிரந்தர விலகல்களும்?!

அப்போதெல்லாம் உறவினர் வீடுகளில் நடக்கும் கல்யாணம், காதுகுத்து, கெடா வெட்டு என எல்லா விசேஷங்களுக்கும் அழைப்பு வரும்... அத்தனை சந்தோஷமாய்க் கிளம்பிச் செல்வோம். பகிரவும் மகிழவும்தான் எத்தனை கதைகள் இருந்தன அப்போது? விருந்து முடிந்து வீடு திரும்புகையில் இளகிக் கிடக்கும் மனது!

காலப்போக்கில் பிழைப்புக்கென்று திசைக்கொருவராய்ப் பிரிய, சந்திப்புகள் அருகிப் போய், உறவுகளில் இருந்த நெருக்கமும் மறைந்து போனது.

ஒன்றாய்ப் பிறந்தவர்களே சந்தித்துக் கொள்ள இயலாத சூழலில், ஒன்று விட்ட சொந்தங்கள் என்ன செய்யும்? இப்படி விலகி நிற்கும், உறவுகளை இணைக்கும் விதமாக, பெரும் முயற்சியோடு என் தாய் வழி சொந்தங்களை ஒன்று சேர்த்து, நாங்கள் ’ஒன்று கூடல் நிகழ்வு’ ஒன்றை, கடந்த 2013-ம் ஆண்டு நடத்தினோம். கிட்டத்தட்ட 90 பேர் கலந்துகொண்ட அந்த நெகிழ்ச்சியான நிகழ்வைப் பற்றி, ‘அவள் விகடனில்’ பகிர, அதை வாசித்து விட்டுப் பாராட்டிய உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கணக்கே இல்லை.

அந்த நிகழ்வைத் தொடர்ந்து, என் நண்பர்கள், உறவினர்கள் வீட்டிலும் குடும்ப ஒன்று கூடல் நடத்தியதாய்க் கேள்விப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

அதற்கடுத்து நாங்கள் மீண்டும் சந்திந்துக்கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டோம்.  ஆனால், இரண்டு வருடங்கள், எங்கள் குடும்பம் மொத்தமும் உறவுகள்சந்தித்துக்கொள்ள இயலவில்லை.  ஏனென்றால், எங்கள் இளைய தலைமுறையில் நான்கு குடும்பங்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருந்தார்கள். அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டுதான்  எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 20, 30 பேர் மீண்டும்  சந்தித்துக்கொண்டோம். நெய்வேலியில் பணியாற்றிய என் அண்ணன் ஒருவர் பணி ஓய்வு பெறுகையில், அங்கே எல்லோரும் ஒன்று கூடி, அடித்த லூட்டியில் நெய்வேலியே குலுங்கியது. 

அங்கே நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், மின்சாரம் தயாரிக்கும்  இடம், சுரங்கம் தோண்டிய பகுதியை அழகான ஏரியாக்கி, சுற்றிலும் மரங்கள் வளர்த்து உருவாக்கியிருந்த அடர்வனம் .. என எல்லா இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு வந்தது அருமையான அனுபவம்.  உண்மையில், இந்தப் பயணம், அத்தனை மகிழ்ச்சிகரமாக அமைந்ததற்கு காரணம், எங்கள் குடும்பத்துடன் சென்றதுதான்!  ஒருவேளை, நான் மட்டும் தனியாக பயணித்து இருந்தால்  இத்தனை நெகிழ்ச்சியான அனுபவம் கிடைத்திருக்குமா? 

அடுத்த வருடம் , நாங்கள் கோயம்புத்தூரில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறோம். பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து பேருக்கு, இந்த ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் போகும். ஆனாலும், நாங்கள் இப்படியான நிகழ்வைத் தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும் குடும்ப உறவுகளுடன் சுலபமாக இணைந்திருக்க வழிவகுக்கிறது. நாங்கள் ஆரம்பித்த குடும்ப வாட்ஸ்அப் க்ரூப் மூன்று வருடமாக சிரிப்பும் கலகலப்புமாய்த் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தவிர, எங்களின் இளைய தலைமுறை வாரிசுகளுக்குத் தனியாக ’கஸின்ஸ் க்ரூப்’ (cousin group) என ஒரு ’வாட்ஸ்அப் க்ரூப்’ தொடங்கி, அவர்களின் சந்திப்பும் அவ்வப்போது நடக்கும்.

இதுவரை எங்கேனும் சந்திக்கையில் சின்ன முறுவலோடு கடந்து சென்ற உறவுகள், இப்போதெல்லாம் எங்குப் பார்த்தாலும் உறவு முறை சொல்லி அழைத்து, வாட்ஸ்அப்பில் செய்த அரட்டைகளை நினைவுகூர்ந்து சிரிக்கையில், மனம் நிறைவாய் இருக்கிறது.

தேவையில்லாத போட்டி மனப்பான்மைகளால்.. உறவுகளிடம் முகம் திருப்பி.. மனம் வருந்தி.. அதனால் நாம் இழக்கும் மகிழ்ச்சித் தருணங்கள் நம் வாழ்வில் திரும்ப வரப் போவதே இல்லை.

துவளும் நேரத்தில் சில உறவுகள் தோள் கொடுக்கலாம்.. சில எட்டி நின்று வேடிக்கை பார்க்கலாம்...சாதிக்கும் சமயங்களில் சில கை தட்டிப் பாராட்டும்.. சில கை கொட்டிச் சிரித்துக் கேலி செய்யவும் கூடும்.

உறவுகளின் எல்லா நல்லவை அல்லாதவை தெரிந்துணர்ந்த பிறகு, குறைகளை மட்டுமே விமர்சித்துக் கொண்டு இருக்காமல், நம்மால் எல்லா இடத்திலும் பொருந்தி, நம் மகிழ்ச்சியை எதன் பொருட்டும் இழக்காமல் சந்தோஷிக்க முடியுமேயானால்... அதுவே நம் வெற்றி!

விட்டுக் கொடுத்து வாழ்வோம்.. நம் வாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும் விட்டு விடாமல் வாழ்வோம்!

- சண்முகவடிவு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement