`வாய்ஸ் கல்ச்சர்' - ட்ரெண்ட் ஆகும் இசையின் புதிய கலாசாரம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்ருதி பிசகாமல் ஏற்ற இறக்கங்களோடு பாடும் இளம் பாடகர்களை, நம்மை அறியாமல் ரசிப்போம். `இதேபோன்று நாமும் ஒருநாள் பாட வேண்டும்' என ஆசைச் சிறகுகள் சிறகடிப்பதை உணர்ந்திருப்போம். வளர்ந்து வரும் பாடகர்களும், திரையிசைப் பின்னணிப் பாடகர்களும் பல்வேறு வகையான பாடல்களைப் பாடுவர். மேல்நாட்டு இசைக்கு ஒருவர், நாட்டுப்புறப் பாடல்களைப் பாட மற்றொருவர், கர்னாடக இசைப் பாடல்களைப் பாட வேறொருவர் எனப் பாடல் பாடுவோரில் பல வகை உண்டு. ஆனால், அனைவராலும் அனைத்து வகையான பாடல்களையும் பாட முடிகிறதா? இதற்கான பயிற்சியைப் பெறக்கூடிய புதிய இசைக் கலாசாரம் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அதுதான் குரலிசைப் பயிற்சி என்று சொல்லக்கூடிய `வாய்ஸ் கல்ச்சர்'. இசை உலகில் தற்போது பிரபலமாகிவரும் 'வாய்ஸ் கல்ச்சர்' பயிற்சியை, பிரபல திரைப்படப் பாடகர்களும் பெற்றுவருகின்றனர். சென்னையில் தனி ஸ்டூடியோ அமைத்து குரலிசைப் பயிற்சி அளித்துவரும் இளம் இசையமைப்பாளர் ஆர்.என்.வசந்திடம் பேசினோம்...

வாய்ஸ் கல்ச்சர் வசந்த்

" `வாய்ஸ் கல்ச்சர்' அப்படினா?"
"வாய்ப்பாட்டு எனப்படும் குரலிசைப் பயிற்சியில், தற்போது பெரும்பாலானோரால் அதிகம் முணுமுணுக்கப்படும் சொல் 'வாய்ஸ் கல்ச்சர்'. சென்னையில் முதன்முறையாக உலகத் தரத்தில் குரல் மேம்பாட்டுத்திறன் எனப்படும், வாய்ஸ் கல்ச்சர் பயிற்சியை அளித்து வருகிறோம். இந்தப் பயிற்சியானது, குரலிசையை வளப்படுத்தும் ஓர் உன்னதமான பயிற்சி. சாதாரணமாகப் பாடிக்கொண்டிருக்கும் ஒருவர் இந்தப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொண்டால், தொழில்முறை பாடகர்களைப்போல் பாடக்கூடிய திறனை இயல்பாகப் பெறுவார். இசையைக் கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதோடு, இசையை ஆழமாக உணர்ந்து ரசிக்கும் ரசிகர்களும் பெருகிவிட்டனர். அதே நேரத்தில், இசைப் பயிற்சியை வழங்கும் பயிற்சி மையங்களும் பெருகிவிட்டன. சென்னையில் முதன்முறையாக சர்வதேச தரத்தில் குரலிசை மேம்பாட்டுத்திறன் பயிற்சியைத் தொடங்கியுள்ளோம். கடந்த ஒன்றரை வருடங்களாக, எங்களது இசை வகுப்புகளில் பயிற்சி பெற்று, தற்போது தேர்ந்த பாடகர்களாகத் திரையிசைத் துறையில் நட்சத்திரங்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.''

வாய்ஸ் கல்ச்சர் வசந்த்

``பயிற்சிக்கான தகுதி?''
"இசையின்பால் தீராக்காதல், தமிழ் உச்சரிப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றுடன் இசை மீதான ஆர்வம் அவசியம்.''

``பயிற்சி வகுப்புகள் குறித்து...''
மற்ற இசை வகுப்புகளைப்போல் அல்லாமல், இங்கு முற்றிலும் புதுமையான முறையில் பயிற்சி அளிக்கிறோம். தமிழ்நாடு மட்டுமன்றி  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இதுவரை வாராந்திர வகுப்புகளாக இருந்த  இந்தப் பயிற்சி, இனி முழு நேர மற்றும் பகுதி நேர, ஒரு வருட டிப்ளோமா பட்டயப்படிப்பாகவும் நடத்தப்பட உள்ளது. மேலும், கோடை விடுமுறை சிறப்புப் பயிற்சி வகுப்புகள், குறுகியகால சிறப்பு வகுப்புகள், வார இறுதி வகுப்புகள்  மற்றும் பகுதி நேர வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.  குரலிசையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வருவோர், இந்தப் பயிற்சி வகுப்பை ஒரு பொக்கிஷமாகவே கருதுகின்றனர்."

"சினிமாவில் பின்னணி பாடுவது என்பது ஒவ்வொரு பாடகருக்கும் பெருங்கனவாக இருக்கும். அந்த வகையில் உங்களது பயிற்சி எவ்வாறு அவர்களின் திறமையை வளர்த்துவிடும்?"
"இங்கு பயிற்சி பெறும் அனைவரும், இசைத் துறையின் பல்வேறு வல்லுநர்களைச் சந்தித்து, அவர்களது அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். எஸ்.பி.பி., ஜானகி, ஆஷா போன்ஸ்லே போன்ற ஒருசிலர்தான் எல்லாவிதமான இசைவடிவிலும் பாடுகிறார்கள். தற்போது உள்ள பாடகர்கள் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி, கிராமிய இசை,மேற்கத்திய இசை என  ஏதேனும் ஒன்றில்தான் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து இசை முறைகளையும் எளிதாகக் கையாளும் திறன் பெரும்பாலும் வாய்க்கப் பெறுவதில்லை.


போட்டி நிறைந்த இந்த உலகில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும்தான், பிரபல பாடகர்கள்கூட இந்தப் பயிற்சி வகுப்புக்கு வருகிறார்கள்.  இங்கு இசையமைப்பாளர்களின் நேரடி பயிற்சி இருப்பது மேலும் ஒரு சிறப்பம்சம். திரையிசை மட்டுமன்றி  கிராமிய இசை, கர்னாடக, ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசை உலகின் பல்வேறு நிபுணர்களும் இங்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கின்றனர். டிப்ளோமா பயிற்சியின் நிறைவில் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிதாக இசையமைக்கப்பட்ட ஒரு பாடலை பாடும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கிறோம். இதன் மூலம் அவர்கள் திரைப்படப் பின்னணிப் பாடகர்களாகவோ அல்லது இசை உலகுக்குள் தனித்துவம்மிக்கக் கலைஞர்களாகவோ வர வாய்ப்பு உள்ளது.''

``இந்தப் பயிற்சி வகுப்புகளால் தங்களின் இசை அமைப்புப் பணி பாதிக்கப்படுகிறதா?''
``நிச்சயமாக இல்லை. இங்கு பயிற்சி அளிப்பதன் மூலம் இசையின் பரிணாம வளர்ச்சியை உணர முடிகிறது. இங்கு அளிக்கக்கூடிய பயிற்சியால் இசை நுணுக்கங்களைத் தெளிவாக எடுத்துச்சொல்ல முடிகிறது. இசை அமைப்பது என்பதே என் பெருங்கனவு. என் முதல் பாடல் கடந்த வருடம் வெளியானது. அது ஒரு இண்டிபெண்டென்ட் மியூசிக் ஆல்பம். அதில் ஸ்ரேயா கோஷலைப்  பாடவைத்தேன்.
'கண்ணாடி மழையில்' என்பது பாடலின் பெயர். ஒரு பெண்ணின் உள் உணர்வுகளை எடுத்துச்சொல்லும் காதல் பாடல் அது.  எழுத்தாளர் தமயந்தியை, இந்தப் பாடலின் மூலம் பாடலாசிரியராக இசை உலகுக்கு அறிமுகப்படுத்தினோம்."

"கண்ணாடி மழையில் பாடலுக்கான  வரவேற்பு எப்படி இருந்தது?''
"பாடலை வெளியிடுவதில் சில தடங்கல்கள் இருந்தன. ஓடும் ஓடையில் தடையாக சில பாறைகள் இருந்தால்தானே, அந்த ஓடையிலிருந்து எழும் ஒலி இசையாகும். அதுபோல தடைகளைத் தகர்த்தெறிந்து ஒலித்த அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்கான அடையாளமாக, பல திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமை. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், பா.ரஞ்சித், அகத்தியன், மீரா கதிரவன் உள்ளிட்ட பலரும் பாடலைக் கேட்டு வாழ்த்தியது என்னால் மறக்க முடியாது தருணங்கள்."

வாய்ஸ் கல்ச்சர் வசந்த்

"அந்த ஒரு பாடல்தான் உங்கள் அனுபவமா?"
"இதுவரை ஒன்பது பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டேன். 2016-ம் ஆண்டு பொங்கலன்று இரண்டே மணி நேரத்தில் ஜல்லிக்கட்டுப் பாடலை எழுதி, இசை அமைத்து, பாடி வெளியிட்டேன். அந்தப் பாடல் இளைய சமுதாயத்தினருக்கான ஓர் ஊக்கியாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அப்போது நான் அடைந்த மனநிறைவையும், அந்த உணர்ச்சி மிகுந்த தருணங்களையும் வெறும் வார்த்தைகளால் வடிக்க முடியாது. அதுதான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வந்த முதல் பாடல் என்று பலரும் என்னிடம் சொன்னார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது."

"திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கிவிட்டீர்களா?"
"பெரிய இயக்குநரிடமிருந்து அறிவிப்பு வந்துள்ளது. மேலும், சில படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைக்கும் வாய்ப்புகளுக்கான சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன."

வாய்ஸ் கல்ச்சர் ஸ்டூடியோ மூலம் உலகத் தரமான இசைக் கலைஞர்கள் விரைவில் வெளிவர வாழ்த்துகள்!

படங்கள்: ப.பிரியங்கா
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!