
இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், ஃபேஸ்புக் மற்றும் மொபிக்விக் ஆகிய நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்மூலம் பி.எஸ்.என்.எல், அதன் இணையம் மற்றும் பிற சேவைகளின் வீச்சை கிராமப்புறங்களில் அதிகரிக்க முயற்சி செய்ய உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்மூலம், அந்த நிறுவனத்தின் 'எக்ஸ்பிரஸ் வைஃபை' திட்டத்தை இந்தியக் கிராமங்களுக்கு எடுத்துச்செல்ல உள்ளது பி.எஸ்.என்.எல். எக்ஸ்பிரஸ் வைஃபை திட்டத்தின்மூலம், கிராமங்களில் நிறுவப்படும் பொது 'ஹாட் ஸ்பாட்கள்' வழியே இணையச் சேவையை கிராமங்களில் பரவலாக்க முயல உள்ளது, பி.எஸ்.என்.எல்.
மேலும், மொபிக்விக் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்மூலம் பி.எஸ்.என்.எல், அதன் 'மொபைல் வாலட்' சேவையை எளிதாக்க உள்ளது.
இப்படி அடுத்தடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு களத்தில் டஃப் போட்டி கொடுக்க உள்ளது.