Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? #InternationalMuseumDay

ICOM (International Council of Museums) எனும் அமைப்பு, அருங்காட்சியகங்கள் தொடர்பாக ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாகக்கொண்டு பல நிகழ்வுகளை நடத்திவருகிறது. உதாரணத்துக்கு அருங்காட்சியக வல்லுநர்களும் பொதுமக்களும் சந்தித்துப் பேசவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்னைகளை மக்களுக்கு விளக்கவும், சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை ICOM எடுத்துவருகிறது. இந்தத் தருணத்தில், நீங்கள் சென்னையில் இதுவரை சென்றிடாத ஓர் அருங்காட்சியகத்துக்கு இப்போது செல்வோமா...

சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்கவும் குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் ஏதுவான பல இடங்கள் சென்னையில் இருக்கின்றன. குறிப்பாக  எழும்பூர் அரசு அருங்காட்சியகம், பிர்லா கோளரங்கம், வள்ளுவர் கோட்டம், பாம்புப் பண்ணை, காந்தி மண்டபம், குழந்தைகள் பூங்கா, வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரை, முட்டுக்காடு, கோவளம், புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் மட்டுமல்லாமல், பல தீம் பார்க்குகளும் உள்ளன. ஆனால் நம்மில் பலர், சென்னை புறநகர்ப் பகுதியான மறைமலைநகரில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரீஜினல் டெலிகாம் பயிற்சி நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு அருங்காட்சியகத்தைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். உண்மையில், பலருக்கு இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்திருக்காது. நம் சென்னைப் பொக்கிஷங்களில் ஒன்றாக இருந்துவரும் இந்தத் தொலைத்தொடர்பு அருங்காட்சியகம், பல வரலாற்று ஆவணங்களைக் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறை பல பரிணாமங்கள் எடுத்துள்ளதை நாம் அறிவோம். குறிப்பாக, அதிகளவிலான தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. தொலைத்தொடர்பு சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தும்  நம் இளைய தலைமுறை, இதன் வரலாற்றை அறிந்துவைத்திருப்பது அவசியமான ஒன்று.

மியூசியம்

ஒரு போன் காலில் இன்று வெகுசுலபமாகப் பேசிவிடுகிறோம். ஆனால் அன்று, அது எவ்வளவு கடினம் என்று கடந்த தலைமுறைக்கு நிச்சயம் தெரியும். இன்றைய அபரிமிதமான தொலைத்தொடர்பு வளர்ச்சிக்குப் பின்னால் அன்றைய தொலைத்தொடர்பு தொழிலாளர்களின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கின்றன. அன்று ஒரு போன் கால் பேச, பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு புதிய தொலைபேசி சேவையைப் பெற பல மாதங்கள், வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்படியே காத்திருந்து பெற்றாலும் ஒரு போன் கால் பேசி முடிப்பதற்குள் அத்தனை பிரச்னைகள் எழும். அடிக்கடி போன் மற்றும் லைன் பிரச்னை, கொர கொர சத்தம் இப்படிப் பல சிக்கல்களைப் பயனாளர்கள் சந்தித்தார்கள். சேவை வழங்கும் தொலைத்தொடர்பு துறையோ, அதற்குமேல் பல சிக்கல்களைச் சந்தித்தார்கள். தொடர்புகொள்ள காத்துக்கிடக்கும் மக்களைச் சமாளிப்பது முதல் மண்ணைத் தோண்டி தொடர்பு இணைப்புகளைச் சரிப்படுத்துவது வரை அவர்களின் பணியும் கடுமையாகவே இருக்கும். இவை அனைத்தும் சில பகுதி மட்டுமே, இப்படிப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட தொலைத்தொடர்பு வரலாற்றை, மறைமலை நகர் அருங்காட்சியகம் நம் கண்ணெதிரே கொண்டுவந்துவிடும்.

இங்கு நாம் பயணித்தால், ஆரம்பகால தொலைத்தொடர்பு முறைகளை முழுவதுமாகத் தெரிந்துகொள்வதோடு, பழைமை வாய்ந்த பல தொலைத்தொடர்பு சாதனங்களையும் இங்கு பார்க்கலாம். மிக முக்கியமாகத் தந்திக்கருவிகள். இதைப் பயன்படுத்தும் முறை, தொலைபேசி உருவான வரலாற்றுப் பலகைகள், பழைமை வாய்ந்த தொலைபேசிக் கருவிகள், டிரங்க் கால் இயக்கப்படும் முறை, டிரங்க் கால் பரிணாமம் அடைந்த வரலாறு, தானியங்கி இணைப்பகம், தொலைத்தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்ட கம்பியின் வகைகள், தொலைத்தொடர்பு நிலையம் இயங்கும் முறை, அலைவரிசைத் தகவல்கள், மட்டுமல்லாமல், இன்று பயன்படுத்தப்படும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், செயற்கைக்கோள் பயன்பாடுகள் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். தற்போது பல கல்லூரி மாணவர்களுக்குத் தொலைத்தொடர்பு சார்ந்த வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் எடுத்துவருவதால், சென்னை BSNL-RTTC - யிடம் அனுமதி பெற்று ஒரு விசிட் அடிக்கலாம்.

இங்கு பொழுதைக் கழிப்பதற்கு ஒன்றும் இல்லை. பொழுதைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கின்றன. சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரிந்தும் நம்மால் சும்மா இருக்க முடியுமா?

மே 18 - அனைத்துலக அருங்காட்சியக நாள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close