வெளியிடப்பட்ட நேரம்: 21:48 (18/05/2017)

கடைசி தொடர்பு:08:39 (19/05/2017)

'நம்புங்கள்...சொர்க்கம் பூமியில்தான் இருக்கிறது!' - உலகின் மிகவும் தூய்மையான இடங்கள்

ரும்புகை கலப்பில்லாத சுத்தமான காற்று, கண்ணாடிதான் உருகி ஒடுகிறதோ என யோசிக்கத் தோன்றும் நீரோடைகள், பொங்கிப் பெருகும் ஊற்றுகள், நெகிழிகள் காணப்படாத ஒரு சுற்றுச்சூழல், பறவைகள் விலங்குகளின் சத்தம் கேட்டாலும்கூட நிலவும்  ஓர் அமைதியான சூழ்நிலை, எல்லைகளே இல்லாமல் பரந்துவிரிந்த காடுகள்... இப்படி இயற்கையின் ரம்மியம் மிளிரும் ஓர் இடத்தை விரும்பாத மனித மனம் ஒன்று இருக்க முடியுமா என்ன? 

தினமும் மாசுபட்ட சுற்றுச்சூழலில் வாழும் நமக்கு இப்படி  ஓர் இடத்தைப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று என நீங்கள் நினைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இன்றைக்கும் கூட மனிதர்களின் காலடித் தடம்கூட பதியாத பல இடங்கள் உலகில் இருக்கின்றன. அவை இன்னும் மாசடையாமல் இயற்கையின் அற்புதத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப் பூலோக சொர்க்கம் என சொக்கி நிற்கும் அளவிற்கான சில இடங்களின் பட்டியல் இங்கே...

பப்புவா நியூ கினியா

பப்புவா நியூ கினியா

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் அருகே இருக்கிறது பப்புவா நியூ கினியா தீவு. மாசடையாத கடற்கரைகள், மழைக்காடுகள் என தீவு முழுவதுமே காடுகளும் மலைகளும் பரந்து விரிந்து கிடக்கின்றன. கிராமத்து வாழ்வின் அருமையை உணர்ந்தவர்கள் என்பதால் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் மக்கள் மட்டுமே நகரத்தில் வாழ்கின்றனர். இந்த தீவின் பெரும்பாலான இடங்களை அந்த ஊர் மக்களே பார்த்திருக்க மாட்டார்கள். மர கங்காரு எனப்படும் விலங்கு பப்புவா நியூ கினியாவில் மட்டுமே இருக்கிறது. இன்னும் வெளி உலகம் அறியாத வகைப்படுத்தப்படாத விலங்குகளும், தாவரங்களும் இங்கே அதிகம் இருக்கின்றன என ஆச்சரியப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள்..

சீசெல்ஸ்

உலகின்  தூய்மையான இடங்கள் (சீசெல்ஸ்)

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் அருகே அமைந்துள்ளது இந்த இடம். இது பொதுவாக சீசெல்ஸ் என அழைக்கப்பட்டாலும் 115 தீவுகளின் கூட்டமைப்பாக இருக்கிறது நாட்டின் மொத்த மக்கள் தொகை ஒரு லட்சத்துக்கும் கீழ் என்பதால் பெரும்பாலான தீவுகள் மனிதர்கள் நடமாட்டமில்லாமல் காணப்படுகிறது  இங்கே இருக்கும் கடற்கரைகளில் மற்ற இடங்களைப் போல இல்லாமல் சற்று வித்தியாசமான பவுடர் போன்ற மணல் காணப்படுகின்றது. கடற்கரைகள் மாசு இல்லாத இடமாக இருக்கின்றது. நாட்டின் தேசியப் பறவையான கறுப்புக் கிளியை வேறு உலகின் எந்த இடத்திலும் பார்க்க முடியாது. இயற்கையளித்த வரத்தைக் காப்பாற்றுவற்கு நாட்டின் 50% கடற்கரைகளைப் பாதுகாக்கப்பட்டவையாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

நமீபியா பாலைவனம்

நமீபியா பாலைவனம்

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருக்கும் புகழ்பெற்ற நமீபியா பாலைவனம் உலகின் மாசடையாத பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலைவனம் என்பதால் இங்கே மனிதர்கள் வந்துபோவது என்பது குறைவுதான். ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட ஓவியங்கள், மணல் குன்றுகள் என இந்தப் பாலைவனத்தில் காணப்படும் அதிசயங்கள் ஏராளம், ஆப்பிரிக்காவின் பழைமை மாறாமல் இருக்கும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது நமீபியா பாலைவனம்.

கலபகோஸ் தீவுகள்

ஈகுவாடர் நாட்டின் ஆட்சியின் கீழ் வரும் இது கலபகோஸ் 21 சிறு தீவுகள் அடங்கியது. தென் அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. ஒரு கி.மீட்டருக்கு மூன்று பேர் என்றளவில் மனிதர்கள் அடர்த்தி மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இங்கே மனிதர்களைவிட இகுவானக்கள், வயதான ஆமைகள், டால்பின்கள், கடல் சிங்கங்கள், திமிங்கலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

கலபகோஸ் தீவுகள்


சார்லஸ் டார்வின் ஆய்வு செய்த இடங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாசடையாமலும், பழைமை மாறாமலும் இருப்பதால் இந்தத் தீவின் பெரும்பாலான இடங்கள் யுனெஸ்கோவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன.

பியோர்ட்லேன்ட்

நியூசிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது பியோர்ட்லேன்ட் பகுதி. உலகின் சுத்தமான மாசற்ற பகுதிகளில் மற்றொன்று. இங்கே மக்கள் வசிக்க விரும்பினாலும் வசிக்க முடியாத ஒரு இடம். நியூசிலாந்தின் பழங்குடியின மக்கள் மட்டுமே அங்கே சென்று வேட்டையாடிவிட்டு திரும்புவார்கள். அண்டார்டிகாவுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் அங்கிருந்து வீசும் சுத்தமான காற்று இங்கே வீசும்பொழுது இந்த இடத்தில் பெய்யும் மழைநீர் கூட தரையைத் தொடுவதற்குள் பனிக்கட்டியாக மாறிவிடும் அளவுக்கு குளிர் இருக்கும்.

டெயின்ட்ரி நேஷனல் பார்க்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த பூங்கா 1200 ச.கி.மீ தொலைவுக்குப் பரந்து விரிந்த மழைக்காடுகள் கொண்டது ஆகும்.  இந்தக் காடுகளில் இருக்கும் மரங்கள் 110 மில்லியன் ஆண்டு பழைமையானவை என்பது தனிச்சிறப்பு. அதுமட்டுமின்றி இங்கிருக்கும் தாவர இனங்கள் கூட 2500 ஆண்டுகள் பழைமையானவை.

அட்டகாமா பாலைவனம்

அட்டகாமா பாலைவனம்

சிலியில் இருக்கும் அட்டகாமா பாலைவனம் மற்ற பாலைவனங்கள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமானது. இங்கே மணலை விடவும் உப்புப் படுகைகளும், எரிமலை குழம்புப் படிமங்களும் அதிகமாக இருக்கின்றன. பூமியில் காணப்படும் பாலைவன அமைப்புகளிலேயே சற்று வித்தியாசமான தன்மையைக் கொண்டிருப்பதால் நாசா செவ்வாய் கோளில் இருக்கும் நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இங்கே பரிசோதனைகளை நிகழ்த்தும் இடமாக பயன்படுத்துகிறது. 


டிரெண்டிங் @ விகடன்