Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அருகில் வீடிருந்தும் அநாதை விடுதியில் தங்கிப் படித்தேன்!' - லட்சுமி அம்மாவின் நேர்மை அரசியல்!

லட்சுமி அம்மா

அரசியல் போராட்டங்களே பல விதமான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தந்திருக்கின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்திலிருந்து இன்றைக்கு நடக்கும் மதுக்கடைக்கு எதிரான போராட்டங்கள் வரை பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவுக்கு உண்டு. ஆனால், அவை வரலாற்றில் முறையாக பதியப்படுவதில்லை. அவர்களின் போராட்டக் குணத்தைத் தெரிந்துகொள்ள ஒருவர் நினைத்தாலும் தரவுகள் கிடைப்பதில்லை. தஞ்சாவூர் அருகில், மிகவும் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து, கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்கெடுத்து வரும் லெட்சுமி அம்மா தனது வாழ்க்கையை நூலாக எழுதியிருக்கிறார். லட்சுமி அம்மா எனும் அன்போடு அழைக்கப்படும் அவரை மிகவும் உணர்வுபூர்வமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது 'லட்சுமி என்னும் பயணி' என்ற நூல்.

எளிமையான குடும்பத்தில் பிறந்த லட்சுமிக்கு படிப்பு மீதான ஆர்வத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. ஆனால், அதற்கான குடும்பச் சூழல் இல்லை. அந்த ஊரிலிருந்த பள்ளியில் தானாகவே சேர்வதற்கு சென்றபோது, சீருடையுடன் வாரி அணைத்துக்கொண்டது கிறிஸ்துவப் பள்ளி. தனது சொந்த ஊரில், மிக அருகில் வீடிருந்தும் அனாதை விடுதியில் தங்கிப் படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் லட்சுமி. வீட்டுக்குள் முடங்கி விடாமல் தன்னை மீட்கும் சக்தி, கல்வி மட்டுமே என்பதை உணர்ந்துகொண்டதால் கடும் சிரமத்துடன் படித்தார். எதிர்வரும் எவ்வளவு பெரிய சவாலையும் வெல்லும் துணிவு லட்சுமிக்கு அப்போது கிடைத்ததுதான் போல.

இந்தப் பின்னணியைக் கொண்ட லட்சுமி தன் வாழ்வில் எதிர்கொண்டு, வென்றது சொந்த வாழ்வின் பிரச்னைகளை மட்டுமல்ல. சமூகச் சிக்கல்களையும்தான். சொல்லப்போனால் சமூகச் சிக்கல்களுக்கே அவர் அதிக முன்னுரிமைக் கொடுத்திருக்கிறார். பதின் வயதில் வேலைக்கு சேர்ந்தபோது அங்கு எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தொழிற்சங்கம் துணையோடு வெல்கிறார். ஆண்கள் நிறைந்திருக்கும் பொதுவெளியில் ஒரு பெண் இயங்கத் தொடங்கினால் என்னென்ன சிக்கல்கள் உள்ளதோ அவ்வளவும் வருகின்றன . அது குறித்த துளி அச்சமுமின்றி தன் வழியில் நடக்கிறார். வீட்டிலுள்ள ஆண்களின் உழைப்பில் இல்லாமல் தன் சொந்தக் கால்களில் தன் வாழ்வைத் தீர்மானிப்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த உறுதியே அரசியல் சார்ந்து இயங்க வைக்கிறது. அந்த உறுதியே இடதுசாரி தோழரைத் திருமணம் செய்துகொள்ளுமளவுக்கு உந்தித் தள்ளுகிறது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யில் இருந்த பெ.மணியரசன்தான் (டேவிட்) அந்தத் தோழர். தாலி, மெட்டி இல்லாமல் பகுத்தறிவுத் திருமணம் மிக எளிமையாக நடக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் உள்ளடக்கிய காவிரி டெல்டா, பெரியாரிய, இடதுசாரிய அமைப்புகள் வலுவாக காலூன்றிய பகுதி. இடதுசாரிகள் தலைமறைவு காலத்தில் வாழ்ந்தபோது மக்கள்  தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து அவர்களுக்கு உதவினார்கள். ஏ.எம். கோபு உள்ளிட்டவர்களின் நூல் வழியே இதனை நாம் அறிந்துகொள்ள முடியும். அதற்குக் காரணம் அவர்கள் எளிய மனிதர்களோடு பழகினார்கள். எளிய மனிதர்களின் பிரச்னைக்காக, உரிமைக்காக உடன்நின்றார்கள். லட்சுமி அம்மாவின் இந்நூலைப் படிக்கும்போது அதை நன்கு உணர முடியும்.

லட்சுமி அம்மா

ரேசனின் வழங்கி வந்த அரிசியின் விலை ஒரு ரூபாயிலிருந்து மூன்றரை ரூபாய்க்கு மாற்றியதற்குப் பெண்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்த லட்சுமி அம்மா, தஞ்சையில் இயங்கி வந்த பஞ்சு மில் ஆகஸ்ட் 15 அன்று விடுமுறை விடவில்லை என்றபோது அதனை எதிர்த்தும் களத்தில் நின்றார். அதே நேரத்தில் தான் தங்கியிருந்த பகுதிக்கு ரேசன் கடையும் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க முயற்சி எடுக்கும் நபராகவும் இருந்திருக்கிறார். இந்திராணி நகர் குடிநீர் பிரச்னைக்கு, 'வா நகராட்சிக்குப் போய் தண்ணீர் லாரி கொண்டு வரச் செய்வோம்' எனச் சொன்னபோது, அவரின் தோழி, 'இப்படியெல்லாம் செய்ய முடியுமா?" என வியந்திருக்கிறார். தங்களுடைய பிரச்னை தீர என்ன செய்வது தெரியாதவர்கள் மத்தியில் களப்பணியாற்றியிருக்கிறார். அவர்களுக்குப் போராடுவதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். தனது போராட்டத்திற்கான அளவுகளை ஒருபோதும் லட்சுமி அம்மா வைத்துகொண்டதில்லை.

பனியன் கம்பெனியில், ரெடிமேட் கடையில், ஆயுர்வேத மருந்துக் கடையில் எனத் தொடங்கி மாவு அரைத்துக்கொடுப்பது வரை லட்சுமி அம்மா பார்க்காத வேலைகள் இல்லையென்றே சொல்லுமளவுக்குப் பல வேலைகளைச் செய்திருக்கிறார். அரசியலில் முழு நேர ஊழியரின் மனைவியாகக் குடும்பத்தை நகர்த்துவது என்பது சாகசம்தான். இயல்பான தேவைகளுக்கே சிரமப்பட வேண்டியிருந்தது லட்சுமி அம்மாவுக்கு. மகன் செந்தமிழன் மழலை மொழியில் பேசி மகிழ்வித்துக்கொண்டிருந்தது ஒரு புறம் என்றால் ஆசை மகள் மங்களம் தவிக்க விட்டு போனது பெருந்துயரம். ஆனாலும் மக்களின் உரிமைக்காக தெருவில் இறங்குவதற்கு ஒருநாளும் தயங்கியதில்லை. கை குழந்தையோடு தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற ஒன்றே உதாரணத்துக்குப் போதும்   

குடும்பம் எனும் அமைப்பு பலமாகவுள்ள இந்தியாவில் வாழும் ஒரு பெண் தன் கதையைச் சொல்கிறார் என்றால், அதில், உறவினர்களைத் தவிர்த்து அவர் சந்திக்கும் ஆண்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருக்கும். ஆனால், லெட்சுமி அம்மாவின் சுய சரிதையில் எவ்வளவு மனிதர்கள் வருகிறார்கள். ஆண், பெண் என்ற பேதமுமற்று பழகுகிறார்கள். உதவுகிறார்கள். உதவி பெறுகிறார்கள். பெரும் தலைவர்கள் முதல் வேலைக்கு இடையூறு செய்யும் சக ஊழியர் வரை. அரசியலில் பயணிக்கும் ஒரு பெண்ணுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும். அதன் வழியே மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் சமூகத்தை விளங்கிகொள்ளவும் பெரும் உதவியாக இருக்கும். அரசியல் என்பது அடித்தட்டு மக்கள் பிரச்னைகளைக் கலைவதிலிருந்து தொடங்கப்பட வேண்டியது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது இந்நூல்.

கிராமத்து வாழ்க்கையிலிருந்து சின்ன வயதிலேயே லட்சுமி அம்மா விடுபட்டிருந்தாலும் இன்று வரை கிராமத்து பெண்ணின் வெள்ளந்தி மனத்தோடு அரசியல் புரிதலோடு வாழ்பவராகத்தான் இருக்கிறார். மண்டையை உடைத்துக்கொண்டு விவாதிக்கும் விஷயங்களுக்குக் கூட, எளிமையாகவும் அதன் சாரத்தை உயர்த்தியும் விளக்கம் அளிக்கிறார். உதாரணமாக, 'பெண்ணியம் பற்றிய கேள்விக்கு... "பல பேரு பலவிதமா சொல்றாங்க பெண்ணியத்தை. என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் பெண்களுக்கு நம்ப சமுதாயத்துக்குத் தகுந்தாப்போல நல்ல போராட்ட குணம் வரணும். நாம போராடற விஷயங்கள்ள யாருக்கும் அச்சமிருக்கக் கூடாது. பெண் விடுதலைக்கு நிச்சயம் போராடணும். எப்படிப்பட்ட பெண், எந்தச் சூழல்ல இருந்தாலும் அவங்களை மீட்டு எடுத்துட்டு வரணும்." என்று பதில் தருகிறார்.

அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. அவர்களுக்குச் சிறந்த முன்மாதிரி லட்சுமி அம்மா.

(லட்சுமி என்னும் பயணி -  மைத்ரி பதிப்பகம்,சென்னை)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close