'மாதங்களும் வாரம் ஆகும்... நானும் நீயும் கூடினால்..!' - ஏன் அப்படி? #TimePsychology

‘காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி’ என்று வைரமுத்து எழுதியதும், ‘மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்’ என்று வாலி எழுதியதும் எதனால்?  ‘ஒவ்வொரு நாளும் போறதே தெரியலை. அதுக்குள்ள ஒரு வருஷம் கடந்துடுச்சா, காலேஜ் முடிச்சு இத்தனை வருஷம் ஓடிப்போச்சா, நேத்துதான் பொறந்தா மாதிரி இருந்த குழந்தைங்க அதுக்குள்ள வளர்ந்துட்டாங்களே, எனக்கு இவ்வளவு வயசாகிடுச்சா...' என நேரமும் காலமும் விரைவாகக் கடந்து செல்வதை உணர்ந்து பிரமிக்கிறீர்களா? ஏன் இப்படித் தோன்றுகிறது? எப்போதும் அதே கடிகாரம், அதே 24 மணி நேரம், அதே 60 விநாடிகள்தான். பிறகு ஏன் இப்படி ஒரு பிரமிப்பு?

Time

இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள, பல விஞ்ஞானிகள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், பிரேசில் உடல்நல உளவியலாளர்கள், `மனிதர்கள் எவ்வாறு  `காலம்-நேரம்’ கடப்பதை உணர்கிறார்கள்?' என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதில் 15 வயதினர் முதல் 89 வயதினர் வரை உள்ள 233 ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும், கண்களை மூடி, 120 விநாடிகளை எண்ணும்படி கூறினர். 

A - 15-22
B - 23-29
C - 30-49
D - 50க்கு மேற்பட்ட வயதினர் என்று வயதுவாரியாக அவர்களை ஆய்வுக்காகப் பிரித்தனர். அவர்கள் 120 விநாடிகளை எண்ண எடுத்துக்கொண்ட நேர விவரம் இந்தப் பட்டியலில் உள்ளது.

வயது

120 விநாடிகளை எண்ண எடுத்துக்கொண்ட நேரம்

15 - 22

115 விநாடிகள்

23 - 29

105 விநாடிகள்

30 - 49

110 விநாடிகள்

50 - க்கு மேல்

86 விநாடிகள்

`50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 23-29 வயதுடைய இளையவர்களும் ஏன் நேரத்தை விரைவாக எண்ணி முடித்தார்கள்?' என்ற கேள்வி எழுகிறதல்லவா? இதற்கு உடல்நல உளவியலாளர்கள் தரும் விளக்கம் சுவாரஸ்யமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. `அதற்கு, அவர்களின் வயது மிகமுக்கியக் காரணம்' என்கின்றனர். அதாவது, உங்களின் நேரத்தையும் காலத்தையும் தீர்மானிப்பது உங்களின் வயதுதான் என்கிறார்கள்.  நம்முடைய நேரத்தையும் காலத்தையும் நம் வயது எப்படித் தீர்மானிக்கும், அப்படித் தீர்மானிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். 

இன்றைய இளைய சமுதாயத்தினர், ஆழமான உளவியல் சிக்கல்களைக் கொண்டுள்ளனர். நேரத்தை  இணையத்திலும் ஸ்மார்ட்போன்களிலும் அதிவேகமாகக் கழிக்கிறார்கள். விரைவாக வயதாகிக்கொண்டே வருவதாக சில நேரங்களில் கவலைகொள்கிறார்கள். குடும்பப் பிரச்னைகளை நினைத்து மனதுக்குள் கவலைப்படுகிறார்கள்.  `30 வயதாகிவிட்டது இன்னும் வேலை கிடைக்கவில்லை' என்ற ஏக்கம் பல இளைஞர்களிடம்  காணப்படுகிறது. `வாழ்வில் எப்படி செட்டில் ஆவது, எப்போது செட்டில் ஆவது, வயதாகிக்கொண்டேபோகிறதே!' என்று நினைக்கிறார்கள். நாள்கள் வேகமாகக் கடந்து செல்வதை எண்ணி வருந்துகின்றனர். இவற்றை நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் என்பது மிக முக்கியம்.

காரணம், இவற்றைத் தெரிந்துகொள்வதன் மூலம்தான் உளவியல் சிக்கலில் சிக்கித் தவிப்பதிலிருந்து மனித சமூகம் விடுபடும். ஏனெனில், ஒருவரின் வயது தொடர்பான எண்ணங்கள்தான், அவரின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

மனதுக்குள் தோன்றும் கவலைகளும் அழுத்தங்களும், அதனால் உண்டாகும் பயமும் பதற்றங்களுமே உளவியல்ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இவை, நம் வாழ்நாள்களை அதிகளவில் பாதிக்கின்றன. இதனால்தான் பல நேரங்களில் நாம் காலத்தை இழப்பது போன்று உணர்கிறோம்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ``மூளையில் சுரக்கும் `டோபமைன்' (Dopamine) என்னும் ரசாயன அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே, நமக்குள் வயது தொடர்பான எண்ணங்கள் உருவாவதற்கு அடிப்படைக் காரணம்' என்கின்றனர். ஒருவரின் வயது தொடர்பான எண்ணங்கள்தான் அவரின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

கோடை விடுமுறை, நம் நினைவிலிருந்து நீங்காதது. சிறு வயதில், கோடை விடுமுறை என்பது நீண்ட நாள்கள்கொண்டதாக நமக்குத் தோன்றும். ஆனால், வயது முதிர்வடையும்போது அப்படித் தோன்றுவதில்லை. நம் இளம் வயதில் முதல்முறையாக எதையாவது முயற்சிசெய்தால், நாம் அதன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து மகிழ்கிறோம். அதாவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள எடுத்துக்கொண்ட நேரம், முதல் வேலை, பெற்றோர் இல்லாத முதல் பயணம், பள்ளிக்கூடம் விடுமுறை, முதல் நீச்சல் பயிற்சி, முதல் பாலியல் உறவு... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை நீங்கள் அனுபவித்து ரசித்திருப்பீர்கள். இவை அனைத்தும் உங்கள் நினைவிலிருந்து என்றும் நீங்காதவை. ஆனால், முதிர்ச்சியடைந்துகொண்டே வரும்போது, புதிய அனுபவங்கள் நம்மிடம் இயல்பாகவே குறைகின்றன. எனவே, காலத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பு நம்மிடம் இல்லாமல்போகிறது. நம்மை அறியாமலேயே காலம் வேகமாக நகர்வதாக எண்ணிக்கொள்கிறோம். இதனாலேயே சில அற்புதக் கணங்களை நாம் இழந்துவிடுகிறோம்.  

நேரமும் நாள்களும், நமக்கு வயதாவதையே உணர்த்துகின்றன.  உங்களுக்கு வயதாகிவிட்டது என்று மற்றவர்கள் உங்களிடம் வாதம் செய்தால், அதை நீங்கள் ஏற்க மறுப்பீர்கள், உண்மைதானே? செய்ய முடியாததைக்கூட செய்து முடிக்க எண்ணுவீர்கள், அனைத்தையும் விரைவாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் இயல்பான நேரத்தைக்கூட அதிவேகமாகக் கடந்துவிடுவீர்கள்.

இதை வெகு ஜாலியாகவே கையாளலாம். ‘என்ன... ஒரு வயசு கூடிருச்சா?' என்று உங்கள் பிறந்த நாள் அன்று நண்பன் கிண்டலடித்தால், ஒன்றை நினைவில்கொள்ளுங்கள். கடந்த பிறந்த நாளின்போது அந்த நண்பனுக்கு என்ன வயசோ, அதைவிட ஒன்று அவனுக்கும் கூடியிருக்கும்தானே?  

எளிமையான சில முயற்சிகள் மூலம் நேரத்தைக் கையாளலாம். வார இறுதி நாள்களை நீங்கள் மெதுவாகச் செலவழிக்க விரும்பினால், தொலைக்காட்சியில் நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்; புதிய அனுபவங்களைப் பெறுங்கள்; புதியதாகக் கற்றுக்கொண்டே இருங்கள். ஞாயிறு இரவு அமர்ந்து யோசித்துப்பாருங்கள். வார இறுதி நாள்கள் எவ்வளவு நீண்டது எனப் புரியும். 

நாம் உண்மையில் நேரம் பொறுமையாகக் கழிவதை விரும்புவோமா? இதை நாம் நமக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். காரணம், அதிக மன உளைச்சல், மனச்சோர்வு, தனிமை, துயரம் எனப் பாதிப்படையும் நேரங்களில் நம் நேரம் மிகவும் பொறுமையாகக் கழியும். எனவே, நேரம் நமக்குத் தரும் அனுபவம் மிகவும் வித்தியாசமானது. புதுமைகள் எதுவும் இல்லாமல், செய்ததையே செய்து நேரத்தை முழுமையாகக் கழித்துவிட்டு, `எனக்கு நேரமே இல்லை' எனச் சொல்லப்போகிறோமா அல்லது புதிது புதிதாகக் கற்று ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ந்து அனுபவித்துக் கடக்கப்போகிறோமா என்பதை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். 

இந்த சப்ஜெக்ட்டை கொஞ்சம் ஆழமாக யோசித்துப் படித்தால் உங்களுக்குள் புதைந்துகிடக்கும் பல்வேறுவிதமான திறன்களுக்கான கதவுகள் திறக்கும்.

நேரத்தை ஆள நான் ரெடியாகிவிட்டேன்... நீங்கள்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!