வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (20/05/2017)

கடைசி தொடர்பு:19:12 (20/05/2017)

ஒருவேளை இந்த இடங்கள்ல எல்லாம் வைரஸ் வந்தா...? #VikatanFun

கடந்த ஒரு வார காலமாக கம்ப்யூட்டர் உலகம் மொத்தமும் 'ஐயகோ' என்று அலறுவது 'வான்னாக்ரை' என்ற ரான்சம்வேரைப் பார்த்துதான். ரான்சம்வேர் லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளுக்குள் புகுந்து பிளாக் அண்ட் ஒயிட் காலத்து வில்லன்  போல, 'இவ்வளவு கொடு. இல்லைன்னா, இங்க இருக்கும் டேட்டா மொத்தமும் உனக்கு டாட்டா காட்டிடும்'னு பணம் கேட்டு மிரட்டி பதற வைத்திருக்கிறது. அவ்வளவு ஏன், ஊர் உலகத்துக்கெல்லாம் அருளோடு சேர்த்து லட்டையும் கிப்டாக அள்ளி தரும் திருப்பதி தேவஸ்தானமே ரான்சம்வேரிடம் இருந்து தப்ப முடியவில்லை. இப்படி சகட்டுமேனிக்கு அட்டாக் பண்ணும் ரான்சம்வேர், அடுத்து சில முக்கிய இடங்களில் புகுந்தால்...? 

வைரஸ்

முதல்ல, 'நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்'னு பேசிப் பேசியே கால்நூற்றாண்டு காலமாக ரசிகர்களை டபாய்க்கும் ரஜினிகாந்தின் மெமரி செல்லில் இந்த டேட்டா புகுந்தால், 'வருடத்துக்கு ஒரு முறை 'அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில்' என அவர் பேசுவது தவிர்க்கப்படும். சதா குழப்பத்திலேயே இருக்கும் ரசிகர்களின் மூளைக்கும் ரெஸ்ட் கிடைக்கும். 'பல வருஷ பஞ்சாயத்து முடிவுக்கு வந்துடுச்சு சாமி' என மக்களும் நிம்மதியாவார்கள். காவிரில தண்ணியும், கூவத்துல படகும் ஓடுனாலும் ஓடும், ஆனா ரஜினியோட முடிவு தெரியவே போறதில்லை பாருங்க!

தீபாவுக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கை பார்த்து ஐ.நா சபைக்கே கண் கட்டியது உண்மைதான். ஆனால், 'பக்கத்துவீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரருக்கெல்லாம் அமைப்பில் பதவி தருவதைப் பார்த்து மக்கள் உஷாராகிவிட்டார்கள். ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போவது, திடீரென பிரஸ்மீட் வைப்பது என அநியாயம் செய்கிறார். போதாக்குறைக்கு அவரின் கணவர் வேறு, 'நான்தான் அம்மாவோட வாரிசு' என கிச்சுகிச்சு மூட்டுகிறார். இப்படி மாத்தி மாத்திப் பேசி கடுப்பாக்கும் இவங்க ரெண்டு பேரோட அரசியல் ஆசையையும் அழிக்கிறதுக்கு ஏதும் வைரஸ் இருக்கா?   

பாஸ்ட் பார்வர்டிலேயே படம் எடுத்து தலைச்சுற்றல், மயக்கம் வர வைக்கும் ஹரியின் சினிமா ஆசையை ரான்சம்வேர் தாக்கினால்? சுமோக்களை ஸ்க்ரீன் முழுக்க பறக்கவிடும் அழிச்சாட்டியம் இருக்காது. சூர்யாவும் கண்ணில்படுபவரை எல்லாம் துரத்திக்கொண்டு ஓடமாட்டார். ரன்னிங் ரேஸ் கிடையாது என்பதால் அடுத்தடுத்த பாகங்களுக்கு கன்டென்ட்டே இருக்காது. ஒரிஜினல் சிங்கக் கூட்டமே தெறித்து ஓடுமளவுக்கு கத்தும் சூர்யாவின் டயலாக்குகள் இருக்காது. தியேட்டர் ஸ்பீக்கர்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும். 
 
மதுரை ஆதினம் சும்மாவே மைக் கெடச்சா மணிக்கணக்குல பேசுவார். பாட்டு பாடுவார். ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுவார். யாரையாவது மணிக்கணக்கில் புகழ்ந்து பேசலைன்னா, அவருக்கு பொட்டுத் தூக்கம் கண்ணுல நிக்காது. அப்படிப்பட்ட பேச்சாளர் ஐம்புலன்களையும் அடக்கி இப்போது மௌன விரதம் இருக்கிறாராம். இந்த கேப்புல இந்தியாவின் முன்னணி விஞ்ஞானி செல்லூர் ராஜூவும் அவரைப் போய் பார்த்துட்டு வந்துருக்காராம். இதனால விரதத்தை கலைச்சுட்டும் மறுபடியும் மணிக்கணக்குல யாரையாவது புகழ்ந்து பேச ஆரம்பிச்சுட்டா என்ன பண்ண? அதனால் அவரோட புகழ்ற டேட்டாவை மட்டும் வைரஸ் அழிக்கலாம்.

கால் மணிநேரத்துக்கு ஒருமுறை 'டொட்டட்டொய்ங்' என்ற பி.ஜி.எம்மில் பிரேக்கிங் நியூஸ் போடுவதை இன்னும் சேனல்கள் நிறுத்திய பாடில்லை. தண்ணீர் லாரியில் கூட பிரேக் பிடித்துவிடும் போல. ஆனால் இந்த பிரேக்கிங் நியூஸுக்கு பிரேக்கே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இப்படி கோடை வெயிலிலும் நம்மை கிறுகிறுக்க வைக்கும் பிரேக்கிங் நியூஸ் ஸ்லாட்களை வைரஸ் அழித்தால்...? அப்புறமென்ன தமிழகத்தில் அமைதி டான்ஸ் ஆடுவதாக பிரமை ஏற்படும். அ.தி.மு.க இருக்குற நிலைமைக்கும் உண்மையிலேயே அமைதி எல்லாம் வாய்ப்பில்ல. ஸோ, பிரமை நல்லது.                           
 
இன்னமும் மெகா சீரியல், சோஷியல் மீடியா சண்டைனு நிறைய இடங்கள்ல வைரஸ் வேலையைக் காட்டுனா நல்லாதான் இருக்கும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?


டிரெண்டிங் @ விகடன்