20 தனியார் பள்ளிகளைத் தவிர்த்து அரசுப் பள்ளியை நாடும் அதிசயக் கிராமம்!

அரசுப் பள்ளி

இரு மாதங்களுக்கு முன் அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் கையில் தாம்பூலத் தட்டோடு கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் சென்றனர். எதற்கு வருகிறார்கள் எனக் குழப்பத்துடன் வரவேற்றனர் கிராமத்து மக்கள். 'பள்ளியின் ஆண்டு விழாவை கிராம மக்கள்தான் முன் நின்று நடத்தி தர வேண்டும்' என்ற அழைப்போடு, அழைப்பிதழையும் அளித்தனர் ஆசிரியர்கள். வழக்கமாக பள்ளி ஆண்டு விழா என்றால், மாணவர்களிடம் அழைப்பிதழைக் கொடுத்தனுப்புவதே வழக்கம். அதனால், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைத் தவிர வேறு யாருக்கும் விழா பற்றிய தகவலே தெரியாது. ஆனால், இந்தப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆண்டு விழா அழைப்பிதழைக் கொடுத்தனர். கிராம மக்களும் மகிழ்ச்சியோடு விழாவினை நடத்தி தந்தனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு ஆச்சர்யமான பலன் கிடைத்தது.   

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தவாசல் எனும் சிறிய ஊரில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள்தாம் அவர்கள். ஊரையே அழைக்கும் எண்ணம் எப்படி வந்தது என அந்தப் பள்ளியின் ஆசிரியர் இளவழகனிடம் பேசினோம்.

“இந்த ஊரில் திருமணம், காதுகுத்து, குழந்தைக்குப் பெயர் வைப்பது போன்ற விசேஷங்களுக்கு எங்கள் பள்ளிக்கும் அழைப்பிதழ் மறக்காமல் வந்துவிடும். நாங்களும் தவறாமல் செல்வோம். அதேபோல ஊரில் யாரேனும் இறந்துவிட்டாலும் பள்ளி முடிந்ததும் மாலையுடன் சென்று மரியாதை செலுத்துவோம். அதனால், ஊர் மக்களோடு எங்கள் பள்ளிக்கு நல்ல பந்தம் இருக்கிறது.

அரசுப் பள்ளி

சென்ற வருஷம் சுதந்திரத் தினத்தில் பெற்றோர் சந்திப்பை நடத்தினோம். 'இவ்வளவு நல்ல பள்ளி இருக்க எதற்காக தனியார் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புறாங்க' என்ற என் ஆதங்கத்தைக் கொட்டினேன். அடுத்த  கல்வி ஆண்டில் இந்தக் கிராமத்த்தின் அனைத்துப் பிள்ளைகளும் நமது பள்ளியில் படிக்கும் நிலை வர, என்னால் ஆன முயற்சிகளை எடுப்பதற்கு முடிவு செய்தேன்.

தனியார் பள்ளிகளில் கணினி போன்ற தொழில்நுட்பங்களைக் காட்டி பெற்றோர்களை ஈர்க்கிறார்கள் என்பதால், எனது சொந்த செலவில் 9 கணினிகள், ஸ்பீக்கர், சேர், பட்டன் மைக் என ஒரு லெட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் புரஜெக்டர் வாங்கித் தந்தார். எங்களின் முயற்சியைப் பார்த்து புரவலர்களும் ஆர்வத்துடன் இணைந்தனர். இப்போது மாணவர்கள் ஆசிரியர்பயன்படுத்துவதற்கு 15 கணினிகள் இருக்கின்றன.

தொழில்நுட்பங்களை வசதி மட்டும் போதாது அல்லவா...  மாணவர்கள் ஆங்கிலம் பிழையின்றி கற்க தனிக் கவனம் எடுத்தோம். பொனடிக்ஸ் முறையில் ஈஸியாக ஆங்கிலம் படித்தனர். சரியான உச்சரிப்போடு பேசினர். இதையே எங்கள் பள்ளி ஆண்டு விழாவின் ஒரு நிகழ்ச்சியாக வைத்தோம். அப்போது மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசியதைப் பார்த்து ஊர் மக்கள் ஆச்சர்யப்பட்டனர். அந்நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், தனியார் பள்ளியில் படித்துகொண்டிருந்த தனது மகளை இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

மாவட்ட அளவிலான போட்டிகள் அனைத்திலும் கலந்துகொண்டு பரிசுகளைத் தட்டி வந்திருக்கின்றனர் எங்கள் பிள்ளைகள். எங்கள் மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்திய நேர்மை அங்காடியில் மாணவர்கள் தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்கு உரிய பணத்தை பெட்டியில் போட்டுச் செல்வர். விற்பனை செய்பவர் என்று யாரும் கிடையாது. பொருளுக்கான பணம் இதுவரை ஒருநாளும் குறைந்ததில்லை. அதேபோல, பள்ளித் தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடுகிறோம். அவற்றை சத்துணவுக்கு சமைக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறோம். இதனால் மாணவர்களின் உணவில் கூடுதலாக சத்துள்ள காய்கறிகள் கிடைக்கின்றனர்.

அரசுப் பள்ளி

வழக்கம்போல, இந்த ஆண்டு கோடை விடுமுறையில் பள்ளி ஆசிரியர்கள், பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்குச் சென்றோம். உறவினரைப் போல எங்களை வரவேற்றனர். இந்த ஆண்டு மட்டும் 49 பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். இதற்கு முன்னாள் மாணவர்கள் பெரிதும் உதவுகிறார்கள்.

சென்ற ஆண்டில் கொத்தவாசல் கிராமத்திலிருந்து 25 மாணவர்கள் தனியார் பள்ளிக்குச் சென்று படித்து வந்தனர். இந்தாண்டு அவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்துவிட்டார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அந்த நான்கு மாணவர்களின் பெற்றோரிடம் பேச விருக்கிறோம். நிச்சயம் அவர்களும் எங்கள் பள்ளியை நோக்கி வருவார்கள் என நம்புகிறோம் சுமார் ஐந்தாறு கிலோமீட்டர் செல்வதென்றால் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தவிர்த்து எங்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம். சிறந்த கல்வியை அளிப்பதோடு, மாணவர்களின் பழக்கங்களை நெறிபடுத்தவும் செய்வோம் " என்று உறுதி மின்ன முடித்தார் இளவழகன்

அரசுப் பள்ளியின் ஜீவனை இழந்து விடாமல் காப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!