Published:Updated:

“ஆம்... மெழுகுவத்தி எனும் அதிபயங்கர ஆயுதம் ஏந்தினோம்!” - காவல்துறைக்கு திருமுருகன் காந்தியின் பதில்

“ஆம்... மெழுகுவத்தி எனும் அதிபயங்கர ஆயுதம் ஏந்தினோம்!” - காவல்துறைக்கு திருமுருகன் காந்தியின் பதில்
News
“ஆம்... மெழுகுவத்தி எனும் அதிபயங்கர ஆயுதம் ஏந்தினோம்!” - காவல்துறைக்கு திருமுருகன் காந்தியின் பதில்

“ஆம்... மெழுகுவத்தி எனும் அதிபயங்கர ஆயுதம் ஏந்தினோம்!” - காவல்துறைக்கு திருமுருகன் காந்தியின் பதில்

மெரினா கடற்கரையில், மே 21-ம் தேதி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி' நடைபெற்றது. அப்போது, அவரையும் அவரோடு அங்கு வந்தவர்களையும் போலீஸ் கைது செய்தது. மருத்துவப் பரிசோதனைக்காக திருமுருகன் காந்தியை நேற்று இரவு ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கே  மருத்துவப் பரிசோதனை முடிந்ததும், போலீசார் அவரை புழல் சிறைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது திருமுருகன் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏன்?”

“நினைவேந்தல் நிகழ்வு என்பது பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. உலகின் அனைத்து இனக்குழுக்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமை. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு உலகமெங்கும் நடக்கிறது. அதை, உலக அரசியல் சாசனங்கள் உறுதி செய்கின்றன. இந்த உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலக நீதியாக மற்றும் இயற்கை நீதியாக ஐ.நா சபையும் வரையறை செய்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மெரினா எனும் தமிழர் கடற்கரையில் நிகழ்கிறது. இது கடந்த 7 வருடமாக நிகழ்ந்து வரும் ஒரு பண்பாட்டு நிகழ்வு. இந்நிகழ்வு தமிழீழ மக்களுக்கான மரியாதை செலுத்தும் நிகழ்வாகவே இருக்கிறது. நீர்நிலை அருகில் இறந்தவர்களுக்கு நினைவேந்துவது மரபாக இருந்து வருகிறது”. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“மெரினாவில், இதுபோன்ற பொது நிகழ்வுகளை நடத்த போலீஸ் தடை இருக்கிறதே?”

“இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு 'ஒன்றுகூட தடை' என்று அரசினால் காட்டப்படும் ‘சென்னை மாநகர சட்டம் பிரிவு 41’ என்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கொண்டுவரப்பட்ட 'ஒன்றுகூடலைத் தடுக்கும் சட்டம்'. இந்த அடிமை காலனிய கால சட்டத்தை வைத்து தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மறுக்க முயல்கிறது தமிழக அரசு. இதே மெரினா கடற்கரையில், இறந்த சொந்தங்களுக்காகத் தமிழர்கள் மரியாதை செலுத்துவதும் அன்றாடம்  நடக்கிறது. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோருக்குமான மரியாதையையும் இதே கடற்கரையில், மக்கள் செலுத்திவருகிறார்கள். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் அனுமதி பெற்று நடத்தவேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை. அந்த உரிமையின் அடிப்படையிலேயே நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கமும் ஒருங்கிணைத்தது. இந்தப் பிரச்னைக்கு பின்னால், பி.ஜே.பி இருக்கிறது என்று சந்தேகிக்கிறோம்''.

“பி.ஜே.பி-யை நீங்கள் குற்றம் சாட்டுவது ஏன்?”

“தமிழகத்தின் கட்சிகள் ஒன்றுகூடி சட்டமன்றத்தில், ‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானத்தின் அடிப்படையில், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான நினைவேந்தலை அரசே முன்வந்து நிகழ்த்தி இருக்க வேண்டும். இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆதரித்த கட்சிகள் முன்னெடுத்திருக்க வேண்டிய பொறுப்பினை எளிய மக்கள் முன்வந்து நிகழ்த்தும்பொழுது அதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. ஆனால், தமிழகத்தில் 7 ஆண்டுகளாக நடந்து வந்த நினைவேந்தலை மத்திய பி.ஜே.பி அரசு இப்போது முடக்குகிறது. பலவீனமான தமிழக அரசும் இந்த அழுத்தத்துக்கு அடிபணிந்து நிற்கிறது. தமிழீழ மக்களுக்கு எதிரான கொள்கை கொண்ட பி.ஜே.பி.-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தமிழர்களின் அடிப்படை பண்பாட்டு உரிமையான ‘இறந்தவர்களுக்கு மரியாதை’ செலுத்தும் உரிமையைத் தடுக்க நினைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக் கூட்டத்துக்கு  தமிழக அரசு அனுமதி கொடுக்கிறது. ஆனால், நமது உறவுகளுக்குச் செலுத்தவேண்டிய ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ கூட்டத்துக்கு அனுமதி மறுக்கிறது. விநாயகர் சிலையை மெரினா கடலில், கரைத்து சூழலை நாசமாக்க அனுமதி  கொடுக்கிறார்கள். ஆனால், நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினால், மெரினாவை அசுத்தப்படுத்தி விடுவோம் என்று அனுமதி மறுக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில், நாங்களே மெரினாவைச் சுத்தப்படுத்தியும் கொடுத்தோம். ஆனால், இப்போது தமிழக அரசு சொல்லும் காரணங்கள் அபத்தமானது. ஏதோ உள்நோக்கம் இருக்கிறது”.

“நீங்கள் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வந்ததாக வழக்கு போட்டுள்ளார்களே?” 

''எங்கள் மீது, 'பிரிவு 147 – கலவரம் செய்தது, பிரிவு 148 – ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி கலவரம் செய்தது, பிரிவு 341 – பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது, பிரிவு 506/1 – சட்டவிரோத உள்நோக்கத்துடன் கூட்டத்தைக் கூட்டியது, பிரிவு 188 – அரசு ஊழியரை மதிக்காமல் நடந்து கொண்டது' என்று பல்வேறு வழக்குகளைப் போட்டுள்ளார்கள். தங்களது ரத்தச் சொந்தங்களை இழந்த சோகத்தில், ஏழு ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வந்த அதே மக்கள் மீது மேற்சொன்ன பிரிவுகளில் மோடி - எடப்பாடியின் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. அஞ்சலி செலுத்துவதற்காக நாங்கள் கொண்டு வந்த அதிபயங்கர ஆயுதம் மெழுகுவத்தி. கிட்டத்தட்ட நிராயுதபாணியான எமது தோழர்கள் கண்ணீரையும் அரசியலையும் முழக்கமிட்டு முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போனவர்களுக்குத் தமிழர் கடலில் மரபு வழியிலான நினைவை செலுத்த வந்தவர்கள்தான் கலவரம் செய்தவர்கள், ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தவர்கள், சட்ட விரோத உள்நோக்குடன் கூடியவர்கள், காவல்துறையை மதியாமல் நடந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்''.

“சிறைக்குச் செல்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்?”

“தமிழக அரசின் இந்த பாசிச அடக்குமுறையை அனைத்து ஜனநாயக ஆற்றல்களும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டும். நாங்கள் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறோம். எங்கள்மீது நடத்தப்பட்ட ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்த அரசு பதில் சொல்லியாக வேண்டும். எத்தனை ஊடகங்கள் இந்தத் தாக்குதலைச் சொல்லியதோ அவர்களுக்கு நன்றிகள். தாக்கிய தமிழக அரசு, எங்களைச் சிறைக்கு அனுப்புகிறது. சிறை செல்வது அவமானமில்லை. போராடுவதே தன்மானம். தமிழர் உரிமைக்குப் போராடுவது என்பது சிறைக்கு அனுப்புமளவு குற்றம் எனில் அதை மீண்டும் மீண்டும் செய்வோம்''.