Published:Updated:

‘இந்திரா மக்களாகிய நாம்...’

நானே கேள்வி... நானே பதில்!படம்: கே.ராஜசேகரன்

##~##

''டெல்லி சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுவது குறித்து..?''

''ஒரு காலை இங்கே வைத்து, மற்றொரு காலை அங்கே வைத்து, தாவித் தாவி எதிரிகளை வீழ்த்துவதில் நடிகர் விஜயகாந்த் வல்லவர். ஆனால், அதே உத்தி அரசியலில் அவருக்கு கால் கொடுக்குமா, ஸாரி... கை கொடுக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ஜெ.கண்ணன், சென்னை.

''ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரைத் திட்டுவதற்கும், எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியினரைத் திட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?''

''ஒரே ஒரு வித்தியாசம்தான். எதிர்க்கட்சிக்காரர்கள் ஆளும் கட்சிக்காரர்களைத் திட்டினால், அவதூறு வழக்கில் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதுவே, ஆளும் கட்சி உறுப்பினர் எதிர்க்கட்சிக்காரர்களைத் திட்டினால் அமைச்சர் ஆகி கோட்டைக்குக்கூடப் போகலாம். தமிழ்நாட்டு நிலவரத்தைத்தானே கேட்டீங்க!''  

- கே.ஆனந்தன், தர்மபுரி.

''அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். நீதி..?''

''எங்கோ, எப்போதோ படித்த கவிதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது...

ஒரு
மருத்துவரின் தவறு
ஆறடி மண்ணில்
புதைந்துவிடுகிறது.
ஒரு
நீதிபதியின் தவறோ
ஆறடி உயரத்தில்
தொடங்கிவிடுகிறது!’
- புரிஞ்சதா?''

- முத்தூஸ், தொண்டி.

‘இந்திரா மக்களாகிய நாம்...’

''இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாட்டை எதிர்த்த தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்துக்கும், முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கும் என்ன தொடர்பு?''

''முதலாவது 'சும்மா’... இரண்டாவதுதான் 'அம்மா’!''

- ஆர்.ஆர்.உமா, நெல்லை.

''லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில், 450 கோடி செலவுசெய்து ராக்கெட் விடுவது தேவையா?''

''லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில், தீபாவளியன்று நாம் விடும் பொம்மை ராக்கெட்டுகளின் மதிப்பு அந்த 450 கோடியையும் மிஞ்சும் சாரே... அது தேவையா என்று முதலில் சொல்லுங்கள்!''

- ஜெ.கண்ணன், சென்னை.

''இந்தியர்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் இந்திய அரசின் நலத் திட்டங்களுக்கு நேரு குடும்பத்தினரின் பெயர்கள் சூட்டப்படுவது சரியா?''

''சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 'இந்திய மக்களாகிய நாம்’ என்றுதான் தொடங்குகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அது, 'இந்திரா மக்களாகிய நாம்...’ என மாறிவிடுகிறது. தப்பு எங்கேயோ, அங்கே திருத்த வேண்டும்!''

- சுரா.மாணிக்கம், கந்தர்வகோட்டை.

''ஏன் இப்படி அமைச்சர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா?''

''ஒருவேளை தமிழகத்தின் முதல் அமைச்சரை, இந்தியாவின் பிரதம அமைச்சராக மாற்றுவதற்காகத்தான் இத்தனை பயிற்சிகள் எடுக்கிறாரோ!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

''விஸ்வநாதன் ஆனந்த்..?!''

''நீங்கள் அவரைப் பாராட்ட வேண்டாம்... திட்ட வேண்டாம்.... 'செஸ் விளையாட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டுமா’ என்று விவாதிக்காமல் இருங்கள். அதுவே, அந்த சாம்பியனுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும்!''  

- வி.சங்கர், சென்னை-28.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு   எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!