வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (22/05/2017)

கடைசி தொடர்பு:13:36 (23/05/2017)

மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு முன் ஜான்டி ரோட்ஸுக்கு கிடைத்த அந்த ஸ்பெஷல் பரிசு பற்றித் தெரியுமா?

கோலாகலமாக நடந்த ஐபிஎல் 10-வது சீசனின் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்றது. நேற்று, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்த விஷயம் இது மட்டுமல்ல. அந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸுக்கு, ஆண் குழந்தை பிறந்ததும் ஸ்பெஷல் சம்பவம்தான். 

தென்னாப்ரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜான்டி ரோட்ஸ், ஐபிஎல் முதன்முறையாக கடந்த 2008-ஆம் ஆண்டு ஆரம்பித்த முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருக்கிறார். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை, ஐபிஎல் கோப்பையை வென்றதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் மேல் இருக்கும் பாசம் மற்றும் பற்று காரணமாக, ஜான்டி ரோட்ஸ் தனது முதல் பெண் குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்து அசத்தினார். இந்தியாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இரண்டாவது பிறந்தநாள் வந்தது. அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் ரோட்ஸ். இதற்கு யாரும் எதிர்பாராத வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரி-ட்வீட் செய்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று தனது இரண்டாவது குழந்தை பிறந்ததை ட்விட்டரில் குழந்தை மற்றும் மனைவி புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார் ரோட்ஸ். குழந்தைக்கு நேதன் ஜான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது ட்விட்டரில் தெறி வைரலாக உள்ளது.