வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (26/05/2017)

கடைசி தொடர்பு:10:53 (27/02/2018)

’கற்றதும் பெற்றதும்’-ல் சுஜாதா சொன்ன எவையெல்லாம் நிஜமாகியிருக்கின்றன?

தொழில்நுட்பம் சுஜாதா

90களின் இறுதியில் சுஜாதா அவர்கள் ஒருமுறை எதிர்கால தொழில்நுட்பம் பற்றி கணித்திருந்தார். விரைவில், கையடக்க அளவில் ஒரு மின்னணு கருவி வரும். அது உலகம் முழுவதையும் உள்ளங்கைக்கு கொண்டு வரும் என்றார். அப்போது மொபைல்கள் இருந்தாலும், ஸ்மார்ட்போன்கள் வராத காலம். அவர் கணித்தது அடுத்த 10 ஆண்டுகளில் நிஜமானது. 2007 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் ’கற்றதும் பெற்றதும்’ என்ற தொடரை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அதில், அடுத்த பத்தாண்டுகளில்  டெக்னாலஜியில் என்னென்ன முன்னேற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் எழுதியதில் எவையெல்லாம் இன்று சாத்தியமாகியிருக்கின்றன; எவையெல்லாம் நினைத்ததை விடவும் வேகமாக மாறியிருக்கின்றன என ஒரு ரீகேப்.

”நடக்கவே இயலாதவர்கள் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். காலில் பதிக்கப்பட்ட சென்ஸார்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு, செயல்படுத்தும் ஆணைகள் மூலம் இயல்பாக நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.”

நினைத்ததை விட இத்துறையில் நிறைய ஆச்சர்யங்கள் நடந்திருக்கின்றன. மூளையின் சிக்னலுக்கு ஏற்றபடி செயல்படும் பிராஸ்தெட்டிக் செயற்கைக் கால்களே வந்துவிட்டன. அதுவும் 2013-ம் ஆண்டிலேயே இது சாத்தியாமியிருக்கிறது.

 

 

 

“நேனோட்யூப்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் எஃகைவிடவும் 1000 மடங்கு வலுவானதாக இருக்கும்; எந்த பூகம்பத்தையும் தாங்கும் ”


நேனோட்யூப்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், சுஜாதா குறிப்பிட்டதைப் போல 1000 மடங்கு பலமான கட்டடங்கள் எதுவும் வரவில்லை. வேறு சில தொழில்நுட்பத்தால், பூகம்பங்களைத் தாங்கக்கூடிய கட்டடங்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். என்றாலும், நேனோட்யூப்கள் கட்டடங்கள் இன்னும் சாத்தியமாகவில்லை.

”இன்டர்நெட்டுக்கு புத்திசாலித்தனம் ஏற்பட்டு, நீங்கள் கேட்கும் கேள்வியின் அர்த்தத்தையும் உங்களையும் புரிந்துகொண்டு நெத்தியடியாக தகவல் தரும்.”


செயற்கை நுண்ணறிவைதான்(AI) தான் சொல்லியிருக்கிறார். சிரி, அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட் என ஏகப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் இதை கச்சிதமாக செய்கின்றன. கூகுளில் வாய்ஸ் சர்ச் எப்போதோ வந்துவிட்டது. அதுவே சுஜாதா குறிப்பிட்டதை செய்துவிட்டது. நாம் விரும்பும் விஷயங்களை, அதிகம் தேடும் வார்த்தைகளை சேகரித்து வைத்து, நமக்குத் தேவையானதை சரியாக சொல்லும் கூகுள் சர்ச். ஆக, இதுவும் சாத்தியமாகிவிட்டது.

”செய்தித்தாள்கள் மடிக்கக்கூடிய கம்ப்யூட்டர் வடிவில் வரும். படித்துவிட்டு பழைய பேப்பர்காரனுக்கு போட வேண்டாம். ஏனெனில், மறுநாள் அதே பேப்பர். வேறு செய்தி வரும்”


இதுவும் நடந்துவிட்டது. அமேஸான் கிண்டில் இதைத்தான் செய்கிறது.  சொல்லப்போனால், அனைத்து டேப்லட்களும், மொபைல்களுமே கூட இதைச் செய்கின்றன. கிண்டில் கூடுதல் ஸ்பெஷல். கிட்டத்தட்ட அனைத்து ஊடக நிறுவனங்களும் டிஜிட்டல் தளத்திலும் கால் வைத்துவிட்டன. நாளிதழ் தொடங்கி, மாத இதழ்கள் வரை அனைத்துமே மொபைல் ஆப்ஸ் மூலம் கிடைக்கின்றன. அந்த வகையில் சுஜாதா குறிப்பிட்ட விஷயம் சில ஆண்டுகளுக்கு முன்பே சாத்தியமாகிவிட்டது.

”இந்த வருஷமே குளோனிங் முறைப்படி ஒரு முழுக் குழந்தையை உருவாக்குவார்கள்.”


2002 ஆம் ஆண்டே ஒரு குழந்தையை குளோனிங் முறையில் உருவாக்கியதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை. 2007-ல் தான் சுஜாதா, இதை எழுதியிருக்கிறார். எனவே அதை விட்டுவிடலாம். 2007-க்கு பிறகு குளோனிங் முறையில் மனிதர்கள் உருவாக்கப்படவில்லை. அந்த டெக்னாலஜி சட்டச்சிக்கல்களை உருவாக்கியதால், முயற்சிகள் தொடரப்படவில்லை.

”எதிர்காலத்தில் அப்பாக்கள் வழக்கொழிந்து போய் Artificial gametes என்னும் முதிர்ச்சியடைந்த ஒற்றை செல்கள் இன்டர்நெட்டில் கிடைக்கும். அப்பாவின் தேவையின்றி, பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும்.”

2007க்கு முன்பே Artifical gametes ஆராய்ச்சிகள் வெற்றியடைந்திருக்கின்றன. அவை ஆன்லைன் மூலமே வாங்கும் அளவுக்கு எளிமையாகும் என சொல்லியிருக்கிறார். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்