Published:Updated:

மாட்டிறைச்சித் தடை எதிரொலி... கேரளாவில் 210 இடங்களில் மாட்டிறைச்சித் திருவிழா!

ர.பரத் ராஜ்
மாட்டிறைச்சித் தடை எதிரொலி... கேரளாவில் 210 இடங்களில் மாட்டிறைச்சித் திருவிழா!
மாட்டிறைச்சித் தடை எதிரொலி... கேரளாவில் 210 இடங்களில் மாட்டிறைச்சித் திருவிழா!

நேற்று, இறைச்சிக்காக மாடுகள் விற்கத் தடை விதித்தது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) சார்பில் கேரளாவில் 210 இடங்களில் 'மாட்டிறைச்சித் திருவிழா' நடத்தப்பட்டது.

நேற்று, நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடை செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்தத் தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறைச்சி விற்பனையாளர்கள், தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் இந்த தடை அறிவிப்புக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே கேரள அரசாங்கம் இந்த அறிவிப்பை ஏற்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தடையை நீக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது கேரள அரசு. இந்நிலையில் தான் இந்திய மாணவர் கூட்டமைப்பினர், கேரளாவின் 210 இடங்களில் 'மாட்டிறைச்சித் திருவிழா' நடத்தினர். இந்தத் திருவிழாவில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி, கலந்து கொண்ட அனைவருக்கும் பரிமாறப்பட்டது. 

இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் எம்.விஜின், 'எப்படி ஒருவர் நாம் எதை உண்ண வேண்டும் என்று முடிவெடுக்க முடியும்? ஒரு அரசாங்கம் அதன் மக்கள் ஊட்டச்சத்துடன் இருக்கிறார்களா என்பது குறித்து கவலைப்பட வேண்டும். இந்திய கிராமங்களில் இருக்கும் ஏழ்மையை நீக்க இந்த சட்டத்தைக் கொண்டு வருகிறார்களா? பாசிச சக்திகள் நம் சமையலறையை சூறையாட அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு எதைச் சாப்பிட விருப்பம் இருக்கிறதோ அதைச் சாப்பிடுவோம். பாசிசத்தை ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தத் தடை என்பது பலரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த மாட்டிறைச்சித் திருவிழா நடத்தப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.