Published:Updated:

மாட்டிறைச்சித் தடையை அடுத்து பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் முக்கிய கோரிக்கை...

ர.பரத் ராஜ்
மாட்டிறைச்சித் தடையை அடுத்து பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் முக்கிய கோரிக்கை...
மாட்டிறைச்சித் தடையை அடுத்து பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் முக்கிய கோரிக்கை...

நேற்று, நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடை செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்தத் தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் இந்தத் தடை அறிவிப்புக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

'இறைச்சிதான், பல லட்ச ஏழை மற்றும் எளிய மக்களுக்கு புரதச்சத்தைப் பெறுவதற்கான வழியாக இருக்கிறது. முக்கியமாக தலித்துகளுக்கு. அதுவும் இதைப் போல ஒரு தடை ரம்ஜான் சமயத்தில் அறிவிக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகவே இருக்கும். மேலும், பல மதங்களைப் பின்பற்றுபவர்களும் இறைச்சி உட்கொள்ளுகின்றனர். இந்தத் தடை அமலுக்கு வரும் பட்சத்தில், புரதச்சத்து கிடைக்கப் பெறுவதில் இருந்து மட்டும் மக்களைத் தடுக்காது. தோல் தொழிற்சாலைகளையும் இது பாதிக்கும். நம் நாட்டில் 25 லட்சம் பேர் தொல் தொழிற்சாலையை நம்பி அன்றாட வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் பெரும்பாலனவர்கள் தலித்துகள். 

இதைப்போலவே, இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யும் தொழிலையும் இந்தத் தடையானது பாதிக்கும். இந்தப் புதிய சட்டம் குறித்து மாநிலங்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாதது, மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதாகும். கூட்டாட்சி முறையையும் இந்த மாதிரி நடவடிக்கைகள் பாதிக்கிறது. எனவே இந்தத் தடை அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்' என்று விரிவாக விளக்கிக் கோரிக்கை விடுத்துள்ளார்.