வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (29/05/2017)

கடைசி தொடர்பு:09:20 (30/05/2017)

பிக்பாஸ்ல இவங்க எல்லாம் கலந்துகிட்டா எப்படி இருக்கும்? #VikatanFun

விஜய் டி.வியில் உலகநாயகன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரம் தூள் பறக்கிறது. பதினான்கு நபர்கள், நூறு நாள்கள் ஒரே வீட்டில் அடைந்து இருக்கணும், முப்பது கேமராக்கள் அவர்களைக் கண்காணிக்குமாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பெயர்களை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தைத் தெறிக்கவிடும் சில செலிபிரிட்டிகள் எல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், தமிழகம் கொஞ்சகாலம் நிம்மதியாக இருக்குமேன்னு தோணுச்சு. லிஸ்ட் தர்றேன்...உங்களுக்கும் அப்படி தோணுதான்னு செக் பண்ணுங்க மக்களே..!

பிக்பாஸ்

முதல் ஆளா சுப்பிரமணிய சுவாமியை அந்த வீட்டுக்குள் அனுப்பலாம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நியூஸ் பேப்பர், போன் என்று எந்த சமாசாரமும் தரப்படாது என ரூல்ஸ் இருக்கிறது. அதனால், அவருக்கு நாட்டுநடப்பு தெரியப் போவதில்லை. அதனால் ட்வீட் போட்டு தமிழகத்தைக் கலவர பூமியாக்குவது தவிர்க்கப்படும். போக, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலோடு ஏற்கெனவே லடாய். இதுதான் சாக்கு என கமலும் போட்டுத் தாக்குவார், பார்ப்பவர்களுக்குக் கொண்டாட்டம்தான். 

அடுத்ததாக, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மற்றொரு பிரபலம் பா.ஜ.கவை சேர்ந்த ஹெச்.ராஜா. இவரும் அடிக்கடி கருத்து சொல்கிறேன் பேர்வழி ட்விட்டரில் பஞ்சாயத்து பண்ணுகிறார். டிவி ஷோக்களில் சண்டை போடுகிறார்.  ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி மத்திய அரசின் மாட்டுக்கறி தடை வரை காமாசோமாவென கருத்து சொல்லி கடுப்பாக்கும் அவரை, 'வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் அந்த வீட்டுக்குள் அனுப்பலாம். 
 
அடுத்த போட்டியாளராக கொஞ்சமும் யோசிக்காமல் வைகோவை அறிவிக்கலாம். ஜாமீன் வேணாம் என ஜெம்மென இருந்தவர், ரஜினி வாய்ஸ் கொடுப்பது தெரிந்ததும், 'கேட்டை திற' என வெளியே வந்துவிட்டார். தி.மு.க, அ.தி.மு.கவை ஒழிக்க ம.ந.கூவை அமைத்தது போல, ம.ந.கூவை அழிக்க ரஜினியோடு கூட்டு சேர்ந்தாலும் சேர்வார். இந்த விபரீதம் நடக்காமல் இருக்க அவரைக் கொஞ்ச காலம் உள்ளே அனுப்பி வைக்கலாம். 
 
அகில உலக ஒப்பற்ற விஞ்ஞானி செல்லூர் ராஜூவை கூட இந்த போட்டியில் இழுத்துவிடலாம். வைகை அணையில் தண்ணீர் ஆவியாக விடாமல் தடுக்க தெர்மாகோல் டென்ட் போட்டு பதினாலு லட்சத்தை வீணடித்தார். அடுத்து வங்காள விரிகுடாவுலயும் இதை பண்ணப்போறோம்னு கோடிக்கணக்குல வீணடிச்சா என்ன பண்ணுறது? அவர் அப்படி பில்லைத் தீட்டாம இருக்கணும்னா இந்த ஷோவுக்குத்தான் அனுப்பணும். உள்ளே போனதும் கமல் தீட்டு தீட்டுனு தீட்டுவார்.
 
பெண்களுக்கும் சம சதவிகிதம் கொடுக்கணுமில்ல. அ.தி.மு.கவை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதியை கடைசி ஆளாக சேர்க்கலாம். 'இன்று ஒரு தகவல்' மாதிரி முன்னாடி எல்லாம் கோழி கூவ ஆரம்பிச்ச நேரத்துக்கெல்லாம் மொத்த மீடியாவும், 'இன்னைக்கு மேடம் என்ன சொல்லுவாங்க?' என இவங்க முகத்துக்கு முன்னால மைக்கை நீட்டுன காலம் இருந்துச்சு. ஆனால், இப்போ அமைதியா இருக்காங்க. ஆனால், ஒருவேளௌ இது பாயுறதுக்கு முன்னால பண்ற பதுங்கலா இருந்தா? மடைதிறந்த வெள்ளமாக அவர் மறுபடியும் சொற்பொழிவு ஆத்துறதுக்கு முன்னாடி பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக்கி உள்ளே அனுப்பிடணும். ஆனா உள்ளேயும் ஒரு விவாத நிகழ்ச்சி நடக்கப்போறது உறுதி. 
 
என்ன மக்களே? நான் சொன்ன போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டுக்குள் இருந்தால் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும்?. நினைக்கும்போதே உச்சி மண்டை கசகசன்னு வேர்க்குதே. ஆண்டவா! 


டிரெண்டிங் @ விகடன்