சின்ன மாற்றம்... பெரிய வெற்றி... விக்கிபீடியாவின் அந்த ‘சூப்பர்’ ஐடியா! #Wikipedia | Report Says Wikipedia's conversion from HTTP to HTTPS helped its growth

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (31/05/2017)

கடைசி தொடர்பு:12:37 (31/05/2017)

சின்ன மாற்றம்... பெரிய வெற்றி... விக்கிபீடியாவின் அந்த ‘சூப்பர்’ ஐடியா! #Wikipedia

விக்கிபீடியா மற்றும் கூகுள் பயன்படுத்தாமல் ஒருவர் வெற்றிகரமாக ஒரு நாளைக் கடத்திவிட்டால், அந்த நபருக்கு டேட்டா பேக் முடிந்திருக்கும் என்பது புதுமொழி. அந்த அளவுக்கு இணையம் பயன்படுத்தும் அனைவரின் வாழ்வோடும் இவை இரண்டும் ஒன்றிப் போயிருக்கின்றன. ஆனால், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தணிக்கை என்ற பெயரில் இந்த இரண்டு தளங்களுமே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்திருக்கின்றன. தணிக்கை சிக்கலைச் சமாளிக்க விக்கிபீடியா தொழில்நுட்ப ரீதியில் செய்த ஒரு சின்ன மாற்றம் இன்று அதன் வளர்ச்சிக்கான முக்கியமான காரணியாக மாறியுள்ளது.

விக்கிபீடியா

துருக்கியில் பெண்களின் பிறப்புறுப்பு குறித்த விக்கிபீடியாவின் பக்கம் அந்நாட்டு அரசால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இதே போல், ரஷ்யாவில் கஞ்சா குறித்த பக்கமும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சீனாவில் தற்போது விக்கிபீடியா தளமே முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக தியான்மென் சதுக்கத்தில் மாணவர்களும், தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அரசு ராணுவத் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த 26-வது ஆண்டு விழா நெருங்கும் சமயத்தில்தான், அதாவது 2004 ஆம் ஆண்டு முதன்முதலாக விக்கிபீடியா தளம் சீனாவில் முடக்கப்பட்டது. காரணம், தியான்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து விக்கிபீடியாவில் இருந்த கட்டுரை. இதிலிருந்துதான், சீனாவுக்கும் விக்கிபீடியாவுக்குமான மோதல் போக்கு தொடங்கியது. மேலும், "தங்கள் நாட்டைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்ட பின்பே, இணையத்தில் வெளியிடப்பட வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அதன்பின் சீனா விதிக்கத் தொடங்கியது.

விக்கிபீடியா இணையதளம் சீனாவில் இதுவரை பல்வேறு முறை தடை செய்யப்பட்டு, அதன் பின் தடை நீக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளும் தணிக்கை என்ற பெயரில் விக்கிபீடியாவின் தகவல்களைத் தொடர்ந்து கத்தரிக்கத் தொடங்கின. இதை தடுத்து நிறுத்துவதோடு, இணையம் பயன்படுத்தும் அனைவருக்கும் தனது தகவல்கள் அனைத்தும் சென்றடைய வேண்டும் என விக்கிபீடியா விரும்பியது. 2011 ஆம் ஆண்டில் HTTP (Hypertext Transfer Protocol) ஃபார்மட்டில் தணிக்கை செய்த பக்கங்களை, HTTPS என்ற செக்யூர்ட் பக்கங்களில் படிக்கக் கொடுத்தது விக்கிபீடியா. இதனால் சில நாடுகளில் தணிக்கை காரணமாக நீக்கப்பட்ட பக்கங்களையும், அந்நாட்டில் உள்ளவர்களால் HTTPS ஃபார்மெட்டில் படிக்க முடிந்தது.

இணைய தணிக்கை

HTTPS தளத்தைப் பொறுத்தவரை தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டுவிடும். இதனால், ஒருவர் அந்தத் தளத்தைப் பார்வையிடுவதை மட்டுமே கண்டுபிடிக்க முடியுமே தவிர, அவர் எந்தப் பக்கத்தைப் படிக்கிறார் என்பதைத் தணிக்கை செய்பவர்களால் கண்டறிய முடியாது. இதனால் ஒன்று ஒட்டுமொத்தமாக விக்கிபீடியாவைத் தடை செய்ய வேண்டும் அல்லது அனைத்தையும் தடை இல்லாமல் வழங்க வேண்டிய நிலைக்குப் பல நாடுகளும் தள்ளப்பட்டன. 2015 ஆம் ஆண்டில் இருந்து தனது அனைத்துத் தகவல்களையும் என்க்ரிப்ட் செய்தது விக்கிபீடியா. கொஞ்சம் ரிஸ்க் அதிகம் என்றாலும், விக்கிபீடியா இதைத் துணிந்து தேர்ந்தெடுத்தது. இந்த மாற்றத்துக்குப் பிறகு விக்கிபீடியா பக்கங்களில் அரசினால் செய்யப்படும் தணிக்கைகளின் எண்ணிக்கை முன்பைவிடக் குறைந்துள்ளதாக ஹார்வர்டைச் சேர்ந்த பெர்க்மேன் க்ளெய்ன் சென்டர் (Berkman Klein Center) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. 

முன்னேற்பாடாக விக்கிபீடியா செய்த சின்ன மாற்றத்தால் அதன் இணையதளத்தின் பாதுகாப்பு அதிகரித்ததோடு, அதை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்