நாளைய உலகின் சூப்பர் ஸ்டார்ஸ் இந்த 7 டெக்னாலஜிகள்தான்! #TechnologyNext | These are the 7 technologies which are going to rule the future world

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (31/05/2017)

கடைசி தொடர்பு:18:42 (31/05/2017)

நாளைய உலகின் சூப்பர் ஸ்டார்ஸ் இந்த 7 டெக்னாலஜிகள்தான்! #TechnologyNext

கடைசியாக உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்புக்கு எப்போது அப்டேட் வந்தது? ஓர் ஆண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். எந்த விஷயமும் அப்டேட் ஆவதற்கு ஆகும் காலம் என்பது குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பம் தான் இனி எல்லாம் என்ற நிலை விரைவில் வரும். அந்த வகையில் எதிர்காலத்தில் உலகை ஆளப்போகும் டெக்னாலஜிகள் இவைதாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence):

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் டெக்னாலஜிகள்

நமது தேவையையும், பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான உதவிகளை அதுவே சிந்தித்து கொடுப்பதுதான் AI. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகுள் I/O டெவலப்பர் மாநாட்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவுத்திறன் எனும் வார்த்தைதான். உலக தொழில்நுட்பங்களில் புதுமையாகப் பார்க்கப்பட்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் நாம் உபயோகப்படுத்தும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் வரைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது. கூகுள் தனது அனைத்து தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் புகுத்தப் போகிறது. இது நிச்சயமாக வருங்காலத்தில் டிஜிட்டல் உலகில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2. விர்ச்சுவல் ரியாலிட்டி:

விர்ச்சுவல் ரியாலிட்டி

கற்பனை உலகிற்கு நம்மைக் கடத்திச் செல்லும் தொழில்நுட்பம்தான் விர்ச்சுவல் ரியாலிட்டி. தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டியை உபயோகப்படுத்திப் பல கேம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில மொபைல் போன் நிறுவனங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், தங்கள் சாதனத்தில் புகுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. மொபைல் போன்களின் உற்பத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பதித்த நோக்கியா மொபைல் தயாரிப்புகளில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தது. ஆனால், மீண்டும் மொபைல் தயாரிப்புகளில் அந்நிறுவனம் இறங்கியிருப்பதும், அதில் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

3. சாட்பாட் (Chatbot):

சாட்பாட் (Chatbot)

பொதுவாக மெசெஞ்சர், கூகுள் ஹேங்அவுட், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் பேசிக்கொள்வதைத்தான் 'சாட்' என்கிறோம். மீதம் இருக்கும் 'பாட்' எனும் சொல் ரோபட்டிலிருந்து எடுக்கப்பட்டு மொத்தமாகச் 'சாட்பாட்' எனும் சொல் உருவாக்கப்பட்டது. அதாவது ஓர் இயந்திரத்துடன் சாட் செய்வது. இந்தச் சாட்பாட்டானது, நமது தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு நமக்குப் பதிலளிக்கும். எல்லோரும் hike அப்ளிகேஷன் கேள்விப்பட்டிருப்போம். அதில் இருக்கும் சாட்பாட் பெயர் 'நடாஷா'. இந்த நடாஷா சாட்பாட்டுடன் எதிர் முனையில் யாரும் இல்லாமலே நீங்கள் வழக்கம்போல உரையாடலைத் தொடரலாம். அதுவும் சரியான பதிலைக் கொடுக்கும்.

4. இன்டலிஜென்ட் வெர்பல் இண்டர்பேஸ்(Intelligent Verbal Interface):

இன்டலிஜென்ட் வெர்பல் இண்டர்பேஸ்(Intelligent Verbal Interface)

Intelligent Verbal Interface டெக்னாலஜியானது தற்போதே பலரது ஸ்மார்ட்போனில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆம், நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் கூகுள் அசிஸ்டெண்ட்-ம் Intelligent Verbal Interface தான். கீ போர்டு, மவுஸ் ஆகியவற்றின் உதவி இல்லாமல் நாம் பேசும் வார்த்தையைச் சரியாகப் புரிந்து கொண்டு நமக்குத் தேவையான உதவிகளைச் செய்யும். இதுபோலப் பல பர்சனல் அசிஸ்டெண்ட்களில் இத்தொழில்நுட்பம் இருக்கின்றன. 24 மணி நேரத்தில் பாதியை யாருடனோ டிஜிட்டல் மூலம் சாட் செய்வதில் தான் செலவழிக்கிறோம். எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் எத்தகைய வீரீயம் பெறும் என்பதற்கு இந்த டேட்டாவே போதும்.

5. வெப் அசம்ப்ளி (WebAssembly):

 வெப் அசம்ப்ளி (WebAssembly)

இனிமேல் மொபைலிலோ, கணினியிலோ உபயோகிக்கக்கூடிய அப்ளிகேஷன்கள் அனைத்தும் OS என்பதையும் தாண்டி, அனைத்து பிரவுசரிலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வெப் அசம்ப்ளி டெக்னாலஜி செயல்படும். இணையம்தான் எல்லாமே என்பதை நோக்கமாகக் கொண்டு வெப் அசம்ப்ளி டெக்னாலஜி உருவாக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வாட்ஸ் அப்பை, அந்தந்த OS ல் மட்டுமே செயல்படும். ஆனால், வாட்ஸ் அப் வெப் மூலம் கணினியுடன் இணைத்துக் கொள்ளலாம். இனிமேல் கேம்ஸ், சாட் உள்ளிட்ட அனைத்து அப்ளிகேஷன்களும் இணையத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறு இருக்கும்.

6. ட்ரோன் டெலிவரி (Drone Delivery):

ட்ரோன் டெலிவரி (Drone Delivery)

எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தின் பங்கு மிக உபயோகமானதாக இருக்கும். நமது தேவைகளையோ அல்லது நமக்குத் தேவையான பொருட்களையோ ஆட்களின் உதவி இல்லாமல், ட்ரோன் மூலம் பூர்த்திச் செய்து கொள்ளும் தொழில்நுட்பம்தான் ட்ரோன் டெலிவரி. எதிர்காலத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தைத்தான் பின்பற்றும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமேசான் நிறுவனம் ட்ரோனை உபயோகித்துப் பொருட்களை விற்பனை செய்யச் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

7. மொபைல்:

மொபைல்

இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதே தென்பட ஆரம்பித்துவிட்டன. கணினியில் செய்யும் செயல்களை எல்லாம் இனி மொபைலை கொண்டே செய்யலாம். தற்போதும் அந்த நிலைதான் நீடித்து வருகிறது. ஆனால், இன்னும் எதிர்காலத்தில் அதிகத் தர மேம்பாட்டுடன் மொபைல்கள் வெளிவந்தால் மொபைல்தான் உலகம் என்று மாறும். தனது அன்றாடப் பணிகளைக் கூட மொபைலிலேயே செய்து முடிக்கும் அளவுக்கு எதிர்கால டெக்னாலஜி இருக்கும். 


டிரெண்டிங் @ விகடன்