சட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலும், அதன் இணைப்புக் கல்லூரிகளாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூரில் அமைந்துள்ள சட்டக் கல்லூரிகளிலும், தற்போது தமிழக அரசு விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் பகுதிகளில் புதியதாக அமைக்க உள்ள சட்டக் கல்லூரிகளிலும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் ஐந்தாண்டு பி.ஏ.,எல்.எல்.பி., (ஹானர்ஸ்) படிப்புக்கும், பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம், பி.பி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.ஃபார்ம் போன்ற இளநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்கள் மூன்றாண்டு எல்.எல்.பி படிப்புக்கும் விண்ணப்பிக்கலாம். 

சட்டக்கல்லூரி படிப்பு

வேலூர் அரசு சட்டக் கல்லூரியைத் தவிர, அனைத்துக் கல்லூரிகளிலும் பி.ஏ.எல்.எல்.பி ஐந்தாண்டு படிப்பையும், மூன்றாண்டு எல்.எல்.பி படிப்பையும் பயிற்றுவிக்கிறது. நேரில் விண்ணப்பம்பெற விரும்புபவர்கள், அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் அலுவலகத்திலும், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தைச் சார்ந்த மாணவர்கள் நேரில் விண்ணப்பம்பெற, 250 ரூபாயும், தபாலில் பெற 350 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு நேரில் விண்ணப்பம்பெற 500 ரூபாயும், தபாலில்பெற விரும்பினால் 600 ரூபாயும் கட்டணமாகச் செலுத்தவேண்டும். 

விண்ணப்பத்தைத் தபாலில்பெற விரும்புவோர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் பணம் செலுத்துவதற்கான படிவத்தை டவுன்லோடு செய்து, இந்தியன் வங்கி கிளையில் பணத்தைச் செலுத்திவிட்டு, ஒப்புதல் படிவம், விண்ணப்பம் வேண்டுதலுக்கான கடிதம், எந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் தங்களுடைய சாதிச் சான்றிதழின் நகலை இணைத்து "The Registrar, The Tamil Nadu Dr. Ambedkar Law University, 'Poompozhil', NO. 5, Dr. DGS. Dinakaran Salai, Chennai - 600 028" என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். 

ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தால் 40 சதவிகிதம் மதிப்பெண்ணையும், இதர பிரிவைச் சார்ந்தவர்கள் 45 சதவிகிதம் மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது.

முழுமையாக நிரப்பிய விண்ணப்பத்தை 'The Chairman, Law Admission 2017-2018' எனக் குறிப்பிட்டு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பூம்பொழில், எண் 5, டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சென்னை - 600 028 என்ற முகவரிக்கோ அல்லது அரசு சட்டக் கல்லூரி முதல்வர் அலுவலகத்துக்கோ அல்லது விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 

ஐந்தாண்டு படிப்புக்கு விண்ணப்பிக்கவும் சமர்ப்பிக்கவும் கடைசி நாள் 23.06.2017. மூன்றாண்டு எல்.எல்.பி படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 17.07.2017. மேலும் விவரங்களுக்கு http://tndalu.ac.in/admission17-18/admNotification17-18LawColleges.pdf என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில் அமைந்துள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ., எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.காம்.எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.சி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), போன்ற ஐந்து வருடப் படிப்புகளும், எல்.எல்.பி (ஹானர்ஸ்) மூன்று வருடப் படிப்புக்கும் விண்ணப்பிக்கலாம். 

சட்டக்கல்லூரி படிப்பு

பல்கலைக்கழகத்தில் உள்ள பி.ஏ.எல்.எல்.பி (ஹானர்ஸ்) மற்றும் பி.பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து பிரிவில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.காம்.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு காமர்ஸ் படித்தவர்களும், பி.சி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனப் பிரிவைச் சார்ந்தவர்கள் 60 சதவிகித மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 70 சதவிகித மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும். என்.ஆர்.ஐ மாணவர்கள் 70 சதவிகித மதிப்பெண்ணையும், எல்.எல்.பி படிப்புக்கு 55 சதவிகித மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். 

எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., பி.பி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ், பி.ஃபார்ம் போன்ற இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 55 சதவிகித மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 60 சதவிகித மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும். சட்டப் படிப்பில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்டணம் 1,500 ரூபாய் மட்டுமே.

சட்டக்கல்லூரி படிப்பு

ஏற்கெனவே பி.எல்., / எல்.எல்.பி படித்தவர்கள், எல்.எல்.எம் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதர பட்டப்படிப்பு படித்தவர்கள், மாஸ்டர் ஆஃப் கார்ப்பரேட் லா (எம்.சி.எல்) படிப்புக்கும், ஓராண்டு முதுநிலை பட்டப்படிப்பாக வணிகச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், தகவல்தொழில்நுட்பச் சட்டம், அறிவுசார்ந்த சொத்துரிமைச் சட்டம், தொழிலாளர் சட்டம், மனித உரிமைகள் - கடமைகள் கல்வி, தடய நுண்ணறிவியல் மற்றும் இணையதளப் பாதுகாப்பு, குற்றவியல் சட்டம், தடய அறிவியல், நூலகச் சட்டம், மருத்துவத் துறை சார்ந்த சட்டங்கள், நுகர்வோர் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு, கடல்சார் சட்டங்கள் போன்ற படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் ஆறு மாதச் சான்றிதழ் படிப்பான டாக்குமென்டேஷன் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து முடித்து முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்கள் நேரடியாக விண்ணப்பம்பெற 500 ரூபாயும், தபால் வழியே பெற 600 ரூபாயும் செலுத்த வேண்டும். இதர பிரிவைச் சார்ந்த மாணவர்கள் நேரடியாக விண்ணப்பம் பெற 1,000 ரூபாயும் தபால் வழியே 1,100 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஐந்தாண்டு படிப்புக்கு 19.06.2017, எல்.எல்.பி படிப்புக்கு 30.06.2017, எம்.சி.எல் படிப்புக்கும், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கும் 28.07.2017-க்கு முன்னதாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிடவேண்டும். மேலும், விவரங்களுக்கு http://tndalu.ac.in/admission17-18/admNotification17-18SOEL.pdf என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!