ப்ளஸ் 2 முடித்தாலே ஐ.டி வேலை! - ஹெச்.சி.எல் புதிய முயற்சி

டி துறையில் வேலை பறிபோகிறது எனப் பதறும் வேளையில், `பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஐடி வேலை வழங்கப்படும்' என, ஹெச்.சி.எல் நிறுவனம் அறிவித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக கல்லூரி படிக்கும்போதும் கடைசி செமஸ்டரின்போதும் நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வுசெய்வார்கள். படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் சேர்வார்கள். தற்போது பள்ளியிலிருந்தே பணிக்குச் செல்லலாம் என்ற புதிய மாற்றத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் ஐடி நிறுவனத்தினர்.

வேலை

முதல்கட்டமாக ஹெச்.சி.எல் நிறுவனம், இந்த ஆண்டு 200 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு வருடப் பயிற்சியளித்து, மென்பொருள் பிரிவில் வேலை வழங்க இருக்கிறது. ஓராண்டு பயிற்சியில் ஒன்பது மாதங்களுக்கு வகுப்பு சார்ந்த பயிற்சியும், மூன்று மாதங்களுக்கு நிறுவனத்திலேயே நேரடிப் பயிற்சியும் வழங்க திட்டமிட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் 200 மாணவர்களில் 100 மாணவர்களுக்கு மதுரையிலும், மீதம் உள்ளவர்களுக்கு லக்னோவிலும் பயிற்சி வழங்கப்படும். இதில் மென்பொருளை உருவாக்குவது, டெஸ்ட்டிங் செய்வது, மென்பொருள் சப்போர்ட்டிங் பணிகளுக்கு உதவுவது, மென்பொருள் உள்கட்டமைப்பு, மேலாண்மை சேவைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்படும். 

ஹெச்சிஎல் ஶ்ரீமதி சிவசங்கர்“பயிற்சிக்குப் பிறகு, சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரி மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பல்வேறு திட்டப்பணிகளிலும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இவர்களுக்கு முதல் ஆண்டில் 1.8 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, ஆரம்பத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பயிற்சியில் சேர்ந்து இரண்டு வருடப் பணி அனுபவம் பெற்ற பிறகு தபால் வழியே பட்டப்படிப்பை முடித்துவிடலாம்'' என்கிறார் ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஶ்ரீமதி சிவசங்கர். 

தேர்வில் 85 சதவிகித மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சி.பி.எஸ்.இ கல்விமுறையில் படித்தவர்கள் 80 சதவிகித மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, http://www.hcltss.com/our-programs/class-12/ என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

கேம்பஸ் இன்டர்வியூவில், கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த பிறகே வேலைக்கு அமர்த்தினார்கள்.  இப்போது நிறுவனங்களில் பயிற்சி வழங்க நேரமில்லை என்கிறார்கள். கல்லூரியில் படிக்கும்போது நிறுவனத்தின் தேவைக்குத் தகுந்தாற்போல் கற்றுக்கொள்ளாமல் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் தேவையான விஷயத்தைக் கற்றுக்கொள்ள முடியாமல்போகிறது. பள்ளியிலிருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்குத் தேவையான விஷயத்தை மட்டும் கற்றுக்கொடுத்து நல்ல பணியாளராக மாற்றுவது எளிது என நம்புகின்றன நிறுவனங்கள். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முன்னணி ஐ.டி நிறுவனங்களே களமிறங்கியிருப்பதால், இனிவரும் காலங்களில் அரசு ஐ.டி நிறுவனங்களுடன் இணைந்து இதுபோன்ற பயிற்சி அளிக்க வாய்ப்பு இருக்கிறது. 

ஹெச்சிஎல்

1980-ம் ஆண்டு ஆரம்பித்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி, பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் புதிதாக `பள்ளி மாணவர்களும் ஐடி பணிக்கு வரலாம்' என மாற்றியிருக்கிறார்கள் இன்றைய ஐடி துறையினர். இனிவரும் காலங்களில் பள்ளி மாணவர்கள் முதல், வயது வரம்பில்லாமல் யார் வேண்டுமானாலும் மென்பொருள் உருவாக்கத்தில் இடம்பெறலாம் என்று நிலை வர வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!