வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (07/06/2017)

கடைசி தொடர்பு:07:42 (08/06/2017)

பேசுனா ஜொள்ளு, பேசலைன்னா அம்பி - பையனா பிறந்தது ஒரு தப்பா?

என்னதான் ஆணாதிக்க சமூகமா இருந்தாலும், பசங்களுக்கு இந்த சமுதாயம் வைக்கிற பட்டப்பெயர்கள் இருக்கே. அதெல்லாம் சொல்லி மாளாது. 'இப்படி இருந்தா ஒரு பேரு, அப்படி இருந்தா ஒரு பேரு'னு எந்த பக்கம் போனாலும் கேட் போட்டா நாங்க என்னதாங்க பண்ணுறது? அப்படி எங்களுக்கு காலேஜ்ல வாரி வழங்கப்படுற சில பட்டங்களைப் பாருங்க!

காலேஜ்

நெத்தி நிறைய திருநீறு அடிச்சி, அதுக்கு கீழ அழகா சந்தனம் வச்சி, அதுக்கு நடுவுல அளவா குங்குமத்த பூசி மங்களகரமா காலேஜுக்குப் போனா, 'வந்துட்டான் பூசாரி'னு கிண்லடிப்பாங்க. இல்லன்னா, 'வாங்க சாமியார். எப்ப ஆசிரமம் திறக்கப் போறீங்கனு கேப்பாங்க. சரி கலாய்க்கிறாங்களேனு திருநீறு எதுவும் வைக்காம அப்படியே போனா, 'தூங்கி எந்திருச்சி அப்படியே வந்துட்டியான்னு கேட்டு நோகடிப்பாங்க.

நல்ல புள்ளையா, சமத்தா, கிளாஸ்ல அமைதியா பொண்ணுங்க இருக்குற பக்கமே பார்க்காம உட்கார்ந்துட்டு இருந்தா அம்மாஞ்சினு முத்திரை குத்துவாங்க. இதென்னடா வம்புனு கொஞ்சம் ஜாலியா பேசுனா, 'வாயில இருந்து ஊத்துது பாரு, ஜொள்ளன்னு சொல்லுவாங்க! ஓ மை காட்!

முழுக்கை கட்டம் போட்ட சட்டை போட்டு அதுக்கு மேட்சிங்கா கருப்பு கலர் பேண்ட் உடுத்தி, பளபளனு மின்னுற பெல்ட்டை சொருகி, கையில ஸ்டைலா வாட்ச் கட்டி, 'வாவ்டா'னு நமக்கு நாமளே கண்ணாடில முத்தம் கொடுத்துட்டு போய் நின்னா, 'சார் ஸ்டூடண்ட்தானே? வாத்தியார் மாதிரி வந்துருக்கீங்க'னு நக்கல் பண்ணுவாங்க. சரி எதுக்க்க்க்க்குனு செமி கேஷுவலா காஸ்ட்யூம் செலக்ட் பண்ணி தலையை கலைச்சு விட்டுட்டு நெக் பட்டன் போடாம போன, 'இப்படி இருந்தா படிப்பு வருமா? அரியர்ஸ்தான் ஷேர் ஆட்டோ பிடிச்சு வரும்'னு சாபம் தருவாங்க. நாங்க என்னதாங்க பண்ணுறது? 

வெளியில பசங்களோட க்ரூப்பா நின்னு பேசிகிட்டு இருந்தா, 'பாத்தியா கேங் ஃபார்ம் பண்ணுறதை'னு கண்ணு சிவக்க சொல்லுவாங்க. 'சரி, எதுக்கு வம்பு'னு தனியா உட்கார்ந்து மொபைல்ல கேம்ஸ் ஆடினா, கேர்ள் ப்ரெண்ட் கூட சாட்டிங்கா'னு மனசாட்சியே இல்லாம கேப்பாங்க. எனக்கு கேர்ள் ப்ரெண்ட்? நீ பாத்த....?

ஈவ்னிங் பெல் அடிச்ச உடனே காலேஜ் பஸ்ல போய் உட்கார்ந்தா, 'பாரு க்ளாஸுக்கு வர்றதே லேட், ஆனா முதல் ஆளா கிளம்புது'னு புகார் வாசிப்பாங்க. 'என்னடா இது சத்திய சோதனை, சரி லேட்டா கிளம்புவோம்'னு பார்த்தா 'படிக்கிறதுக்குதான் சோம்பேறித்தனம், கிளம்புறதுல கூடவா? அப்படியே இருந்து கூட்டிப் பெருக்கிட்டு போயேன்'னு சொல்லுவாங்க. அட போங்கப்பா! 

இன்னும் எவ்வளவோ இருக்கு பாஸ். இப்போதைக்கு இது போதும். இந்த சமுதாயத்துல நல்லவனாவும் வாழ முடியாம, கெட்டவனாவும் வாழ முடியாம நம்ம பசங்க படுற பாடு இருக்கே.... அய்யய்யயோ! கேட்டா கடவுளுக்கே கண்ணீர் வரும்.

- மா.விஜய் சூர்யா 

(மாணவ பத்திரிகையாளர்)


டிரெண்டிங் @ விகடன்