‘நான் முதல்வரானால்...’ ஜெயக்குமாரின் சூப்பர் டூப்பர் அறிவிப்புகள்! #VikatanFun | If Jeyakumar become CM - Satire article

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (09/06/2017)

கடைசி தொடர்பு:13:43 (09/06/2017)

‘நான் முதல்வரானால்...’ ஜெயக்குமாரின் சூப்பர் டூப்பர் அறிவிப்புகள்! #VikatanFun

'வருங்கால முதல்வரே...' என எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே ஜெயக்குமாரை வாழ்த்தி அவரது பிறந்தநாளுக்கு பேனர் வெச்சதால்தான் அமைச்சர் பதவியிலிருந்தே அதிரடியா தூக்கப்பட்டார் ஜெயக்குமார். அண்ணனின் விழுதுகள் எனப் பேனர் வைத்த தனது ஆதரவாளர்களை 'நான் கேட்டேனா முருகேசா...' என்பதுபோல் அப்போது பாவமாகப் பார்த்திருப்பார். ஆனால், இப்போது பழம் நழுவிப் பாலில் விழக் காத்திருக்கிறது. 'நிதி அமைச்சர் ஜெயக்குமார், சூப்பர் டூப்பர் முதலமைச்சராகச் செயல்படுகிறார்' என்று சமீபத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்துள்ளார்.  

கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவின் நன்மதிப்பை வித்ட்ராவல் செய்து எம்எல்ஏ., சீட்டையும் பெற்றார். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மீன்வளத்துறையைப் பெற்றார். அப்போது, ஆன்லைன் மீன் விற்பனை போன்ற திட்டங்களையும் கொண்டுவந்து டிஜிட்டல் தமிழ்நாடு உருவாகப் பாடுபட்டார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் முதல்வராகப் பதவியேற்றதும், முக்கியத் தலைக்கட்டுகளில் ஒருவராகிப் போனார் ராயபுரம் ஜெயக்குமார். ஓ.பி.எஸ் தனி அணியாகப் பிரிந்தாலும், சிந்தாமல் சிதறாமல் சின்னம்மா சசிகலா பக்கம் நின்றவர், எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் முக்கியத் துறையான நிதித்துறையின் அமைச்சர் ஆனார். 

நிதித்துறை கைக்கு வந்தது முதலே, கட்சிக்கு உள்துறையானவர் எல்லா விவகாரங்களிலும் ஆஜராகி, தானே முன்வந்து விளக்கம் கொடுத்தார். அண்ணா சாலையில் பள்ளம் விழுந்து, பள்ளத்துக்குள் பஸ்ஸும், காரும் கவிழ்ந்ததற்கு, ஈரப்பதம், வானிலை, வளிமண்டலம் என வானியல் நிபுணர் ரேஞ்சுக்கு இறங்கி ஆளும் அரசுக்கு முட்டுக்கொடுத்தார்.

தி.நகர் சென்னை சில்க்ஸ் தீ விபத்து தொடங்கி, தெருமுக்கு டீ கடையில் டீ ஆறிப்போன கேஸ் வரைக்கும் எல்லாவற்றிற்கும் வான்ட்டடாக வந்து அறிக்கை கொடுத்தார்.

தினகரன் ஜாமீனில் வந்து கட்சிக்குள் நுழையப் பார்க்கும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அமைதியாக இருந்தார். வெகுண்டெழுந்த ஜெயக்குமார் அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி, 'தினகரன் பக்கம் யாரும் போகமாட்டார்கள். தினகரன் கட்சியை விட்டு ஒதுங்கிச் செல்லவேண்டும். கட்சி நலன்தான் முக்கியம்.' என அறிக்கையில் அதிரடி காட்டினார். 'சின்னம்மாதான்யா கட்சி, அவங்கதான் இனி எல்லாமே...போதுமா?' என்று கூவத்தூரில் செய்தியாளர்களிடம் கோபத்துடன் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் பேட்டியளித்தபோது அவரது கருத்துகளை ஆமோதித்துத் தலையாட்டினார்.

'கட்சி, ஆட்சி நலனுக்காக, எனது நிதி அமைச்சர் பதவியை, பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளேன். அனைத்து எம்எல்ஏ-களுக்கும் அம்மாவின் சிறப்பான ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம்' எனத் தெரிவித்து, தான் முதல்வர் பதவிக்குப் புரோமோஷன் ஆவதை சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார். 

ஜெயக்குமார் - jeyakumar

சரி... அரசியலில் நிகழமுடியாதவை என ஒன்றும் இல்லைதானே... இதுவும் நடந்தால் எப்படி இருக்கும்..? 

'ஜெயக்குமார் எனும் நான் தமிழக முதல்வராகப் பதவி ஏற்று ...' எனப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே முதல்வர் கனவால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை நினைத்து மனதுக்குள் கமுக்கமாகச் சிரித்துக்கொள்வார். 

பதவியேற்றதும் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கையெழுத்துப் போடுகிறாரோ இல்லையோ 'பிரிந்து சென்றவர்கள் நம் சகோதரர்கள். அவர்கள் திரும்பவும் கட்சியில் சேர்ந்து 'ஒரு தாய் மக்கள் நாமென்போம்...' எனப் பாட்டுப் பாடும் வரை கழகக் கண்மணிகள் ஓயாமல் பணியாற்றிட வேண்டும்' என உத்தரவு போடுவார். 

'கழகம் எஃகு கோட்டையாக விளங்கும்' எனச் சொன்னவர், எதிர்க்கட்சிகள் உள்ளேவந்து அமளி செய்வதைத் தடுக்குறதுக்காக சட்டசபையையும் எஃகு கோட்டையாகவே டிஸைன் பண்ணச்சொல்லி  உத்தரவிடுவார். 

பட்ஜெட் கூட்டத்தொடருக்கே சூட்கேஸை எடுத்துக்கிட்டு ஜெயலலிதா சமாதிக்குப் போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தவர், முதல்வராகிட்டா ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலகம் வர்றதுக்கு முன்னாடி ஜெயலலிதா சமாதிக்கு ஒரு விசிட்டைப் போடுவார். 

நிதி அமைச்சராக இருந்தபோதே பார்டரைத் தாண்டி எல்லா விவகாரங்களிலும் கருத்து சொன்னவர் முதல்வரானால், பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரி, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கும் சேர்த்து நலத்திட்டங்களை அறிவித்து குதூகலமாவார். 

மீன்வளத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், எண்ணூர் எண்ணெய்க்கசிவை வாளியில் வாரிக்கொட்டியதைப் போல, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் திட்டத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சிறப்பான புதுமையான திட்டங்களைத் தீட்டும் அமைச்சர்களுக்கு அவார்டு தருவார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்