Published:Updated:

சாதா ஆட்டோ... ஓலா ஆட்டோ... என்ன ப்ளஸ்/மைனஸ்?

சாதா ஆட்டோ... ஓலா ஆட்டோ... என்ன ப்ளஸ்/மைனஸ்?
சாதா ஆட்டோ... ஓலா ஆட்டோ... என்ன ப்ளஸ்/மைனஸ்?

‘உங்கள் வழிப் பயணத்தில்தான் எங்கள் வாழ்க்கைப் பயணம் இருக்கிறது’ - இப்படி ஒரு வசனத்தை ஆட்டோவில் எழுதியிருந்தார்கள். ஆனால், ஆட்டோக்காரர்கள் நம் பயணத்தை நேர்மையாக வழிநடத்துகிறார்களா? நம் வழிப் பயணம் சில நேரங்களில் வலி நிறைந்த பயணமாக ஆகிவிடுகிறது. 

‘‘சுத்திக்கிட்டுப் போகணும் சார்.’’
‘‘பீக் ஹவர்ஸ்... செம டிராஃபிக் இருக்கும்.’’
‘‘பெட்ரோல் விலையை ஏத்திக்கிட்டேபோறாங்க. நீங்களே பார்க்கிறீங்கள்ல...’’ - ஆட்டோக்காரர்கள் சொல்லும் சில காரணங்கள் லாஜிக்காக இருந்தாலும், சில ஆட்டோ டிரைவர்களின் அடாவடியைத் தாங்க முடியவில்லை என்றே சொல்கிறார்கள் அனுபவப்பட்டவர்கள்.

“அருப்புக்கோட்டையிலிருந்து வர்றேன் சார். சென்னையில் அஞ்சு வருஷங்களா வேலைபார்க்கிறேன். வடபழநியில்தான் வீடு. நேத்து காலையில 4.30 மணிக்கு கோயம்பேடுக்கு பஸ்ல வந்தேன். வடபழநிக்கு ஆட்டோ பிடிச்சேன். என் பொட்டி, படுக்கையைப் பார்த்துட்டு நான் ஊருக்குப் புதுசுன்னு நினைச்சுட்டார் அந்த ஆட்டோக்காரர். ‘வடபழநியா... அது ரொம்பத் தூரம் போகணுமே சார். 450 ரூபா ஆகும்’னு சொன்னார். நான் 'எங்க ஊர்ல இருந்து வர்றதுக்கே 375 ரூபாதான் ஆச்சு’னு சொன்னேன். ‘போலீஸ் கெடுபிடி அதிகம் சார்... இருட்டு வேற. சுத்தித்தான் போகணும். வேணும்னா 400 ரூபா கொடுங்க’னு என்கிட்டயே பேரம் பேசினார். இத்தனைக்கும் நான் வடபழநி வரைக்கும்கூடப் போகவேண்டியதில்லை. அதுக்கு முன்னாடியே இருக்கும் திருநகர்லதான் வீடு. கோயம்பேட்டிலிருந்து 1.5 கி.மீகூட வராது. அதுக்கு 450 ரூபா கேட்குறாங்க! ரொம்பக் கொடுமைங்க! நான் நடந்தே வீட்டுக்குப் போயிட்டேன்’’ என்று கடுப்பாகச் சொன்னார் கோபாலகிருஷ்ணன்.

பணம் பறிப்பதைத் தாண்டி, இன்னும் சிலர் உச்சகட்டமாக... பேரம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆக்ஸிலரேட்டரைத் திருகிப் பறந்துவிடுவார்கள். அதாவது, ‘நீயெல்லாம் நம்ம ஆட்டோவுக்குச் சரிப்பட்டு வர மாட்டே’ என்பதான தொனி அது. மவுன்ட்ரோட்டிலிருந்து தி.நகருக்கு 150 ரூபாய், சைதாப்பேட்டையிலிருந்து கிண்டிக்கு 200 ரூபாய் எனப் பொத்தாம் பொதுவாகத்தான் அவர்களின் ரேட் இருக்கிறது. 

சரி, இந்தத் தொல்லைகளுக்காகத்தான் மீட்டர் என்னும் ஆப்ஷனைக் கொண்டுவந்தார்கள். ஆட்டுக்குத் தாடி வேஸ்ட்டாக இருப்பதுபோல், ஆட்டோவுக்கு மீட்டர் ‘தேமே’ எனத்தான் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் எந்த ஆட்டோக்காரரும் இப்போது மீட்டர் போடுவதைக் கேவலமாகவே நினைக்கிறார்கள்.

‘‘ஏன், கஸ்டமர் கேட்டா மீட்டர் போட மாட்டீங்களா?’’ என்று தி.நகரில் உள்ள ஆட்டோக்காரரைக் கேட்டேன்.

‘‘மீட்டர்லாம் வேஸ்ட். பெருசா வியாபாரம் இல்லை பாஸ். நாலஞ்சு சவாரிகூட வர மாட்டேங்குது. மக்கள் சும்மா வெட்டி நியாயம் பேசுவாங்க. பெரிய ஹோட்டல்ல எந்தக் கேள்வியும் கேட்காம 50 ரூபாய்க்கு ரெண்டு இட்லி சாப்பிடுவாங்க. ஆனா, ஆட்டோக்காரங்களுக்குக் குடுக்க மட்டும் அழுவாங்க!’’ 

"ஹலோ, மீட்டர் போட்டா, போட்ட காசை எப்படி எடுக்கிறது? காலேஜ், மருத்துவம், அரசியல்னு எவ்வளவோ கொள்ளை நடக்குது. அதெல்லாம் தப்பா தெரியலை... 50, 100-க்கு சர்வே எடுக்க வந்துட்டானுங்க..." என்று டென்ஷன் ஆனார்கள் சிலர்.

விதிவிலக்காக சில நேர்மையான ஆட்டோக்காரர்கள் எங்கேயாவது தென்பட்டாலும், அவர்களின் ஒட்டுமொத்த டென்ஷனுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது ஓலா ஆட்டோ. 

‘‘எங்க பொழப்புலேயே மண்ணை அள்ளிப் போட்டுட்டாங்க சார்’’ என்று வெளிப்படையாக சில ஆட்டோக்காரர்கள் கதறினாலும், ஓலா பக்கம் என்ன நடக்கிறது?

‘‘ரொம்ப நியாயமா இருப்பாங்க. கேட்கிற காசுக்கு மேல ஒரு ரூபாகூட வாங்க மாட்டாங்க!’’ என்று ஓலாவுக்கு பாசிட்டிவ் கமென்ட்கள் வந்தன. அதுவும் டிஜிட்டல் மயமாகிவிட்டதில் ஓலாவுக்கு ஆதரவு இன்னும் பெருகுகிறது.

‘‘என் பொண்ணு காலேஜ் போறா. அவளுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்க பயம். அண்ணாநகரிலிருந்து விருகம்பாக்கம்தான் ரூட். டெய்லி ஓலா ஆட்டோதான் புக் பண்ணுவேன். வெறும் 90 ரூபாதான் வரும். நேவிகேஷன் இருக்கிறதால, அவ எங்கே இருக்கா... ஆட்டோ எந்த இடத்துல டிராஃபிக்ல நிக்குது... இப்படி எல்லா விஷயங்களையும் நான் என் மொபைல்ல இருந்தே பார்த்துப்பேன். என் பொண்ணை நிம்மதியா அனுப்புற திருப்தியைவிட வேற என்ன சந்தோஷம் வேணும்?’’ என்கிறார் மகளைப் பெற்ற ஒரு தந்தை.

‘‘கோயம்பேட்டிலிருந்து பஸ்ல கிண்டி போறதைவிட நான் ஓலா ஆட்டோவைத்தான் தேர்ந்தெடுப்பேன். வெறும் 90 ரூபாகூட வராது.. சீப் அண்ட் பெஸ்ட்... என் சாய்ஸ் ஓலா ஆட்டோதான்!’’ என்றார் பயணி ஒருவர்.

குஸ்காவில் கறி பீஸ் இருப்பதுபோல், சாதா ஆட்டோ பயணங்களில்  எப்போதாவது சில நல்லவர்களைப் பார்க்க முடிவது சந்தோஷம்தான். அதேபோல், ஓலா ஆட்டோவிலும் விதிவிலக்காக சில கடுப்படிக்கும் ஆசாமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கான உதாரணம் இது.

‘‘வணக்கம் சார். என் பேர் காயத்ரி. நான் ஆறு மாசம் கர்ப்பம். தி.நகரில் ஷாப்பிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போறதுக்காக ஓலா ஆட்டோ புக் பண்ணினேன். தி.நகரிலிருந்து அம்பத்தூர் தாண்டி அயப்பாக்கம் ஹவுஸிங் போர்டுல வீடு. ஓலாவில் ஏறிக் கிளம்பினேன். ‘அம்பத்தூர்தானே’னு கேட்டவர் பொறுமையாத்தான் ஆட்டோவை ஓட்டினார். ‘இல்லண்ணா, அம்பத்தூர் தாண்டி அயப்பாக்கம்’னு சொன்னேன். ‘இல்லியே, எனக்கு அம்பத்தூர்னுதான் ரிக்கார்டு ஆகியிருக்கு. அங்கேதான் இறக்கிவிடுவேன்’னு சொன்னார். நான் உடனே ஓலா கஸ்டமர் கேருக்கு போன் பண்ணிச் சொன்னதும், ‘இப்ப எதுக்குமா கஸ்டமர் கேருக்கு போன் பண்றீங்க? என் மேல இப்போ கம்ப்ளெய்ன்ட் ஆகிடும். எனக்கு மெமோ குடுப்பாங்க. உங்களுக்கு அதுதான் சந்தோஷமா!’னு செம டென்ஷனாகிட்டார். 

இப்போ அவர் வண்டி ஓட்ற ஸ்டைலே மாறியிருந்திருச்சு. செம ஸ்பீடா கட் அடிச்சு ஓட்டினார். ‘கன்சீவா இருக்கேன். ஸ்லோவா போங்க’னு சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை டிரைவர். தாறுமாறா டிரைவ் பண்ணினார். எனக்கு ரொம்ப பயம். கீழே விழுகிற மாதிரிதான் வண்டி ஓட்டினார். ‘இறக்கிவிட்டுடுங்க. நான் வேற ஆட்டோவுல போயிடுறேன்’னு சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை அவர். ‘அம்பத்தூர் வந்துடுச்சு இறங்குங்க’னு சொன்னார். ‘அம்பத்தூர் இல்லீங்க... அயப்பாக்கம். இன்னும்நாலு கி.மீ போகணும்’னு சொன்னேன். ‘என்னம்மா உங்களோட ரோதனையாபோச்சு’னு வலுக்கட்டாயமா என்னை இறக்கிவிட்டார். அப்புறம் வேற ஆட்டோ பிடிச்சு 100 ரூபா கொடுத்து வீட்டுக்குப் போனேன்!’’ என்று திகில் கதை மாதிரி சொன்னார் காயத்ரி எனும் பெண்.

காயத்ரிக்கு நடந்தது நூற்றில் ஒன்றுதான். இருந்தாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், இந்த ஒற்றைச் சம்பவம் மூலம் ஓலா ஆட்டோ மீது இருந்த நம்பிக்கையும் காயத்ரி போன்ற பெண்களுக்குப் போய்விட்டது. ஓலா ஆட்டோவோ, சாதா ஆட்டோவோ எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.